அன்பானவர்களே, "விடியற்கால வெளுப்பைப்போல உன் வெளிச்சம் எழும்பி, உன் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்த்து, உன் நீதி உனக்கு முன்னாலே செல்லும்" (ஏசாயா 58:8) என்பதே இன்றைக்கு உங்களுக்கான வாக்குத்தத்த வசனமாகும். உங்கள் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும்; உங்கள் வாழ்வில் எல்லா இருளும் வெளிச்சமாக மாறும். விடியற்கால வெளுப்பு இரவை விலகச்செய்வதுபோல, தேவனுடைய வெளிச்சம் உங்களுக்குள் எழும்பும்; எல்லா இருளும் அகன்று போகும். "நான் உலகத்திற்கு ஒளியாயிருக்கிறேன், என்னைப் பின்பற்றுகிறவன் இருளிலே நடவாமல் ஜீவஒளியை அடைந்திருப்பான்" (யோவான் 8:12) என்று இயேசு கூறியுள்ளார். இயேசுவே ஜீவனாக இருக்கிறார். அவரே வெளிச்சமாக இருக்கிறார்; வழியாகவும் இருக்கிறார். அவர் உங்களுக்கு எல்லாவிதங்களிலும் போதுமானவராயிருக்கிறார். இன்று, உங்கள் இருதயத்தை அவருக்கு திறந்துகொடுங்கள். "ஆண்டவரே, நான் இருளுக்குள் இருக்கிறேன். வியாதி என்னை மேற்கொள்கிறது. இந்தப் பாடுகளை என்னால் சகித்துக்கொள்ள இயலவில்லை," என்று அவரை நோக்கிக் கூப்பிடுங்கள். இப்போதே ஆண்டவர் உங்களிடம் வருகிறார்; எல்லா இருளையும் அகற்றி, சுகவாழ்வை அளிக்கிறார்; உங்களை சீர்ப்படுத்துகிறார்.

திருப்பதியைச் சேர்ந்த சுனிதா என்ற சகோதரியின் சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். அவர்களுக்குத் திருமணமாகி முதல் குழந்தையும் பிறந்தது. இரண்டாம் முறை கருத்தரித்திருந்தபோது, வெளியே நடக்கையில் கல் தடுக்கி கீழே விழுந்துவிட்டார்கள். கருவிலிருந்த குழந்தை இறந்துபோயிற்று. அதற்குப் பிறகு அதிகமான இரத்தப்போக்கு ஏற்பட்டது. ஃபைப்ராய்டு என்னும் கட்டிகளும் உருவாகின. உடனடியாக அறுவை சிகிச்சை செய்யவேண்டுமென்று மருத்துவர்கள் கூறினர். அறுவை சிகிச்சை செய்தபோது, ஒரு கட்டி உடைந்து, அதிலிருந்து சீழ் முதுகெலும்பினுள் சென்றுவிட்டது. அதனால் கடுமையான வேதனை ஏற்பட்டது. முதுகில் அவ்வளவு தீவிரமான வலியுடனும், பணக்கஷ்டத்துடனும் அவர்கள் திரும்ப வேலைக்குச் செல்ல வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது.

இந்த வேதனையான சூழ்நிலையில், ஒருநாள் காலை, சகோதரி சுனிதா, இயேசு அழைக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்துக்கொண்டிருந்தார்கள். நான் ஜெபித்தபோது, "சுனிதா, தேவனுடைய கரம் உங்கள்மேல் வருகிறது. அவர் உங்களை மறுரூபப்படுத்தி, உங்கள் எலும்புகளை குணமாக்குகிறார். நீங்கள் மூச்சுவிட திணறிக்கொண்டிருக்கலாம். ஆனால், இயேசு உங்களை சுகப்படுத்துகிறார்," என்று கூறினேன். அப்போதே, சந்தோஷம் அவர்கள் இருதயத்தில் நிரம்பி வழிந்தது; சமாதானம் ஆட்கொண்டது. அவர்கள் சரீரத்திற்குள் ஆரோக்கியம் பாய்ந்துசென்றது. அவர்கள் 100% பூரணமாக சுகம்பெற்றார்கள்.

