அன்பானவர்களே, "சகோதரரே, நீங்கள் சுயாதீனத்திற்கு அழைக்கப்பட்டீர்கள், இந்தச் சுயாதீனத்தை நீங்கள் மாம்சத்திற்கேதுவாக அநுசரியாமல், அன்பினாலே ஒருவருக்கொருவர் ஊழியஞ்செய்யுங்கள்" (கலாத்தியர் 5:13) என்று வேதம் கூறுகிறது.

நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சுயாதீனத்தை பாவ வாழ்க்கை நடத்துவதற்கு அல்ல; ஒருவருக்கொருவர் அன்புடன் ஊழியம் செய்வதற்கு பயன்படுத்தும்படி பவுல் அறிவுரை கூறுகிறான். "நீங்கள் தேவனை அறிந்திருக்க, அல்லது தேவனாலே அறியப்பட்டிருக்க, பெலனற்றதும் வெறுமையானதுமான அவ்வழிபாடுகளுக்கு நீங்கள் மறுபடியும் திரும்பி, மறுபடியும் அவைகளுக்கு அடிமைப்படும்படி விரும்புகிறதெப்படி?" (கலாத்தியர் 4:9) என்று அவன் கேட்கிறான். தேவனை அறிந்த பிறகு பாவ வாழ்க்கைக்குத் திரும்பக்கூடாது என்று அவன் எச்சரிக்கிறான்.

இன்றைய காலகட்டத்தில் மக்கள் பேச்சு சுதந்திரம், சமய சுதந்திரம் எல்லாவற்றையும் அனுபவிக்கிறார்கள்; பலவேளைகளில் தாங்கள் எதையும் செய்யலாம்; எதையும் அதிகமாய் அனுபவிக்கலாம் என்றும் நினைக்கிறார்கள். ஆனாலும், தேவனை அறிந்த பிறகு பாவ வாழ்க்கைக்குத் திரும்புவது சரியானதல்ல. "சுயாதீனமுள்ளவர்களாயிருந்தும்... தேவனுக்கு அடிமைகளாயிருங்கள்" (1 பேதுரு 2:16) என்று வேதம் தெளிவாகக் கூறுகிறது. ஆகவே, தீங்கு செய்வதற்கு நம்முடைய சுயாதீனத்தை சாக்காக நாம் பயன்படுத்தக்கூடாது. வேதம், "நீங்கள் தேவனுடைய அடிமைகள்" என்று கூறுகிறது. இதற்கு, உலக பிரகாரமான அடிமைகளைப் போலல்லாமல், தேவன் கொடுத்திருக்கிற எல்லாவற்றையும் அனுபவிக்கிற சுயாதீனத்தை அவர் தருகிறார் என்று பொருள். இந்த வசனம் தேவன்மேலான பயபக்தியைக் குறிக்கிறது. உலகில் நாம் அனுபவிக்கிறதற்கு தேவன் எல்லாவற்றையும் தந்தாலும், நாம் நம்மை அவருக்கு அர்ப்பணிக்கவேண்டும்; பிசாசுக்கு எதிர்த்து நிற்கவேண்டும்; அப்போது அவன் நம்மை விட்டு ஓடிப்போவான். அதன்பிறகு, பிசாசின் சோதனையை நாம் எதிர்கொள்ள அவசியம் இருக்காது.

