அன்பானவர்களே, "சமாதானத்தின் தேவன் தாமே உங்களை முற்றிலும் பரிசுத்தமாக்குவாராக; உங்கள் ஆவி ஆத்துமா சரீரம் முழுவதும், நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்து வரும்போது குற்றமற்றதாயிருக்கும்படி காக்கப்படுவதாக" (1 தெசலோனிக்கேயர் 5:23) என்று வேதம் கூறுகிறவண்ணம் ஆண்டவர் உங்களை அதிகமாய் ஆசீர்வதிப்பாராக. நாமும் இவ்வாறே விரும்புகிறோம் அல்லவா? இந்தப் பொல்லாத உலகில் பரிசுத்தமாக வாழவேண்டும் என்பதே நம் வாஞ்சையாயிருக்கிறது.
"தேவன் நம்மை அசுத்தத்திற்கல்ல பரிசுத்தத்திற்கே அழைத்திருக்கிறார்" (1 தெசலோனிக்கேயர் 4:7) என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. "கர்த்தராகிய நான் பரிசுத்தராயிருக்கிறபடியினாலே நீங்களும் எனக்கேற்ற பரிசுத்தவான்களாயிருப்பீர்களாக" என்று தேவனே கூறுகிறார். நாமும் தமது சாயலுக்கு மாறி, பரிசுத்த ஜனங்களாகும்படி, நம்மை மறுரூபமாக்கவேண்டும் என்பதே தேவனுடைய விருப்பமாயிருக்கிறது. நம்மையே நம்மால் பரிசுத்தமாக்கிக்கொள்ள இயலாது. நாம் பூரணராகும்படி ஆண்டவர் நமக்காக வேண்டுதல் செய்கிறார் என்று வேதம் கூறுகிறது (எபிரெயர் 7:25). நம்முடைய பரிசுத்தத்திற்காக இயேசுதாமே வேண்டிக்கொள்கிறார். "உம்முடைய சத்தியத்தினாலே அவர்களைப் பரிசுத்தமாக்கும்" என்று இயேசு ஜெபிக்கிறார் (யோவான் 17:17). நாம் தேவனுடைய வசனத்தினாலே பரிசுத்தமாக்கப்படுகிறோம். "அவர்களும் சத்தியத்தினாலே பரிசுத்தமாக்கப்பட்டவர்களாகும்படி, அவர்களுக்காக நான் என்னைத்தானே பரிசுத்தமாக்குகிறேன்" (வசனம் 19) என்றும் வேதம் கூறுகிறது. நம் இரட்சகர் எவ்வளவு அன்புள்ளவர்! அவர் நமக்காக ஜெபிப்பதுடன் மட்டுமல்லாமல், நமக்காக தம்மையே பரிசுத்தப்படுத்துகிறார். அவர் சிலுவையில் செய்த தியாகத்தின் மூலமே நான் பரிசுத்தமாக்கப்பட்டுள்ளோம்.
