அன்பானவர்களே, "உங்கள் சரீரமானது நீங்கள் தேவனாலே பெற்றும் உங்களில் தங்கியும் இருக்கிற பரிசுத்த ஆவியினுடைய ஆலயமாயிருக்கிறதென்றும், நீங்கள் உங்களுடையவர்களல்லவென்றும் அறியீர்களா?" (1 கொரிந்தியர் 6:19)என்ற தேவனுடைய வாக்குத்தத்தத்தை உங்களுடன் பகிர்ந்துகொண்டு உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வசனம் கூறுகிறதுபோல, நாம், நமக்குச் சொந்தமானவர்கள் அல்ல. நமக்குள் உள்ளவை அனைத்தும் தேவனுக்குச் சொந்தமானவை. கர்த்தருடைய ஆவியானவர் வாசம்பண்ணும் தேவனுடைய ஆலயமாக விளங்குவதற்காகவே நாம் சிருஷ்டிக்கப்பட்டிருக்கிறோம். கர்த்தருடைய ஆலயம் உங்களுக்குள் இருப்பதாக ஒருமுறை எண்ணிப்பாருங்கள். அது எவ்வளவு மகிமையும் சந்தோஷமும் நிறைந்த ஆலயமாக இருக்கும்! தேவனுடைய வீடாகிய ஆலயத்திற்குள் நாம் செல்லும்போது, அவருடைய சமுகத்தையும், அவருடைய சமாதானத்தையும் உணர்கிறோம். அவ்வாறே, இதே பிரசன்னத்தை நீங்கள் உங்களுக்குள் சுமந்துசெல்லவேண்டும் என்று தேவன் விரும்புகிறார். தாம் வாசம்பண்ணும் தம்முடைய ஆவியின் ஆலயமாக நீங்கள் விளங்கவேண்டும் என்றே அவர் வாஞ்சிக்கிறார். உங்கள் சொந்த எண்ணங்கள், விருப்பங்கள், திட்டங்களை நீங்கள் விட்டுவிடவேண்டும் என்பதே இதன் அர்த்தமாகும். "ஆண்டவரே, என்னை எங்கு கொண்டு செல்ல விரும்புகிறீர்? என் மூலமாக என்ன செய்ய விரும்புகிறீர்?" என்று கேளுங்கள். உங்கள் இருதயம் அவருடைய சந்தோஷத்தினால் நிறைந்திருப்பதால், நீங்கள், உங்களை வழிநடத்துவதற்கு அவரை அனுமதிப்பீர்கள்; உங்கள் உள்ளமும் உடலும் ஜீவனுள்ள தேவனின் மெய்யான ஆலயமாக மாறுவதை காண்பீர்கள்.

தேவனுடைய ஆலயத்திற்குள் என்ன நடக்கிறது? அது, மக்கள், தேவனுடைய சமுகத்தை உணரும் இடமாக விளங்குகிறது. உங்கள் மூலமாக, மற்றவர்களும் தேவ பிரசன்னத்தை உணர்ந்து அவரண்டை இழுக்கப்படுவார்கள். உங்கள் வாழ்க்கையின் மூலமாக, அவர்கள் இதுவரை அறிந்திராத வழிகளில் ஆண்டவரை அறிந்துகொள்வார்கள். ஆலயத்தில், தேவன் தமது ஜனங்களுடன் பேசுகிறார்; உங்கள் மூலம், அவர் மற்றவர்களுக்கு வழிகாட்டி நடத்துவார்.

இதற்கு ஓர் அழகான எடுத்துக்காட்டை பகிர்ந்துகொள்கிறேன். எங்கள் கல்லூரியில் ஒரு மாணவன் இருந்தான். இளவயதிலேயே அவன் தேவ ஆவியின் பூரண நிறைவைப் பெற்றிருந்தான். இயேசுவின்மேல் அவன் கொண்டிருக்கும் அன்பும் தாகமும் கல்லூரி முழுவதுமே பிரசித்தமாயிருந்தது. அவன் நன்றாக ஜெபித்து, தேவனுடன் பேசிக்கொண்டே இருந்தான். கல்லூரி விடுதியில், மாணவர்கள் தங்கள் பிரச்னைகளை அவனிடம் சொல்லி ஜெபிப்பதற்காக வரிசையில் நிற்பார்கள். அவன் மூலமாக அவர்கள் தேவ பிரசன்னத்தை உணர்ந்து, ஆண்டவரிடமிருந்து பதில்களை பெற்றுக்கொண்டனர். மற்றவர்கள், அவனிடம் விளங்கும் ஞானத்தை தேடி, படிப்பில் உதவி செய்யுமாறு கேட்டுக்கொண்டனர். தேவன் அவனுக்கு நல்ல அறிவை கொடுத்திருந்தார்; அவன் எல்லா காரியங்களிலும் சிறந்து விளங்கினான்; அநேகரை ஆண்டவரிடமும் அவருடைய ஞானத்திற்கும் நேராக வழிநடத்தினான். அன்பானவர்களே, நீங்களும் அவ்வாறே தேவனுடைய ஆலயமாக விளங்கி, இயேசுவை மற்றவர்களுக்கு காட்டலாம். உங்கள் வாழ்க்கை தேவ பிரசன்னத்தினால் பிரகாசித்து, மற்றவர்களும் தேவனை ஆராதித்து அவரது அன்பை அனுபவிக்கும்படி அவர்களை இழுப்பதாக அமையட்டும். தேவன் உங்கள் மூலமாக மற்றவர்களின் வாழ்க்கையினுள் கடந்துசெல்வதற்கு அவரை அனுமதிக்கும்படி, அவரது ஆலயமாக மாறுவதற்கான மாற்றம் உங்களில் நடக்கட்டும். தேவன் வாசம்பண்ணும் ஸ்தலமாக விளங்குவது எத்தனை சிலாக்கியம்!

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னுடைய உடலை உம்முடைய பரிசுத்த ஆவியின் ஆலயமாக மாற்றும் உம்முடைய சத்தியத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய எண்ணங்களை, விருப்பங்களை, திட்டங்களை முழுவதும் உம்மிடம் ஒப்படைக்க எனக்கு உதவி செய்யும். என் வாழ்க்கை உம்முடைய மகிமையையும் அன்பையும் காட்டுவதாய் அமையும்படி என்னை உம்முடைய பிரசன்னத்தினால் நிரப்பும். உம்முடைய பூரண திட்டத்தின்படி என்னை வழிநடத்தும். மற்றவர்கள் உம்மை சந்திக்கும் அனுபவம் பெறும்படி, என் இருதயம் உம்மை ஆராதிக்கும் ஸ்தலமாக விளங்கட்டும். மற்றவர்களும் உம்முடைய சமாதானத்தை அறிந்து அனுபவிக்க அவர்களை தூண்டும்படி என் வழியாக நீர் கடந்து செல்லும். இவ்வுலகில் உம்முடைய வெளிச்சத்தை பிரகாசித்து, அநேகரை உம்மண்டை இழுக்கும்படி என்னை பெலப்படுத்தும். நான், எப்போதும் நீர் வாசம்பண்ணும் ஸ்தலமாக விளங்குவதற்கு உதவி செய்து, உம்முடைய சந்தோஷத்தாலும் சித்தத்தாலும் என்னை நிரப்பும். உம்முடைய ஆலயமாக விளங்குவதற்கு என்னை தெரிந்துகொண்டிருப்பதற்காக உமக்கு நன்றிசெலுத்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.