அன்பானவர்களே, இன்றைக்கு, "அந்த நட்சத்திரத்தைக் கண்ட போது, மிகுந்த ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்" (மத்தேயு 2:10) என்ற வசனத்தை தியானிப்போம். நட்சத்திரத்தைப் பார்த்து ஆனந்த சந்தோஷமடைந்த சாஸ்திரிகளைக் குறித்து நாம் வாசிக்கிறோம். நட்சத்திரத்தைப் பார்த்ததும் அவர்கள் ஏன் ஆனந்த சந்தோஷமடைந்தார்கள்? மேசியா வந்ததற்கு நட்சத்திரம் ஓர் அடையாளமாக, மகிமையான அடையாளமாக விளங்கியது. மேசியாவின் வருகை ஏன் முக்கியத்துவம் பெறுகிறது? பல சந்ததிகளாக இஸ்ரவேல் ஜனங்கள் அநேக ராஜ்யங்களின் கீழ் சிறைப்பட்டிருந்தார்கள். அவர்கள் அடிமைப்படுத்தப்பட்டு, பாரப்படுத்தப்பட்டு, கொடுமைக்குள்ளாக்கப்பட்டார்கள். சிறையிருப்பிலிருந்து அவர்களை விடுவிப்பதற்கு இரட்சகர் ஒருவர் வருவார் என்ற நம்பிக்கையின் செய்தியை ஏசாயா தீர்க்கதரிசி முன்னறிவித்தான். பல ஆண்டுகளாக இஸ்ரவேல் ஜனங்கள் மேசியாவின் வருகைக்காக ஆவலுடன் காத்திருந்தார்கள். வானத்தில் காணப்பட்ட நட்சத்திரம், அவர்கள் நெடுங்காலமாய் காத்திருந்த இரட்சகர் வந்துவிட்டதை காட்டியது. அவர்களை விடுவிக்க, நம்பிக்கை அளிக்க ஒருவர் வந்திருக்கிறார் என்ற காரணத்தினால் அவர்கள் ஆனந்த சந்தோஷமடைந்தார்கள். இன்றைக்கு நீங்கள் இயேசுவை உங்கள் இரட்சகராக ஏற்றுக்கொண்டிருப்பதால், நட்சத்திரம் உங்களுக்குள் பிரகாசமாக ஒளிவீசுகிறது. உங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு, பாவத்தில், மனச்சோர்வில், இருளில், அவநம்பிக்கையில் இருப்பவர்களுக்கு முன்பாக பிரகாசித்து வழிநடத்தும் ஒளியாக தேவன் உங்களை பயன்படுத்துவார். ஜனங்களை அவர்கள் பாரங்களிலிருந்து விடுவிக்கும், வியாதியை குணப்படுத்தும், இருளை வெளிச்சமாக்கும் ஜீவனுள்ள தேவனாகிய மேசியாவிடம் உங்கள் மூலமாக வழிநடத்துவார்.
ஆம், அன்பானவர்களே, மெய்யான விடுதலை தருகிறவரும், எல்லா தேச மக்களுக்கும் நம்பிக்கையானவருமான இயேசுவை மற்றவர்களுக்கு காண்பிக்கும்படி, தேவன் உங்களை பிரகாசமாக ஒளிவீசச்செய்வார். இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் உங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு ஒளிவீசும் பிரகாசமான நட்சத்திரமாக ஜொலிக்க உங்களை அர்ப்பணியுங்கள். தவறாமல் அனைவரையும் இயேசுவுக்கு நேராக நடத்துவதற்கு, இரவில் பிரகாசமாக ஜொலிக்கும் நட்சத்திரம்போல விளங்குங்கள். அவர் நம் நம்பிக்கையாய், இருளில் வெளிச்சமாய், நித்திய சந்தோஷத்தை தருகிறவராய் இருக்கிறார். இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் இந்தப் பணிக்கு உங்களை ஜெபத்துடன் அர்ப்பணிப்பீர்களா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னுடைய ஒரே இரட்சகரும், என் வாழ்க்கையில் நம்பிக்கையை தருகிறவருமான இயேசுவை ஈவாக தந்ததற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னைச் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு வழிகாட்டும் நட்சத்திரமாக நான் ஜொலிக்கவும், அவர்களை உம் அன்பண்டைக்கு நடத்தவும் எனக்கு உதவி செய்யும். என்னை உம்முடைய சந்தோஷத்தால் நிரப்பும். இருளாலும் பயத்தாலும் பாரப்பட்டிருக்கிறவர்களுக்கு நம்பிக்கையை அளிக்கும்படி என்னை பயன்படுத்தும். இந்த கிறிஸ்துமஸ் காலத்தில் என் வார்த்தைகளும் செய்கைகளும் உம்முடைய அன்பையும் சத்தியத்தையும் காட்டுவதாக அமையட்டும். தாழ்மையாக நடக்கவும், உம்முடைய சமாதானத்தின், விடுதலையின் பாத்திரமாக உமக்கு ஊழியம் செய்யவும் எனக்கு போதித்தருளும். என்னை உம்முடைய பணிக்கு அர்ப்பணிக்கிறேன். உம்முடைய பெலனையும் வழிகாட்டுதலையும் எனக்கு அருளிச்செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.