அன்பானவர்களே, "அவர்கள் அவரை நோக்கிப்பார்த்துப் பிரகாசமடைந்தார்கள்; அவர்கள் முகங்கள் வெட்கப்படவில்லை" (சங்கீதம் 34:5) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்த வசனமாகும். "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்" (யோவான் 8:12) என்று இயேசு கூறியிருக்கிறார்.
இயேசுவை நோக்கிப் பார்க்கிறவர்களின் முகங்கள் வெளிச்சத்தாலும் கனத்தாலும் பிரகாசிக்கும். அவர்கள் வாழ்வில்,எந்த பிசாசின் ஆவியும் இருளைக் கொண்டு வர முடியாது. எந்த பாவமும், வியாதியும் அவர்களை மேற்கொள்ள முடியாது; எந்த பணக்கஷ்டமும் அவர்கள் வாழ்க்கையை அழிக்க முடியாது; பொல்லாத மக்களின் அல்லது பொறாமைக்காரர்களின் எந்த வார்த்தையும் அவர்களை ஒருபோதும் வெட்கப்படுத்த முடியாது. எல்லா காரியத்திற்காகவும் தன்னை நோக்கிப் பார்க்கிறவர்கள்மேல் இயேசுவின் முகம் பிரகாசிக்கும்.
வாழ்க்கையின் மோசமான தருணங்களில் இயேசுவை நோக்கிப் பாருங்கள். பூரண வெளிச்சமான அவர், உங்கள் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார்; உங்கள் இருளை வெளிச்சமாக்குவார். உங்கள் வாழ்க்கையில் இனி வெட்கத்திற்கு இடமில்லை; ஆவியில் துக்கமிருக்காது; இனி பாவமிருக்காது; ஆசீர்வாதத்திற்காக காத்திருக்கவேண்டிய நிலை இருக்காது. தேவனுடைய வெளிச்சம் உங்கள்மேல் உதிக்கும்; இயேசுவின் மூலமாக உங்கள் வாழ்க்கைக்குள் ஆசீர்வாதங்கள் பாய்ந்து வரும்.
அன்பானவர்களே, உங்களை ஊக்குவிக்கும்வண்ணம் ஒரு சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். சென்னையை சேர்ந்த பூர்ணலதா - தனசேகரன் தம்பதியருக்கு 2003ம் ஆண்டு திருமணம் நடைபெற்றது. அவர்களுக்கு திருமணமாகி 14 ஆண்டுகளாக குழந்தை பாக்கியம் இல்லை. எட்டுமுறை செயற்கைமுறை கருத்தரிப்பு (IVF) முயற்சி செய்தும் வெற்றி பெறவில்லை. இந்தச் சிகிச்சைக்கு முன்பாக, அவர்கள் கருவுற்றபோது, கரு கலைந்துபோனது. இதன் காரணமாக உறவினர்களோடு பலமுறை சண்டையிட நேரிட்டது. இறுதியில் சொந்த ஊரை விட்டு ஓடிப்போக நேரிட்டது. சென்னையிலுள்ள சகோ. டி.ஜி.எஸ். தினகரன் நினைவு ஜெப கோபுரத்திற்கு வந்தார்கள். சகோதரி பூர்ணலதா, ஜெப கோபுரத்திலுள்ள தியான அறைக்கு தன் கணவரை அழைத்துச் சென்று, "நாம் ஆண்டவரை நோக்கி அழுவோம்; இந்த தியான அறையில் நம் துக்கங்களை அவர் முன்பு ஊற்றுவோம்," என்று கூறியிருக்கிறார்கள். அவர்கள் கணவரோ, தற்கொலை செய்வதற்கான ஏற்பாடுகள் எல்லாவற்றையும் செய்து வைத்திருந்திருக்கிறார். ஆனால், அந்த சகோதரி, "ஒருபோதும் அப்படிச் செய்ய நினைக்காதீர்கள். இந்த தியான அறையில் நம் இருதயத்தை ஆண்டவர் முன்பாக ஊற்றுவோம். நாம் வெட்கத்தின் வழியாக சென்ற இடத்தில், ஆண்டவர் நம்மை கனப்படுத்துவார்," என்று கூறியிருக்கிறார்கள். ஜெப கோபுரத்தில் அவர்கள் அழுததை தேவன் கேட்டார். 14 ஆண்டு காலம் கருத்தரிக்காமல் இருந்த அவர்கள், ஒரே மாதத்தில் கருவுற்றார்கள். இது நம்ப முடியாத ஆச்சரியம்! தேவன் கருவில் குழந்தையை காத்துக்கொண்டார்; முழு வளர்ச்சியடைந்த ஆண் பிள்ளையை கொடுத்தார். எந்த இடத்தில் அவர்கள் வெட்கத்தை அனுபவித்தார்களோ, அதே இடத்தில் தேவன் அவர்களை கனப்படுத்தினார்; இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தின் மூலம் அவர்கள் பெற்ற ஆசீர்வாதங்களை இப்போது அனுபவித்து மகிழ்கிறார்கள். இயேசுவை நோக்கிப் பார்க்கிறவர்கள் பிரகாசமடைவார்கள்; அவர்கள் முகங்கள் ஒருபோதும் வெட்கமடைவதில்லை. பயப்படாதிருங்கள். இயேசு உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறார். அவரது வெளிச்சம், உங்கள் வாழ்க்கையிலுள்ள இருளை நீக்கும்.
ஜெபம்:
பரம தகப்பனே, நீர் கொடுத்த வாக்குத்தத்தத்திற்காக நன்றி நிறைந்த இருதயத்துடன் உம்மண்டை வருகிறேன். என் முகம் ஒருபோதும் வெட்கமடையாமல், பிரகாசிக்கும் என்று நம்பி உம்மை நோக்கிப் பார்க்கிறேன். இயேசு உலகத்தின் ஒளியாயிருக்கிறார்; ஆகவே, உமது வல்லமை என்னுடைய இருளை வெளிச்சமாகவும், என்னுடைய துக்கத்தை சந்தோஷமாகவும் மாற்றும் என்று நான் நம்புகிறேன். இக்கட்டான நேரங்களில், உம்முடைய வெளிச்சம் என்மேல் பிரகாசிக்கும் என்றும், பாவம், வியாதி, உபத்திரவம் இவற்றின் இருளைப் போக்கி, கனத்தை கொண்டு வரும் என்று அறிந்து உம்மை நோக்கிப் பார்க்கிறேன். உம்முடைய வெளிச்சமும் கிருபையும் என்னை மூடியிருப்பதால், எந்தப் பிசாசின் வல்லமையும், பொருளாதார நெருக்கடியும், மற்றவர்களின் கடினமான வார்த்தைகளும் என்னை விழத்தள்ள முடியாது. உம்முடைய ஆசீர்வாதங்கள் என் வாழ்க்கையில் பாய்ந்து வரவேண்டுமென்று என்னுடைய ஆவியில் விண்ணப்பம் பண்ணுகிறேன். என்னை உம்முடைய நம்பிக்கையினால் நிரப்பும். நீர் என்னுடைய வெளிச்சமாகவும் இரட்சிப்பாகவும் இருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்மை விசுவாசித்து, நீர் எனக்கென்று வைத்து வைத்திருக்கிற ஆசீர்வாதங்களுக்காக காத்திருக்கிறேன் என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.