அன்பானவர்களே, "கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள்" (சங்கீதம் 126:5) என்பதே இன்றைக்கு தேவன் தரும் வாக்குத்தத்தமாகும். தம்மை நோக்கிக் கூப்பிடுகிறவர்களுக்குக் கர்த்தர் சமீபமாயிருக்கிறார். அவர்கள் சிந்தும் கண்ணீர் அவர் கணக்கில் இருக்கிறது. இப்போதும் கண்ணீர் சிந்தும் உங்களுக்கு அவர் சமீபமாயிருக்கிறார். உங்கள் இருதயமோ, அல்லது உலகமோ, ஆண்டவர் உங்களைக் கைவிட்டுவிட்டார் என்றும், உங்களுக்குச் செவிகொடுக்க மாட்டார் என்று கூறலாம். இதுபோன்ற எண்ணங்களை புறம்பே தள்ளுங்கள். கண்ணீரை அவர் கணக்கு வைத்து, உங்களுக்கு நியாயம் செய்வார். கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்று இந்த வசனம் கூறுகிறது.
பன்னிரண்டாம் வகுப்புப் படித்துக்கொண்டிருந்த ஓர் இளம்பெண்ணுக்கு மார்பில் மூன்று கட்டிகள் இருந்தன. அவர்களால் நன்றாக படிக்க இயலவில்லை. மருத்துவர், அறுவைசிகிச்சை செய்யும்படி கூறியதால், அந்தப் பெண் அறுவைசிகிச்சை செய்துகொண்டார்கள். ஆனாலும், சிகிச்சை வேதனை நிறைந்ததாய் இருந்தது. தூங்கவோ, படிக்கவோ இயலாமல் எப்போதும் அழுதுகொண்டே இருந்தார்கள். சில மாதங்கள் கழித்து மார்பில் இன்னொரு கட்டி உருவானதை கண்டு அதிர்ச்சியடைந்தார்கள். "ஏன் மறுபடியும் இப்படி நடக்கிறது? முதல் அறுவைசிகிச்சையையே என்னால் தாங்க இயலவில்லையே," என்று கவலைப்பட்டார்கள். மருத்துவர், மறுபடியும் அறுவைசிகிச்சை செய்ய வேண்டும் என்று கூறியதால், அந்த இளம்பெண் மீண்டும் வலியை சகிக்க வேண்டியதிருந்தது. அடுத்த மாதத்தில், கட்டிகள் மார்பு முழுவதும் பரவ ஆரம்பித்தன. "இந்த வேதனையோடு இனி என்னால் வாழ இயலாது. என் குடும்பத்திலுள்ள பணமெல்லாம் செலவழிந்துபோனது," என்று எண்ணி மனமுடைந்துபோனார்கள். இப்போது 17 கட்டிகள் இருப்பதாக மருத்துவர்கள் கூறினார்கள். கட்டி ஏன் வருகிறது என்ற காரணமும் தெரியவில்லை. அவர்கள் நம்பிக்கையை முற்றிலும் இழந்துபோனார்கள். அப்போது நாங்கள் குடும்பமாக ராஞ்சி ஜெப கோபுரத்திற்கு வருவதை அவர்கள் கேள்விப்பட்டுள்ளார்கள். ஆகவே, வந்து எங்களை சந்தித்து ஜெபித்தார்கள். நான் ஜெபித்தபோது தேவனுடைய வல்லமை தன்னை நிறைத்ததாக அவர்கள் கூறினார்கள். அவர்கள் போய் மருத்துவர்களிடம் பரிசோதித்தபோது, 17 கட்டிகள் இருந்தததற்கான அறிகுறியே இல்லை. எல்லா வலியும் மறைந்துபோயிருந்தது. இன்னொரு அறுவைசிகிச்சை செய்யவேண்டிய அவசியமும் இல்லை. "இன்று வரை நான் நன்றாக இருக்கிறேன். கட்டிகள் மறுபடியும் வரவில்லை. ஆண்டவர் என்னை தொட்டிருக்கிறார்," என்று கூறினார்கள். அதே ஆண்டவர் இயேசு இப்போது உங்களை தொட்டு, உங்கள் கண்ணீரை கெம்பீர சத்தமாக மாற்றுவார்.
ஜெபம்:
பரம தகப்பனே, உள்ளத்தில் கண்ணீரோடும் பாரத்தோடும் உம் முன்னே வருகிறேன். கண்ணீரோடே விதைக்கிறவர்கள் கெம்பீரத்தோடே அறுப்பார்கள் என்ற உம்முடைய வாக்குத்தத்தத்தை நான் விசுவாசிக்கிறேன். என்னுடைய வேதனையை, போராட்டங்களை, பயங்களை உம்முடைய பாதத்தில் வைக்கிறேன். என்னுடைய கண்ணீர் எல்லாவற்றையும் நீர் பார்க்கிறீர் என்றும், நான் பாடு அனுபவிக்கும்போது சமீபமாயிருக்கிறீர் என்று விசுவாசிக்கிறேன். என்னை உம்முடைய சமாதானத்தினாலும் ஆறுதலினாலும் நிரப்பும். என்னுடைய காயங்களை ஆற்றி, சந்தோஷத்தை திரும்ப தாரும். என்னுடைய கண்ணீரை கெம்பீர சத்தமாக மாற்றும்; உம்முடைய அன்பும் கிருபையும் என் வாழ்க்கை முழுவதும் பிரகாசிக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.