பரிசுத்தமாக்குதலும் பரிசுத்த ஆவியானவருடைய கிரியையாகவே இருக்கிறது. "கிறிஸ்துவின் நிருபமாயிருக்கிறீர்களென்று வெளியரங்கமாயிருக்கிறது; ...ஜீவனுள்ள தேவனுடைய ஆவியினாலும்... எழுதப்பட்டிருக்கிறது." (2 கொரிந்தியர் 3:3) என்றும், "நமது தேவனுடைய ஆவியினாலும் கழுவப்பட்டீர்கள், பரிசுத்தமாக்கப்பட்டீர்கள்" (1 கொரிந்தியர் 6:11) என்றும், "கர்த்தரோ உண்மையுள்ளவர், அவர் உங்களை ஸ்திரப்படுத்தி, தீமையினின்று விலக்கிக் காத்துக்கொள்ளுவார்" (2 தெசலோனிக்கேயர் 3:3) என்றும் வேதம் கூறுகிறது. அவர் நம்மை பரிசுத்தப்படுத்திய பிறகு, ஸ்திரப்படுத்துகிறார்; சத்துருவிடமிருந்து நம்மை பாதுகாக்கிறார். பரிசுத்தமாக்குதல், உண்மையான ஒரு தோட்டக்காரரின் வேலையைப் போன்றதாயிருக்கிறது. தேவனே அனைவருக்கும் சிறந்த தோட்டக்காரராயிருக்கிறார். பயிரின் சத்தை உறிஞ்சும் களையை தோட்டக்காரர் கவனமாக அகற்றுகிறார். அவ்வாறே நம் வாழ்விலும் நம்முடைய பெலனை உறிஞ்சும் சில காரியங்களை ஆண்டவர் அகற்றிப்போடுகிறார். கிளைகழிப்பது நமக்கு வேதனையாக இருந்தாலும், இறுதியில் நமக்கு நன்மையையே தரும். நாம் பூரணராகி, அவருக்குள் முழுமையடையும்வண்ணம் பரிசுத்தப்படுத்தப்படுவதற்காக தேவன் அப்படி செய்கிறார்.
யோபு இதை அறிந்தே, "அவர் என்னைச் சோதித்தபின் நான் பொன்னாக விளங்குவேன்" (யோபு 23:10) என்று சொல்கிறான். பொன்னானது சுத்தமாக்கப்பட பல்வேறு சுத்திகரிப்பு முறைகள் செய்யப்படுவதுபோல, நாம் தம் முன்னே குற்றமற்றவர்களாக காணப்படும்படி நம்மை சுத்திகரிக்கிறார். அவர் நம் ஆவியை மட்டும் சுத்திகரிப்பதோடு நின்றுவிடாமல், ஆத்துமாவையும் சரீரத்தையும் முழுமையாக சுத்திகரிக்கிறார். அன்பானவர்களே, உண்மையுள்ள தோட்டக்காரராகிய நம் ஆண்டவர்தாமே இப்போது உங்களை முற்றிலும் சுத்திகரித்து, பரிசுத்தமாக்குவாராக.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, மறுரூபமாக்கும் கிருபையை திறந்த இருதயத்துடன் வேண்டி உம்மிடம் வருகிறேன். உம்முடைய வருகையின்போது நான் குற்றமற்றவனா(ளா)க காணப்படும்படி என் ஆவியையும் ஆத்துமாவையும் சரீரத்தையும் பரிசுத்தமாக்கும். சத்தியத்தில் என் பரிசுத்தப்படுத்தும், விலையேறப்பெற்ற உம்முடைய வார்த்தைக்காகவும், எனக்காக சிலுவையில் தன்னையே பலிகொடுத்து, இன்றும் என் பரிசுத்தத்திற்காக வேண்டுதல் செய்கிறவருமான என்னுடைய இரட்சகராக இயேசுவுக்காகவும் உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் உம்முடன் சஞ்சரிப்பதை தடுக்கும் எல்லாவற்றையும் உம்முடைய பரிசுத்த ஆவியின் வல்லமையினால் அகற்றி, பொன்னைப்போல தொடர்ந்து என்னை சுத்திகரிப்பீராக. உம்முடைய வழிகளில் என்னை நிலைநிறுத்தும்படி என்னை பெலப்படுத்தியருளும். பொல்லாங்கனிடமிருந்து என்னை பாதுகாத்து, உம்முடைய பரிசுத்தம் என்னில் விளங்கவும், நான் அனுதினமும் அதிகமாய் உம்மைப்போல மாறவும் உதவி செய்யும். நான் பூரணமான மனுஷனாக / மனுஷியாக விளங்கும்படி நீர் நல்ல தோட்டக்காரரைப்போல அயராமல் உழைக்கிறீர் என்று நம்புகிறேன். என்னை பரிசுத்தமாக்குகிற உம் அன்புக்கு நன்றியறிதலுடன் என்னை சமர்ப்பித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.