அன்பானவர்களே, 2025ம் ஆண்டுக்குள் நாம் அடியெடுத்து வைக்கும் வேளையில், தேவனுடைய இருதயத்திலிருந்து வந்த இந்த தீர்க்கதரிசன செய்தியை உங்களோடு பகிர்ந்துகொள்வதில் மகிழ்ச்சியடைகிறேன். இது சாதாரணமான இன்னொரு ஆண்டாக மட்டும் அமையப்போவதில்லை. தேவனுடைய ஆசீர்வாதத்தின் பெருமழை உங்கள்மேல் பொழிகிற, புதியதொரு காலத்தின் தொடக்கமாக அமையும். "நான் ஏற்றகாலத்திலே மழையைப் பெய்யப்பண்ணுவேன்; ஆசீர்வாதமான மழை பெய்யும்" (எசேக்கியேல் 34:26)என்பதே இந்த ஆண்டுக்கு தேவன் தருகிற வாக்குத்தத்தமாகும். இது நீங்கள் நம்பிக்கையுடன் செய்யவேண்டிய அறிக்கையாகும். உங்கள் புலம்பலின், பஞ்சத்தின், கலக்கத்தின் நாட்கள் முடிவுக்கு வருகின்றன. பரிபூரண சந்தோஷத்தின், சீர்ப்படுத்துதலின், கனிநிறைந்த காலம் சமீபித்திருக்கிறது. ஆண்டவர் தம் வாக்குத்தத்தங்களை நிறைவேற்ற உண்மையுள்ளவராயிருக்கிறார்; ஆகவே, களிகூருங்கள்.
வேதாகமத்தில் மழை பெரும்பாலும் ஆசீர்வாதங்களை, புதுப்பித்தலை, பரிபூரணத்தை குறிக்கிறது. பஞ்சகாலத்திற்குப் பிறகு, விடாய்த்த பூமிக்கு மழை புத்துயிர் அளித்து, நம்பிக்கையை கொடுக்கிறது. "நீர் போம், போஜனபானம்பண்ணும், பெருமழையின் இரைச்சல் கேட்கப்படுகிறது" (1 இராஜாக்கள் 18:41) என்று எலியா தீர்க்கதரிசி அறிவிக்கும் சம்பவம் இதை நேர்த்தியாக விளக்குகிறது. அவ்வண்ணமே, உங்கள் வாழ்க்கையில் வறண்டு, பலன் கொடாதிருக்க பகுதிகளில் 2025ம் ஆண்டில் தமது ஆசீர்வாதங்களை பொழிவதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார். உறவுகளோ, வேலையோ, ஆரோக்கியமோ, ஆவிக்குரிய வாழ்வோ எதுவாக இருந்தாலும் தேவனுடைய ஆசீர்வாதமான மழை உங்களுக்கு புத்துயிர் அளித்து, புதுப்பிக்கும்.
பலவேளைகளில், பஞ்சகாலத்திற்கு பின்னர் பரிபூரணம் வரும். எலியாவின் நாட்களில், ஜனங்கள் தேவனை விட்டு புறம்பே சென்றதால் தேசத்தில் கடும் பஞ்சம் ஏற்பட்டது. அவர்கள் உண்மையற்றவர்களாக இருந்தபோதிலும், தேவனுடைய இரக்கம் மாறாததாயிருந்தது. எலியா ஜெபித்தபோது, ஒருமுறையல்ல; இருமுறையல்ல; ஏழு முறை திடமான விசுவாசத்துடன் ஜெபித்தபோது, தேவன் பதில் அளித்தார். அவர் வானத்தை திறந்தார். பெருமழை பொழிந்தது. பஞ்சம் முடிந்தது; பூமி புத்துயிர் பெற்றது. 2025ம் ஆண்டிலும், உங்கள் வாழ்வில் காணப்படும் எல்லா பஞ்சமும் முடிந்துபோகும். நீங்கள் சமாதானத்துக்காக, சுகத்துக்காக, சீர்ப்படுதலுக்காக காத்திருந்தால், "வெட்டுக்கிளிகளும்... பட்சித்த வருஷங்களின் விளைவை உங்களுக்குத் திரும்ப அளிப்பேன்" (யோவேல் 2:25)என்ற வாக்குத்தத்தத்தை தேவன் உங்களுக்கு அளிக்கிறார். அவரை நம்புங்கள். அவர் உங்கள் துக்கத்தை சந்தோஷமாகவும், உங்களை குறைவை நிறைவாகவும், உங்கள் பஞ்சத்தை, செழிப்பாகவும் மாற்றுவார்.