பாடுபடுகிறவர்கள், சிறுபிள்ளைகள், கைம்பெண்களுக்கு உதவுகிற சீஷா ஊழியத்தை தாங்கி ஏழைகளுக்கு உதவுகிறதன் மூலம் சகோதரி சுனிதா இப்போது இயேசுவுக்கு ஊழியம் செய்கிறார்கள். தேவன், அவர்களுக்குச் செய்ததுபோலவே உங்களுக்கும் செய்வார். உங்கள் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும்; இயேசுவின் ஒளியினால் உங்கள் வாழ்வு பிரகாசிக்கும். ஆனாலும், இயேசுவின் ஒளி பிரகாசிக்கும்போது, உலகின் அந்தகாரம் அதிகரிக்கும். "பகற்காலமிருக்குமட்டும் நான் என்னை அனுப்பினவருடைய கிரியைகளைச் செய்யவேண்டும்; ஒருவனும் கிரியை செய்யக்கூடாத இராக்காலம் வருகிறது" (யோவான் 9:4) என்று இயேசு கூறியிருக்கிறார். இது தற்போது அவசரமான காரியமாக இருக்கிறது. ஆகவேதான் தாம் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தின் மூலம் தினமும் 24 மணி நேரமும் சேவை செய்து வருகிறோம். மக்கள், இரவு பகல் எந்நேரமும் தொடர்பு கொள்ளலாம்; நாம் அவர்களுக்காக ஜெபிக்கிறோம். ஜெபத்தை நாடி, விடுதலையை விரும்பி, மாதந்தோறும் ஏறத்தாழ மூன்றரை லட்சம் மக்கள் ஜெப கோபுரத்தை தொடர்பு கொள்கின்றனர். லட்சக்கணக்கானோர் எங்களுக்கு கடிதம் எழுதுகிறார்கள்; கணக்கற்ற மக்கள் நேரடியாக ஜெப உதவி பெறுவதற்கு வருகிறார்கள். இருளிலிருந்து அவர்களை விடுவிக்கும்படி வெளிச்சம் அவர்மேல் பிரகாசிக்கவேண்டும் என்று ஒவ்வொருக்காகவும் ஜெபிக்கிறோம். ஜெபிக்கிறதற்கும் மக்களுக்கு பயிற்சி அளிக்கிறோம். இந்த தெய்வீக ஊழியத்தை நிறைவேற்றுவதற்காக அர்ப்பணிப்பு மிக்க ஆயிரக்கணக்கானோர் எங்களுடன் இணைந்து பணியாற்றுகிறார்கள். மாதந்தோறும் இந்தப் பணியை நாங்கள் செய்வதற்கு இந்த ஊழியத்தின் உண்மையுள்ள பங்காளர்களே காரணமாக இருக்கிறார்கள். இருளில் இருக்கிறவர்களுக்கு இயேசுவின் ஒளியை நீங்களும் கொண்டு வரலாம். தேவனுடைய ஒளியினால் பிரகாசிக்கும் உங்கள்மேல் தேவ கிருபை இருப்பதாக. இந்த நாள் உங்களுக்கு ஆசீர்வாதமாக விளங்கட்டும்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம்முடைய வெளிச்சம் என்மேல் உதிக்கவேண்டும் என்று வாஞ்சித்து உம்மிடம் வருகிறேன். என் வாழ்வில் காணப்படும் எல்லா இருளையும் அகற்றும்; என்னுடைய சுகவாழ்வு விடியற்கால வெளுப்பைப் போல எழும்பட்டும். நீரே உலகத்திற்கு வெளிச்சமாயிருக்கிறீர். எனக்கு வழிகாட்டி, பயத்திலிருந்து என்னை விடுவித்தருளும். ஜீவஒளியினால் என்னை நிரப்பும். எல்லா வியாதியையும் துக்கத்தையும் அகற்றும். உம்முடைய சமுகத்தின் பிரகாசம் என்னை சீர்ப்படுத்துவதாக. இருளில் இருக்கிற மக்களுக்கு நம்பிக்கையை அளிக்கும்படி உம்முடைய வெளிச்சம் என் மூலமாக பிரகாசிக்கட்டும். ஆண்டவரே, என் சுகவாழ்வு சீக்கிரத்தில் துளிர்க்கும் என்ற உம்முடைய வாக்குத்தத்தத்தை நம்புகிறேன். சத்தியத்தின் பாதையில் தைரியமாக நடக்கும்படி உம்முடைய கிருபை என்னை பெலப்படுத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.