அன்பானவர்களே, "நீங்கள் மரித்தீர்கள், உங்கள் ஜீவன் கிறிஸ்துவுடனே தேவனுக்குள் மறைந்திருக்கிறது" (கொலோசெயர் 3:3) என்று வேதம் கூறுகிறது. இந்த வசனம், "நீங்கள் மரித்தீர்கள்" என்று கூறுவதைக் குறித்து நீங்கள் ஆச்சரியப்படலாம். கலாத்தியரில் பவுல், "கிறிஸ்துவுடனேகூடச் சிலுவையிலறையப்பட்டேன்; ஆயினும், பிழைத்திருக்கிறேன்; இனி நான் அல்ல, கிறிஸ்துவே எனக்குள் பிழைத்திருக்கிறார்" (கலாத்தியர் 2:20) என்று கூறுகிறான். பவுல் கூறுவது போல, நாம் நமக்குள் இருக்கும் உலகப் பிரகாரமான காரியங்களை மரிக்க ஒப்புக்கொடுத்திருக்கிறோமா? உலகப் பிரகாரமான சுபாவங்கள், வேண்டாத பழக்கங்கள், நம்முடைய பழைய பாவங்கள், கோபங்கள், கசப்புகள், மற்றும் தேவனுக்கு பிரியமில்லாத எல்லாவற்றையும் நாம் மரிக்க ஒப்புக்கொடுக்கவேண்டும். நமக்குள் உள்ள எல்லாம் மரித்த பிறகு நாம் அல்ல; கிறிஸ்துவே நமக்குள் ஜீவிப்பார்.

கிறிஸ்து நமக்குள் 100% இருக்கும்போது நமது வாழ்க்கை எவ்வளவு மகிமையாக இருக்கும் பாருங்கள்! "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்" (யோவான் 11:25) என்று இயேசு கூறுகிறார். ஆம், தேவனை நம்புகிறவர்கள், ஒரு போதும் உண்மையில் மரிப்பதில்லை. நாம் கிறிஸ்துவுக்குள் பிழைத்திருக்கிறோம். "கிறிஸ்துவுக்குள் எப்பொழுதும் எங்களை வெற்றிசிறக்கப்பண்ணி, எல்லா இடங்களிலேயும் எங்களைக்கொண்டு அவரை அறிகிற அறிவின் வாசனையை வெளிப்படுத்துகிற தேவனுக்கு ஸ்தோத்திரம்" (2 கொரிந்தியர் 2:14) என்று வேதம் அருமையாக கூறுகிறது. ஒரு மனிதனுடைய ஆவிக்குரிய வாழ்வு, தேவனுடன் இணைக்கப்பட்டதாக, மறைவானதாக இருக்கிறது. அவருக்குள் நமக்குச் சகல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களும் கிடைத்திருக்கிறது.

அதைத்தான் பவுல், "கிறிஸ்து எனக்கு ஜீவன்" என்று கூறுகிறான் (பிலிப்பியர் 1:21). கிறிஸ்து இல்லாமல் வாழ்க்கையை உண்மையாக இந்த உலகில் நம்மால் வாழ முடியாது. "அவருக்குள் நாம் பிழைக்கிறோம், அசைகிறோம், இருக்கிறோம்" (அப்போஸ்தலர் 17:28) என்று பவுல் கூறுகிறான். ஆண்டவர், உங்களை கிறிஸ்துவுக்குள் பிழைத்திருக்கப்பண்ணுவார். கிறிஸ்துவுக்குள் நீங்கள் இருக்கும்போது, ஜெயம்பெற்றவராய் விளங்குவீர்கள்.