வேதாகமத்தில் குறிப்பிடப்பட்டுள்ள எலியாவை குறித்த இந்த சம்பவம், ஊக்கமும் விசுவாசமும் நிறைந்த ஜெபத்தை தொடர்ந்து அற்புதம் நடக்கும் என்று நமக்கு நினைவுப்படுத்துகிறது. எலியா, தேவனுடைய வாக்குத்தத்தத்தை அறிவித்த உடனே மழை வந்துவிடவில்லை. எலியா, தேவனுடைய வார்த்தையை முற்றிலும் விசுவாசித்து, முழங்காற்படியிட்டு ஜெபித்தபோதே வந்தது. அவன் திடவிசுவாசத்துடன் இடைவிடாமல் ஜெபித்தான் (1 இராஜாக்கள் 18:42). அவ்விதம் இந்த ஆண்டில் நீங்களும் தேவனை முழு மனதுடன் தேடினால், அவரது கரம் உங்கள் வாழ்வில் வல்லமையாக அசைவாடுவதை காண்பீர்கள். "நீதிமான் செய்யும் ஊக்கமான வேண்டுதல் மிகவும் பெலனுள்ளதாயிருக்கிறது" (யாக்கோபு 5:16)என்று வேதம் கூறுகிறது.
தேவன் தம்முடைய பிள்ளைகளின் கூப்பிடுதலுக்கு பதில் தர விரும்புகிறார் என்பதை அறிந்தவர்களாய், ஊக்கமாக ஜெபிப்பதற்கு உங்களை அர்ப்பணியுங்கள். அவருடைய சித்தத்திற்கு உங்கள் உள்ளம் இசைந்திருக்கும்போது, அவர், தாம் நியமித்தவேளையில் தமது ஆசீர்வாதங்களை உங்களுக்கு தந்தருளுவார். புத்தாண்டுக்குள் நுழையும் இவ்வேளையில், விசுவாசமும் எதிர்பார்ப்பும் நிறைந்த இருதயத்தோடு அவருடைய சித்தத்துடன் இசைந்துகொள்ளுங்கள். "தங்கள் தேவனாகிய கர்த்தராயிருக்கிற நான் தங்களோடே இருக்கிறதையும்... அவர்கள் அறிந்துகொள்வார்களென்று கர்த்தராகிய ஆண்டவர் சொல்லுகிறார்" (எசேக்கியேல் 34:30)என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. எவ்வித இக்கட்டுகள் உங்களுக்கு எதிர்ப்பட்டாலும் தேவன் உங்களுக்கு முன்னே செல்வார்; உங்களை பாதுகாப்பார்; தம்முடைய ஆசீர்வாதமான மழையை உங்கள்மேல் பொழியப்பண்ணுவார். அவருடைய கிருபையை நம்புங்கள்; அவருடைய பலத்த கரம் கிரியை செய்வதை காண்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நான் 2025ம் ஆண்டுக்குள் அடியெடுத்து வைக்கிறேன். ஆசீர்வாதமான மழை பெய்யும் என்று நீர் வாக்குப்பண்ணியிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, நீர் உண்மையுள்ளவராயிருக்கிறீர்; உம்முடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. என் வாழ்வில் வறண்டுபோய், விடாய்த்துப்போய் இருக்கும் எல்லா பகுதிகளிலும் உம்முடைய பரிபூரணமான மழையைப் பெய்யப்பண்ணும். எனக்கு புத்துயிர் தாரும்; என்னை புதுப்பியும்; இழந்துபோன எல்லாவற்றையும் திரும்ப தந்தருளும். இந்த ஆண்டானது சமாதானத்தின், சந்தோஷத்தின் ஆண்டாக, கனி நிறைந்த ஆண்டாக இருப்பதற்கு அருள்செய்யும். இடைவிடாமல் ஜெபிக்கவும், உம்முடைய ஏற்றவேளையின்மேல் நம்பிக்கை வைக்கவும் என் விசுவாசத்தை பெலப்படுத்தியருளும். உம்முடைய பரிசுத்த ஆவியானவர், என் ஆவியை புதுப்பித்து, எல்லா இக்கட்டுகளின் நடுவிலும் எனக்கு வழிகாட்டுவாராக. தகப்பனே, வெட்டுக்கிளிகள் பட்சித்த ஆண்டுகளின் பலனை எனக்கு தருவதாக சொன்ன வாக்குத்தத்தத்தை நிறைவேற்றும். இந்தப் புதிய ஆண்டுக்குள் நான் செல்லும்போது, உம்முடைய சமுகம் என்னுடன் இருப்பதாக. உமக்கே சகல மகிமையையும் கனத்தையும் துதியையும் செலுத்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.