அன்பானவர்களே, தேவன் உங்களுக்கு சுத்த இருதயத்தை தருவார். நிலைவரமான ஆவியை தந்து ஆசீர்வதிப்பார். தேவனைக் காண உதவும் பரிசுத்தம் உள்ளத்தில் இருக்கவேண்டும் என்று நீங்கள் வாஞ்சிக்கலாம். அவருடைய பிரசன்னத்தை உணரவும், அவருடைய சித்தத்தை புரிந்துகொள்ளவும் நீங்கள் விரும்பலாம். இதற்கு, சுத்தமான இருதயம் வேண்டும். தேவன் உண்மையுள்ளவர். அவர் உங்கள் உள்ளத்தை சுத்தமாக்குவார். ஒருபுறம், இவ்வுலகத்தின் சோதனைகளான கண்களின் இச்சையும், மாம்சத்தின் இச்சையும், ஜீவனத்தின் பெருமையும் நம் இருதயங்களின் சுத்தத்தை கறைப்படுத்த முயற்சிக்கலாம். மறுபுறம், கவலைகள், பயங்கள், வேதனை, காயம் எல்லாமே சுத்தத்தை மாசுப்படுத்தும். ஆம், சோதனைகள் வரும்; ஆனால் தேவன் இன்று உங்களுக்கு சுத்த இருதயத்தை அருளிச்செய்கிறார். "நான் பரிசுத்தமாயிருப்பதுபோல், நீங்களும் பரிசுத்தமாயிருங்கள்," என்று அவர் அழைக்கிறார். இந்த சுத்தத்தை தரும்படி தேவனை நோக்கிக் கூப்பிடுவோம்.  "நிலைவரமான ஆவியை உனக்குள் புதுப்பிப்பேன்," என்று அவர் வாக்குப்பண்ணுகிறார். "தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்" (சங்கீதம் 51:10) என்று வேதம் கூறுவதே உங்களுக்கான வாக்குத்தத்தமாயிருக்கிறது. அடிக்கடி நம் ஆவி அலைக்கழிப்படைகிறது. "நான் இதைச் செய்யவேண்டுமா? இந்த நபருக்கு பிரியமாக நான் நடந்துகொள்ளவில்லையென்றால், அவர் எனக்கு எதிராக திரும்பிவிடுவாரோ? அவர்கள் கேட்பதை கொடுக்கவில்லை என்றால், அவர்களுடைய உதவியை இழந்துபோவேனோ? சமரசம் செய்துகொள்ளவில்லையென்றால், நான் தோற்றுப்போவேனோ?" என்று நாம் நினைக்கலாம். இதுபோன்ற சந்தேகங்கள், தேவன்மேல் நம்பிக்கை வைப்பதிலிருந்து நம்மை புறம்பே இழுத்து அழித்துப்போடும். ஆனாலும் தம்மை முற்றிலுமாய் நம்பி, "இயேசு என்னை நேசிக்கிறார். நான் ஸ்திரமாக நின்று, வேதத்தின்படி நடப்பேன். கர்த்தருக்குக் காத்திருப்பேன்," என்று திடமாக கூறமுடியும். நிலைவரமான ஆவியைக் கொண்டு வெற்றியை கண்டுகொள்ள முடியும். பயப்படாதிருங்கள். பரிசுத்தத்தின் மூலம் நீங்கள் தேவனை தரிசிப்பீர்கள். நிலைவரமான ஆவியைக் கொண்டு இவ்வுலகை கடந்துசெல்லும் பெலனை பெற்றுக்கொள்வீர்கள். கர்த்தர் உங்களை நடத்துவார்; நீங்கள் செய்கிற யாவும் செழிக்கும்.

