அன்பானவர்களே, "நீங்களே கிறிஸ்துவின் சரீரமாயும், தனித்தனியே அவயவங்களாயுமிருக்கிறீர்கள்" (1 கொரிந்தியர் 12:27) என்று வேதம் கூறுகிறது. நாம் கிறிஸ்துவின் சரீரத்தின் உறுப்பாக, அவருக்குள் மறைந்திருக்கிறோம் என்பதை அறியும்போது எவ்வளவு ஆச்சரியமாக இருக்கிறது!
எந்த ஊழியப்பணியும் நன்றாக நடப்பதற்கு, ஊழியத்தின் வெவ்வேறு பணியாளர்கள் ஒன்றாய் இணைந்து உழைப்பது அவசியமாயிருக்கிறது. தேவன் குறிப்பிட்ட பணிகளை நிறைவேற்றும்படி நம் ஒவ்வொருவரையும் விசேஷித்தவண்ணம் வனைந்திருக்கிறார்;ஒருமனமாய் செயல்படும்படி நமக்கு வெவ்வேறு வரங்களை கொடுத்திருக்கிறார். சிலர் தங்களுக்கு மிகப்பெரிய வரம் இருப்பதாக பெருமையாக பேசிக்கொள்ளக்கூடும்; இன்னும் சிலர் தங்களுக்கு இருக்கிற வரம் குறைவுபட்டது என்று நினைக்கக்கூடும். அன்பானவர்களே, அப்படி யோசிக்கக்கூடாது. ஒவ்வொரு வரமும், அது பெரிதாக அல்லது சிறிதாக காணப்பட்டாலும், தேவனுடைய திட்டத்தில் முக்கியமானதாகும். தேவன் ஒரு நோக்கத்துடன் உங்களை இந்த ஊழியத்தில் வைத்திருக்கிறார்; தம்முடைய சித்தத்தின்படி வரங்களை அளித்திருக்கிறார். பரிசுத்த ஆவியானவர் ஒருவரே. ஆனால், ஆவிக்குரிய வரங்கள் அநேகமாயிருக்கின்றன. பரிசுத்த ஆவியானவரே அவரது தெரிவின்படி நம் ஒவ்வொருவருக்கும் அவற்றை பகிர்ந்துகொடுத்து, வரங்களை நன்றாக பயன்படுத்துவதற்கு நம்மை பெலப்படுத்துகிறார்.
"ஒருவனுக்கு ஆவியினாலே ஞானத்தைப் போதிக்கும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே அறிவை உணர்த்தும் வசனமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே விசுவாசமும், வேறொருவனுக்கு அந்த ஆவியினாலேயே குணமாக்கும் வரங்களும், வேறொருவனுக்கு அற்புதங்களைச் செய்யும் சக்தியும், வேறொருவனுக்குத் தீர்க்கதரிசனம் உரைத்தலும், வேறொருவனுக்கு ஆவிகளைப் பகுத்தறிதலும், வேறொருவனுக்குப் பற்பல பாஷைகளைப் பேசுதலும், வேறொருவனுக்குப் பாஷைகளை வியாக்கியானம்பண்ணுதலும் அளிக்கப்படுகிறது" (1 கொரிந்தியர் 12:8-10) என்று வேதத்தில் வாசிக்கிறோம். ஆண்டவர் இந்த ஒன்பது வரங்களையும் ஒவ்வொருவருக்கும் தனித்தனியாக பகிர்ந்தளிக்கிறார். ஆகவே, தேவன் உங்களுக்குக் கொடுத்திருக்கும் வரத்தை ஒளித்து வைக்காதிருங்கள்; அலட்சியம் பண்ணாதிருங்கள். நீங்கள் அதைப் பயன்படுத்தாமலிருக்கும்போது, கிறிஸ்துவின் சரீரம் முழுவதும் பாடுபடுகிறது. சரீரம் உங்களைச் சார்ந்து இருக்கிறது.
ஆண்டவருக்கு ஊழியம் செய்யும் வாய்ப்பு வரும்போதெல்லாம் உங்கள் வரத்தை பயன்படுத்துங்கள். நான் முதன்முதலாக ஊழியத்திற்குள் வரும்போது, மிகவும் பெலவீனமாகவும், நிச்சயமுமில்லாத நிலையையும் உணர்ந்தேன். ஆகவே, என் தகப்பனாராகிய சகோ. தினகரனை ஜெபிக்கும்படி கேட்டுக்கொண்டேன். அன்று ஆண்டவர் என்னிடம், "என் மகளே, நான் பெலவீனமாக இருக்கிறேன் என்று கூறாதே. நான் உனக்குத் தந்திருக்கும் வரங்களை எவ்வளவு அதிகமாய் பயன்படுத்துகிறாயோ அவ்வளவு பெலனடைவாய்," என்று தீர்க்கதரிசனத்தின் மூலம் பேசினார். அவ்வாறே, பரிசுத்த ஆவியின் வரங்களை நான் செயல்படுத்தியபோது, ஆண்டவர் வாக்குப்பண்ணியபடியே என் பெலன் அதிகரித்ததை உணர்ந்தேன். இப்போது, நான் எந்த தருணத்திலும் அவருக்கு ஊழியம் செய்ய தயங்குவதேயில்லை.