ஆதிலட்சுமி என்ற சகோதரியின் சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். அவர்கள் கணவர் வியாபாரம் செய்து வந்தார். அவர்களுக்கு இரு மகள்களும் இரு மகன்களும் இருக்கின்றனர். அவர்களது கணவர் குடிப்பழக்கத்தால் குடும்பத்தை கவனியாமல், வியாபாரத்தையும் பிள்ளைகளையும் இந்த சகோதரியே கவனிக்கும்படி விட்டுச் சென்றுவிட்டார். இந்த இக்கட்டான சூழலில் 12ம் வகுப்பு படித்து வந்த அவர்கள் மகள், மனக்கலக்கமடைந்து மிகவும் பயந்துபோயிருந்தாள். அப்போது அவர்கள் மகன், வேலூரிலுள்ள ஜெப கோபுரத்திற்கு சென்று ஜெபிக்குமாறு ஆலோசனை கூறினார். ஜெப கோபுரத்தில் ஜெப வீரர்கள் அவர்களுக்காக ஜெபித்தார்கள். அங்கு குடும்ப ஆசீர்வாத திட்டத்தைக் குறித்து அறிந்துகொண்டு, தங்கள் குடும்பத்தை அதில் சேர்க்க தீர்மானித்தார்கள். ஆண்டவர், அவர்கள் குடும்பத்தை ஆசீர்வதிக்க தொடங்கினார். பிள்ளைகளின் படிப்பு தொடர்பான தேவைகளையும் சந்தித்தார். ஜெப வீரர்களின் ஜெபத்தின் மூலம், அவர்கள் கணவர் குடிப்பழக்கத்திலிருந்து முழு விடுதலை பெற்றார். தன்னுடைய கணவரை விடுவித்ததற்காக தேவனை ஸ்தோத்திரித்து, சகோதரி ஆதிலட்சுமி எங்களுக்கு கடிதம் எழுதினார்கள். இப்போது சந்தோஷமாக வாழ்ந்து வருகிறார்கள்.

அன்பானவர்களே, நீங்கள் அடிமைத்தனத்தினூடாய், மனக்கலத்தினூடாய் கடந்து சென்று கொண்டிருக்கலாம். ஆனாலும், ஆண்டவரால் உங்களை விடுவிக்க முடியும்; தமது ஆசீர்வாதத்தை அளவில்லாமல் தர முடியும் என்பது நற்செய்தியாயிருக்கிறது. ஆகவே, உங்களை விடுவிக்கும்படி இன்றே ஆண்டவரிடம் கேளுங்கள். உலகத்தை அனுபவிப்பதற்கான சுயாதீனம் உங்களுக்கு இருப்பதாக கற்பனை செய்து கொள்ளாதிருங்கள். உங்களை ஆண்டவருக்கு அர்ப்பணியுங்கள். அவர் எல்லா பிரச்னைகள், அடிமைத்தனங்கள், பயங்கள், கலக்கத்திலிருந்தும் உங்களை விடுவிப்பார். ஆண்டவர், சர்வவல்லமையுள்ளவர் என்பதை எப்போதும் நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உமக்குள் எனக்குக் கொடுக்கப்பட்டிருக்கும் சுயாதீனத்திற்காகவும், பாவம், சாபம், எல்லாவித ஒடுக்குதல்களின் கட்டுகளிலிருந்தும் நான் விடுவிக்கப்பட்டு வாழும்படி நீர் எனக்காக சிலுவையில் பலியானதற்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன். பயம், சந்தேகம், கவலை என்று வாழ்வின் எல்லா சோதனைகளையும், போராட்டங்களையும் மேற்கொள்ள உதவவேண்டுமென்று ஜெபிக்கிறேன். இந்த தடைகளை மேற்கொள்ள நீர் உதவுவீர் என்றும், பிசாசை எதிர்க்கவும் உம்மில் உறுதியாய் நிற்கவும் பெலன் தருவீர் என்றும் நம்புகிறேன். உம்மை கனம்பண்ணும் காரியங்களை நான் செய்யவும், என்னைச் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு உம்முடைய அன்பை காட்டவும் உதவும். என்னுடைய வார்த்தைகளும் செயல்களும், நீர் மாத்திரமே கொடுக்கக்கூடிய சுயாதீனத்தை மற்றவர்களும் தேடும்படி உற்சாகப்படுத்துகிறவையாய் அமையட்டும். வழியெங்கும் நீர் என்னோடு கூட இருந்து, மெய்யான விடுதலை வாழ்வை நோக்கி என்னை நடத்துவீர் என்று அறிந்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.