ஜான் என்ற அன்பு சகோதரர் தன்னுடைய வாழ்க்கை குறித்த சாட்சியை இப்படிப் பகிர்ந்துகொண்டார். அவர் மது பழக்கத்திற்கு அடிமையாக இருந்தார். காலையிலிருந்து இரவு வரை குடித்துக்கொண்டே இருப்பார். ஆடை அணிந்திருக்கிறோமா இல்லையா என்பதுகூட தெரியாத அளவுக்கு அவர் குடிப்பார். இந்த நிலையில் குடும்பத்தில் அவருக்குத் திருமணம் ஒழுங்கு செய்தார்கள். ஆனாலும் இரண்டு ஆண்டுகள் தொடர்ந்து சண்டை போட்டுக்கொண்டே இருந்தால், அவருடைய மனைவி அவரைவிட்டுப் பிரிந்து சென்றுவிட்டார்கள். ஆகவே, அதிகமாகக் குடித்துக்கொண்டே இருந்தார். படுத்தப் படுக்கையானார். இந்த நிர்க்கதியான நிலையில் ஒரு சகோதரர் அவரை சென்னையில் வானகரத்தில் உள்ள ஜெப கோபுரத்திற்கு வரும்படி அழைத்தார். அங்கே ஜெப வீரர்கள் அவருக்கு ஆலோசனை கொடுத்தார்கள். அவர் தொடர்ந்து ஜெப கோபுரத்திற்கு வர ஆரம்பித்தார். அங்கு ஏறெடுக்கப்பட்ட ஜெபம் அவருக்கு ஆறுதலாக இருந்தது. அந்த ஆண்டே அவருடைய மனைவி திரும்பவும் அவரோடு வாழ்வதற்கு வந்தார்கள். அவர் மனைவி கருத்தரித்தார்கள். அவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அடுத்த 2015 ஆம் ஆண்டில் அவர்களுக்கு இன்னொரு பெண் குழந்தையைக் கொடுத்து ஆண்டவர் ஆசீர்வதித்தார். இப்போது அவர் மதுப்பழக்கத்திலிருந்து முற்றிலும் விடுதலையடைந்திருக்கிறார். அருமையான குடும்ப வாழ்க்கை நடத்துகிறார். ஒரு வேலையில் சேர்ந்திருக்கிறார். அதனுடன் சொந்தமாக தொழிலும் செய்து வருகிறார். நம் தேவன் எவ்வளவு நல்லவர் பாருங்கள்.

நாம் இயேசுவிடம் வரும்போது நம்முடைய வாழ்க்கை மறுரூபமாக்கப்படுகிறது. ஆண்டவர் நம்மைத் தமக்குள் மறைத்து மகா உயரங்களுக்கு உயர்த்துகிறார். ஆம், தேவன்தாமே நமக்கு மறைவிடமாக இருக்கிறார். அவர், இரட்சணிய பாடல்கள் நம்மைச் சூர்ந்துகொள்ளும்படிச் செய்வார். நீங்களும் வாழ்க்கையில் மாற்றத்தைக் காணலாம்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, கிறிஸ்து இயேசுவுக்குள் மறைந்திருக்கிற வாழ்க்கையை விலையேறப்பெற்ற ஈவாக நீர் தந்திருப்பதால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உமக்குப் பிரியமில்லாத எல்லாவற்றையும் மரிப்பதற்கு ஒப்புக்கொடுக்கும்படியும், முற்றிலும் உமக்காக வாழும்படியும் எனக்கு உதவி செய்யும். நீர் எப்போதும் எனக்குள் ஆளுகை செய்யும் வண்ணம் உம்முடைய பிரசன்னத்தால் என்னை நிரப்பும். உம்மை அறிகிற அறிவினால் வருகின்ற அன்பு, சமாதானம், சந்தோஷம், ஆகியவை என் இருதயத்தில் நிரம்பி வழியட்டும். உம்முடைய வெற்றிப் பவனியில் என்னையும் நடத்தி,  ஆவிக்குரிய விதத்தில் மகா உயரங்களுக்கு என்னை உயர்த்தும். கிறிஸ்து இயேசுவுக்குள் இருக்கின்ற சகல பரலோக ஐசுவரியங்களையும் எனக்குத் தந்து என்னை ஆசீர்வதியும். என்னுடைய வாழ்க்கை உம்முடைய மகிமைக்கு சாட்சியாக விளங்க கிருபை செய்யும். உம்முடைய மறைவிடத்தில் என்னைப் பத்திரமாகக் காத்து, இரட்சணிய பாடல்கள் என்னைச் சூழ்ந்துகொள்ளும்படிச் செய்ய வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.