அன்பானவர்களே, எப்போதெல்லாம் கூடுமோ, அப்போதெல்லாம் உங்கள் வரங்களை பயன்படுத்த மறவாதிருங்கள். நீங்கள் அப்படிப் பயன்படுத்துவதை தேவன் பார்த்து, "நல்லது, உத்தமமும் உண்மையுமுள்ள ஊழியக்காரனே, நீ கொஞ்ச விஷயத்தில் உண்மையாயிருந்தாய். உன்னை அநேகத்தின்மேல் அதிகாரியாக்குவேன்," என்று கூறுவார். நீங்கள், ஆண்டவரை நேசித்து ஊழியத்தில் மற்றவர்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கு, கிறிஸ்துவின் சரீரத்தில் முக்கியமான அங்கமாயிருக்கிறீர்கள். தயக்கம் கொண்டு அல்லது உங்களையே சந்தேகித்து, "நான் ஒன்றுமில்லை. என்னால் எப்படி தேவனுக்கு முன்பாக ஊழியம் செய்ய முடியும்?" என்று கூறாதிருங்கள். ஓர் அடி முன்னால் வந்து, உங்களை தேவனுக்குக் கொடுத்து, பரிசுத்த ஆவியின் வரங்களுக்காக ஊக்கமாக ஜெபியுங்கள். தேவன் கஞ்சத்தனம் கொண்டவரல்ல; ஆவியின் ஒன்பது வரங்களையும் உங்களுக்குத் தந்து ஆசீர்வதிப்பதற்கு அவர் உதாரகுணமுள்ளவராயிருக்கிறார். அந்த வரங்களைப் பெற்றுக்கொள்ளும்படி இன்று ஜெபித்து, கிறிஸ்துவின் சரீரத்தில் உறுதியான அங்கமாக மாறுங்கள். நீங்கள் பூமியிலுள்ள எஜமானுக்கு வேலை செய்யவில்லை; இயேசு கிறிஸ்துவுக்கே வேலை செய்கிறீர்கள். நீங்கள் அவருடைய சரீரத்தின் அவயவமாயிருக்கிறீர்கள்.
ஆண்டவருக்கு ஊழியம் செய்வதற்கு உங்களை அர்ப்பணித்திடுங்கள். இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரங்களில் சேர்ந்து மற்றவர்களுக்காக வேண்டுதல் செய்வதற்கு அருமையான வாய்ப்பு இருக்கிறது. உங்களை தேவனுக்குக் கொடுக்கும்போது, அவர் உங்களைப் பெலப்படுத்தி, தம்முடைய மகிமைக்கென்று பயன்படுத்துவார். தயங்காதீர்கள். உங்கள் அழைப்புக்குள் பிரவேசியுங்கள்; உங்கள் வரத்தை செயல்படுத்துங்கள்; திடநம்பிக்கையோடு ஆண்டவருக்கு ஊழியம் செய்யுங்கள். தேவன் உங்களை ஆசீர்வதிப்பார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை உம்முடைய சரீரத்தின் அவயவமாக்குகிறபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய மகிமைக்காகவும் மற்றவர்களுக்கு நன்மையாகவும் நீர் எனக்குள் விசேஷித்த வரத்தை வைத்திருக்கிறீர் என்று அறிந்து அதை ஏற்றுக்கொள்வதற்கு எனக்கு உதவி செய்யும். என்னை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிறைத்து, வாய்ப்புகள் கிடைக்கும்போது என் வரங்களை நன்கு பயன்படுத்தும்படி எனக்கு வழிகாட்டும். உமக்கு ஊழியம் செய்ய நான் முன்வரும்போது, நீர் என்னை பெலப்படுத்துவீர் என்று நம்பி, உம்முடைய ஆவி தரும் ஞானத்தையும் புத்தியையும் விசுவாசத்தையும் எனக்கு அருளவேண்டுமென்று ஜெபிக்கிறேன். என் இருதயத்திலிருந்து எல்லா சந்தேகத்தையும் தயக்கத்தையும் அகற்றி, எல்லாருக்கும் பெரியவரான எஜமானருக்கு நான் ஊழியம் செய்கிறேன் என்பதை நினைவுப்படுத்தும். என்னை உமக்கு முற்றிலும் அர்ப்பணிக்கிறேன்; என்னை பெலப்படுத்தி, எனக்கான அழைப்பில் வழிநடத்துவீர் என்று நம்புகிறேன். என்னுடைய வரங்களால் எப்போதும் உம்மை கனப்படுத்த உதவி செய்யும். என் வாழ்வின் மூலமாக உம்முடைய நாமம் மகிமைப்படவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.