அன்பானவர்களே, "கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்" (சங்கீதம் 37:4) இதுவே உங்களுக்கான தேவ வாக்குத்தத்தமாகும். தேவன் உங்களை ஆசீர்வதிப்பதற்கு வாஞ்சையாயிருக்கிறார்; நீங்கள் அவருக்குள் மனமகிழ்ச்சியாயிருப்பதே அவரிடமிருந்து ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்ளும் வழியாகும். ஆண்டவருக்குள் களிகூருவது உங்கள் இருதயத்திலிருந்து எழும்ப வேண்டும். உங்கள் மனத்தில் கவலைகள், வேதனை, பயம், தோல்வியை பற்றிய சிந்தனை இருக்கலாம்; ஆனால், உங்கள் இருதயம் அவற்றையும் தாண்டி எழும்ப முடியும்.  தேவன், உங்கள் இருதயத்தை தம்முடைய ஆலயமாக்கியிருக்கிறபடியினால், அவர் அதின்மேல் பிரியமாயிருக்கிறார்.

தேவனுடைய வல்லமையான ஊழியரான ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த், பல ஆண்டுகளுக்கு முன்னர் ஒரு பெரிய விசுவாச அனுபவத்தை கண்டார். மரண தறுவாயில் இருந்த ஒரு சிறுபெண்ணுக்காக ஜெபிக்கும்படி அவரை அழைத்தார்கள். மாடியறையில் இருந்த சிறுபெண்ணுக்கு அவரை ஜெபிக்க அனுப்பிவிட்டு, குடும்பத்தினர் கீழ்த்தளத்திலே இருந்தனர். அவர் அறைக்குள் நுழைந்து, பிள்ளையின்மேல் கைகளை வைத்தபோது, பிள்ளையின் உயிர் பிரிந்தது. அப்போது, சாத்தான் தோன்றி, "ஸ்மித், உன் இயேசுவை பார். நீ வந்தாய்; ஜெபித்தாய். ஆனால், இப்போது பிள்ளை இறந்துபோனது. இப்போது என்ன செய்வாய்? நீ வெளியே சென்றால், நீ ஜெபித்ததால்தான் பிள்ளை மரித்துப்போனது என்று சொல்வார்கள். உன்னுடைய ஊழிய அழைப்பை குறித்த சந்தேகம் அவர்களுக்கு வரும். உனக்கு எதிர்காலமே இருக்காது," என்று கூறி கேலி செய்தான். ஆனால், அவருக்குள் ஒரு வல்லமை தூண்டிக்கொண்டே இருந்தது. தேவ ஆவியானவர் எழும்பி, "ஸ்மித், நீ தோற்றுப்போனதாக நினைக்கலாம். ஆனால், உனக்குள் இருக்கும் தேவன், செங்கடலை பிளந்தவர். அவரை ஸ்தோத்திரி. அவர் யோர்தான் நதியை பிரித்து, தம்முடைய ஜனங்களை நடத்தினார். அவரை ஸ்தோத்திரி. வனாந்தரத்தில் அவர் திரளான ஜனங்களை போஷித்தார். அவரை ஸ்தோத்திரி," என்று கூறினார். இயேசு செய்த அற்புதங்களை பரிசுத்த ஆவியானவர் நினைப்பூட்டினார்; ஸ்மித் விக்கிள்ஸ்வொர்த் ஒவ்வொன்றையும் அறிக்கையிட்டபோது, தேவ வல்லமை அவருக்குள் பெருகியது. ஆண்டவரின் வல்லமையிலும் அன்பிலும் அவர் திளைத்து ஆராதிக்க ஆரம்பித்தார். அவர் பெலவீனப்பட்டு விழும்படி தேவ பிரசன்னம் வல்லமையாய் அவரை நிறைத்தது. அவர் விழித்தபோது, இனிமையான பியானோ இசை கேட்டது. படுக்கையை பார்த்தார்; அங்கே அந்த சிறுபெண் இல்லை. அவர் கீழே இறங்கி ஓடினார். அங்கே, அந்த சிறுபெண், ஜீவனோடு சந்தோஷமாக பியானோ வாசித்துக்கொண்டிருந்தாள்.

"கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிரு; அவர் உன் இருதயத்தின் வேண்டுதல்களை உனக்கு அருள்செய்வார்". கர்த்தரிடத்தில் மனமகிழ்ச்சியாயிருப்பது எப்படி? அவருடைய வசனத்தில் மகிழ்ந்திருக்கவேண்டும். "கர்த்தருடைய வேதத்தில் பிரியமாயிருந்து, இரவும் பகலும் அவருடைய வேதத்தில் தியானமாயிருக்கிற மனுஷன் பாக்கியவான்" என்று வேதம் கூறுகிறது (சங்கீதம் 1:2). தேவனுடைய வார்த்தை ஜீவனாயிருக்கிறது. நீங்கள் அதை தியானிக்கும்போது, அவரது வாக்குத்தத்தம் உங்கள் வாழ்வில் நிறைவேறும். அவருடைய சமுகத்தில் மகிழ்ந்திருங்கள். கர்த்தரில் மனமகிழ்ச்சியாயிருக்கும்போது, பூமியின் உயர்ந்த இடங்களில் உன்னை ஏறியிருக்கும்டி பண்ணுவார் என்று வேதம் கூறுகிறது (ஏசாயா 58:14). தேவன், தம்முடைய இரத்தத்தினால் உங்களை கிரயம் பண்ணியிருக்கிறார்; அவருக்குள் உங்களுக்கு சுதந்தரம் இருக்கிறது. அவர் உங்களுக்கென்று தெய்வீக பாதையை ஆயத்தம்பண்ணியிருக்கிறார் (யாத்திராகமம் 23:20). அவரது தூதன் உங்களை பாதுகாப்பான்; அவருடைய ஆவியானவர் உங்களை வழிநடத்துவார். மகிழ்ச்சியோடு கீழ்ப்படிந்திருங்கள். அனுதினமும் அவருடைய சித்தத்திற்கு ஒப்புக்கொடுத்தல் என்பது, அவருக்கு பயப்படும் பயத்தையே குறிக்கிறது. ஆகவேதான் நாம், "உம்முடைய சித்தம் பரலோகத்தில் செய்யப்படுகிறதுபோல, பூமியிலும் செய்யப்படுவதாக," என்று ஜெபிக்கிறோம். இவ்வாறு நீங்கள் கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாயிருந்து, உபத்திரவங்களையும் சோதனைகளையும் கடந்து செல்லும்போது, தேவன் உங்கள் இருதயத்தின் விருப்பங்களை நிறைவேற்றுவார்.

வேதம், உங்கள் பிள்ளைகள் பூமியில் பலத்திருப்பார்கள். இருளின் வல்லமையை அவர்களை மேற்கொள்ளாது. ஆஸ்தியும் ஐசுவரியமும் உங்கள் வீட்டில் இருக்கும். தேவனே உங்களுக்கு வேண்டியவற்றை அருளிச்செய்வார். நீதி நிலைத்திருக்கும். இருள் உங்களை மேற்கொள்ள முயன்றாலும் உங்கள் வெளிச்சம் பிரகாசிக்கும் என்று கூறுகிறது (சங்கீதம் 112:1-10); இந்த வாக்குத்தத்தத்தை அது உறுதியும் செய்கிறது (ஏசாயா 60:1-3). இந்த ஆசீர்வாதங்களை இன்றைக்குப் பெற்றுக்கொள்ள ஆயத்தமாகுங்கள். நீங்கள் பெற்ற ஆசீர்வாதங்களை ஒவ்வொன்றாக எண்ணிப்பாருங்கள்; கர்த்தர் செய்தவை உங்களுக்கு வியப்பை தரும். பயப்படாதிருங்கள். கர்த்தருக்குள் மனமகிழ்ச்சியாயிருங்கள். அவர் உங்கள் இருதயத்தின் வேண்டுதல்களை அருள்செய்வார். அவரே உயிர்த்தெழுதல்; அவர் உங்களை வாழவைப்பார்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, நீரே எனக்கு சந்தோஷமும் பெலனாகவும் இருக்கிறபடியினால் உம்மில் மகிழ்கிறேன். எல்லா பயத்தையும் சந்தேகத்தையும் நான் மேற்கொள்ளும்படி என் இருதயத்தை உம்முடைய பிரசன்னத்தினால் நிரப்பிடும். இரவும் பகலும் உம்முடைய வசனத்தை தியானித்து, அதை அஸ்திபாரமாக்கிக்கொள்வதற்கு எனக்குப் போதித்தருளும். என் வாழ்வில் உம்முடைய சித்தம் நிறைவேறும்படி நீர் எனக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கிற பாதையில் என்னை வழிநடத்தும். வஞ்சனைகளுக்கு என்னை விலக்கிக் காத்து, என்னை நீதியின் பாதையிலும், சத்தியத்தின் பாதையிலும் நடத்தும். என் வீட்டில் சமாதானம் நிலவும்படி, என் கையின் பிரயாசங்கள் வாய்க்கும்படி, என் இருதயத்தில் திடவிசுவாசம் உண்டாகும்படி என்னை ஆசீர்வதிப்பீராக. நான் செய்கிற எல்லா காரியங்களிலும் உம்மை மகிமைப்படுத்தும்படி என்னுடைய வெளிச்சம் இருளிலும் பிரகாசிக்கும்படி செய்யும். என் இருதயத்தின் விருப்பங்களை நீர் அருளிச்செய்வீர் என்ற வாக்குத்தத்தத்தை நம்பி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.