ஒரு வல்லமையான சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அருள்மொழி - முத்தமிழ்ச்செல்வன் தம்பதியர் அநேக உபத்திரவங்களை சந்தித்தனர். அவர் குடிப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்ததினால் குடும்பத்தில் சமாதானமில்லை; பணக்கஷ்டம் ஏற்பட்டது. சகோதரி அருள்மொழி, போராட்டத்தின்மேல் போராட்டத்தை சந்தித்தார்கள். அவர்கள் திருச்சியிலுள்ள இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்திற்கு சென்றார்கள். அங்கு ஜெப வீரர்கள் அவர்களுக்காக ஜெபித்தார்கள். ஒருநாள், இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் ஏறெடுக்கப்பட்ட ஜெபத்தின் மூலம் குடிப்பழக்கத்திலிருந்து ஒரு சகோதரியின் கணவர் விடுதலை பெற்றதைக் குறித்த சாட்சியை கேட்டார்கள். இந்த சாட்சி அவர்கள் உள்ளத்தை பெலப்படுத்தியது. அதே அற்புதம் தன் குடும்பத்திலும் நடக்கவேண்டும் என்று அவர்கள் ஜெபித்தார்கள். அவர்கள் வீடு திரும்பியபோது, கணவர் மஞ்சள்காமாலை நோயால் சுகவீனப்பட்டிருந்தார். மருத்துவர்கள், "இதற்குமேல் எதுவும் செய்ய இயலாது," என்று கைவிட்டனர். சகோதரி அருள்மொழி, மறுபடியும் ஜெப கோபுரத்திற்கு ஓடி வந்தார்கள். ஜெப வீரர்கள், "ஆண்டவரே, அவருக்கு இரண்டாவது தருணத்தை தாரும்," என்று அந்த சகோதரியுடன் இணைந்து ஊக்கமாய் ஜெபித்தனர். தேவன் இடைப்பட்டார். அவர்கள் கணவரை, மஞ்சள்காமாலையிலிருந்து மாத்திரமல்ல; குடிப்பழக்கத்திலிருந்தும் மீட்டு குணமாக்கினார். அவர் அடிமைத்தனத்திலிருந்து விடுபட்டு மறுவாழ்வு பெற்று தேவ சமாதானத்தினால் நிரப்பப்பட்டார். இந்தக் குடும்பத்திற்கு செய்ததுபோல தேவன் உங்களுக்கும், உங்களுக்கு அன்பானோருக்கும் சுத்த இருதயத்தையும் நிலைவரமான ஆவியையையும் தந்தருளுவார். அவர்தாமே இயேசுவின் நாமத்தில் உங்கள் கண்களை திறப்பாராக; உங்களோடு நடப்பாராக; விசேஷித்தவண்ணம் நேர்த்தியான வழியில் நடத்துவாராக.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, என் உள்ளம் சுத்தமாயிருக்கவேண்டும் என்று வாஞ்சித்து உம்மிடம் வருகிறேன். உம்முடைய பிரசன்னத்திலிருந்து என்னை விலக்கக்கூடிய எல்லா காரியங்களையும் அகற்றிப்போடும். நான் அசையாமல் உம்மையே நம்பும்படி நிலைவரமான ஆவியை எனக்குள் புதுப்பியும். இவ்வுலகின் சோதனைகளிலிருந்து என் உள்ளத்தை காத்து, பரிசுத்தத்தில் என்னை பெலப்படுத்தும். சந்தேகங்களும் பயங்களும் அழிவுக்கு நேராக இழுக்கும்போது, அசையாமல் ஸ்திரமாக நிற்பதற்கு எனக்கு உதவி செய்யும். நீதியில் நடக்கும்படி உம்முடைய அன்பினாலும் ஞானத்தினாலும் சமாதானத்தினாலும் என்னை நிரப்பும். ஆண்டவரே, எனக்கு அன்பானோருக்கும் இதே சுத்தத்தையும் நிலைவரமான ஆவியையும் தந்து அவர்களை ஆசீர்வதியும். என் வாழ்வில் உம் மகிமை காணப்படும்படி, என்னை உம்முடைய பூரண சித்தத்தில் நடத்தும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.