அன்பானவர்களே, "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினாலே நமக்கு ஜெயங்கொடுக்கிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" (1 கொரிந்தியர் 15:57) என்ற வாக்குத்தத்தத்தை உங்களோடு பகிர்ந்துகொண்டு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். ஆகவே, இயேசுவையே நோக்கிப் பாருங்கள்; அவர் உங்களுடன் இருப்பார்; வாழ்வின் எப்பக்கத்திலும் உங்களுக்கு வெற்றியை அருளிச்செய்வார். ஆண்டவர் தரும் வெற்றியானது, முழுமையான வெற்றியாகும். உங்கள் எதிரிகளை ஜெயிப்பீர்கள். இந்த எதிரிகள் வெவ்வேறு வடிவங்களில் வரலாம். உங்கள் வீட்டார் சிலர் எதிரிகளாக வரக்கூடும் (மீகா 7:6); நீங்கள் இயேசுவை பின்பற்றுவதாலேயே சிலர் உங்களை வெறுக்கலாம் (யோவான் 15:18). இன்னும் சிலரோ எக்காரணமுமின்றி பொறாமையினால் உங்களை வெறுக்கலாம் (சங்கீதம் 69:4). ஆனாலும், நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படிந்து, மற்றவர்களை மன்னித்து, அவருக்கு நன்றியாய் இருந்தீர்களானால் எதிரிகளின் பெலம் ஒன்றுமில்லாமல் போகும்.
உங்களுக்கு நேரிடும் சோதனைகளையும் ஜெயிப்பீர்கள். உங்கள் வாழ்க்கையில் உபத்திரவங்கள் அதிகரிப்பதுபோல தோன்றினாலும், இயேசுவின் மாறாத அன்புமீது நீங்கள் நம்பிக்கை வைத்தால், உபத்திரவங்களுக்கு மேலாக எழும்புவீர்கள். "தேவனால் பிறப்பதெல்லாம் உலகத்தை ஜெயிக்கும்" (1 யோவான் 5:4) என்று வேதம் கூறுகிறது. உங்கள் இருதயத்தை பயத்தினால் துக்கத்தினாலும் நிரப்புவதற்கு பிசாசு முயற்சிக்கலாம்; ஆனால் தேவ அன்பு உங்களுக்குள் இருந்தால், எந்த உபத்திரவமும் உங்களை மேற்கொள்ள முடியாது. மட்டுமல்ல, பொல்லாத ஆவிகளையும் ஜெயிப்பீர்கள். சத்துருவின் நோக்கத்தை, "திருடன் திருடவும் கொல்லவும் அழிக்கவும் வருகிறானேயன்றி வேறொன்றுக்கும் வரான்" (யோவான் 10:10) என்று வேதம் வெளிப்படுத்துகிறது. இயேசு, "அவைகளுக்கு ஜீவன் உண்டாயிருக்கும்படி நான் வந்தேன். அதை பரிபூரணமாக பெற்றுக்கொள்ளுங்கள்" என்று கூறுகிறார்.
நம்மை தாக்குவதற்கு சாத்தான் பல்வேறு உபாயதந்திரங்களை பயன்படுத்துகிறான். அவன் நம்மை சோதிக்கிறான்; நம்முடைய விசுவாசத்தை பெலவீனப்படுத்துகிறான்; தேவனுடைய அன்பை நம்மை சந்தேகிக்கப்பண்ணுகிறான். அவனுடைய உபாயங்கள் கண்டுபிடிக்க இயலாதவை. அவை உலக ஆசைகளுக்கும் லௌகீக காரியங்களுக்கும் நேராக நம் இருதயத்தை இழுக்கின்றன. நம்மை இயேசுவை விட்டு பிரிப்பதே அவனுடைய ஒரே நோக்கமாகும். ஆனால், சத்துரு எந்த அளவுக்கு திருடவும் கொல்லவும் அழிக்கவும் முயற்சிக்கிறானோ அவ்வளவு அதிகமாக இயேசு நம்மை தம்முடைய பரிபூரண ஜீவனால் நிரப்புகிறார். நமக்குள் இருக்கும் அவருடைய வல்லமை, எல்லா தாக்குதல்களையும் மேற்கொள்ள நமக்கு உதவுகிறது. ஆகவே, உங்கள் கண்கள் இயேசுவின்மேலேயே இருக்கட்டும். அவருடைய சுபாவத்தை நீங்கள் காண்பிக்கும்போது, விரோதிகளால் நீங்கள் அசைக்கப்படுவதில்லை; பிசாசின் தந்திரங்களால் வஞ்சிக்கப்படுவதில்லை. மாறாக, எல்லா இக்கட்டுக்கும் மேலாக நீங்கள் உயர்ந்து, எல்லாவற்றிலும் ஜெயம்பெறுவீர்கள். அன்பானவர்களே, தேவனுடைய ஆசீர்வாதம் உங்கள்மேல் மழையாக பொழிகிறது. அவருடைய வாக்குத்தத்தங்களைக் கொண்டு தைரியமாக நடந்திடுங்கள்; அவர் தரும் வெற்றி உங்கள் வாழ்வில் விளங்கட்டும்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என்னுடைய இரட்சகராகிய இயேசு கிறிஸ்துவின் மூலம் நீர் எனக்கு தந்திருக்கிற வெற்றிக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எதிரிகள் எனக்கு விரோதமாக எழுந்தாலும் உம்முடைய மகத்தான வல்லமை என்னை பாதுகாத்து, விடுவிக்கும் என்று நம்புகிறேன். உமக்குக் கீழ்ப்படிந்து நடக்கவும், மற்றவர்களை மன்னிக்கவும், உம்பேரில் நன்றியறிதலுடன் இருக்கவும் எனக்கு உதவும். உபத்திரவங்கள் பெருகும்போது, நான் உம்மால் பிறந்தவன்(ள்) என்றும், உலகத்தை மேற்கொள்ளுவேன் என்றும் எனக்கு நினைவுப்படுத்தும். உம்முடைய பூரண அன்பு என் இருதயத்தில் தங்கி, என்னுடைய பயங்களை, துக்கத்தை துரத்துவதாக. தகப்பனே, சத்துருவின் சதியாலோசனைகளிலிருந்து என்னை பாதுகாத்துக்கொள்ளும். உலக இன்பங்களில் மூழ்கிவிடாமல் என் இருதயத்தை பாதுகாத்து, என் கண்கள் இயேசுவின்மேல் மாத்திரமே இருக்கும்படி செய்யும். கிறிஸ்து எனக்கு வாக்குப்பண்ணியிருக்கும் பரிபூரண ஜீவனால் என்னை நிரப்பி, இருளின் சங்கிலிகளை உடைத்தருளும். நான் பேசுகிறவற்றிலும், செய்கிறவற்றிலும் உம்முடைய சுபாவத்தை வெளிப்படுத்தி, பூரண ஜெயத்துடன் விளங்கப்பண்ண வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.