அன்பானவர்களே, வேதம், "சுத்த இருதயத்தை விரும்புகிறவனுடைய உதடுகள் இனிமையானவைகள்; ராஜா அவனுக்குச் சிநேகிதனாவான்" (நீதிமொழிகள் 22:11) என்று சொல்கிறது. நாம் தேவனுடைய வார்த்தையினால் நிறைந்திருக்கவேண்டும். அப்போதுதான் நம் வாய் கிருபையுள்ள வார்த்தைகளைப் பேசும். "இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்" (மத்தேயு 12:34) என்று வேதம் கூறுகிறது. ஒருவர் நிரம்பி வழியத்தக்கவிதமாக பரிசுத்த ஆவியினால் நிரப்பப்பட்டிருந்தால், அவருடைய வாயும் தேவனுடைய வார்த்தைகளினால் நிரம்பியிருக்கும். அப்போதுதான் அவர் பேசுகிறது தீர்க்கதரிசன வார்த்தையாக இருக்கும். பரிசுத்த ஆவியினால் நிரப்பப்படும் வரைக்கும் அவரை பரிசுத்த ஆவியானவர் சுமந்து செல்வார். இயேசு இந்த உலகில் இருந்தபோது பரிசுத்த ஆவியினால் நிறைந்திருந்தார். தேவன் அவருக்குத் தமது ஆவியை அளவில்லாமல் கொடுத்திருக்கிறார் (யோவான் 3:34); அவருடைய வாயிலிருந்து கிருபையுள்ள வார்த்தைகள் புறப்பட்டன (லூக்கா 4:22).

உலகப்பிரகாரமான வாழ்க்கை வாழும் மனிதன் எவ்வாறு பேசுகிறான்? "அவன் வாயின் சொற்கள் வெண்ணெயைப்போல மெதுவானவைகள், அவன் இருதயமோ யுத்தம்; அவன் வார்த்தைகள் எண்ணெயிலும் மிருதுவானவைகள், ஆனாலும் அவைகள் உருவின பட்டயங்கள்" (சங்கீதம் 55:21)என்று தெளிவாகக் கூறுகிறது. பலவேளைகளில் நாமும் அந்த மிருதுவான வார்த்தைகளினால் வஞ்சிக்கப்பட்டு, அவர்களுடன் உலகத்திற்குள் சென்றுவிடுகிறோம்; ஆகவே, பரிசுத்த ஆவியினால் ஆளப்படும்படி அவரால் நிரப்பப்பட்டிருக்கவேண்டும். வேதம், "மாம்சசிந்தை மரணம்; ஆவியின் சிந்தையோ ஜீவனும் சமாதானமுமாம்" (ரோமர் 8:6)என்று கூறுகிறது. உலக மக்களின் வார்த்தைகளால் வஞ்சிக்கப்படாதிருங்கள். இன்னொருபுறம் தாவீதைப்போல, "தேவனே, சுத்த இருதயத்தை என்னிலே சிருஷ்டியும், நிலைவரமான ஆவியை என் உள்ளத்திலே புதுப்பியும்" (சங்கீதம் 51:10)என்று தேவனை நோக்கிக் கூப்பிடுங்கள். கிருபையுள்ள வார்த்தைகளைப் பேசுவதற்கு சுத்த இருதயம் அவசியம். சுத்த இருதயம், தேவனுடைய சத்தியத்தினால் நிறைந்திருக்கிறது. தேவனுடைய சத்தியம் நம் இருதயத்தை சுத்தமாக்குகிறது; "மரமானது அதின் கனியினால் அறியப்படும்" (மத்தேயு 12:33)என்று வேதம் கூறுகிறவண்ணம் பரிசுத்தமாய் வாழச்செய்கிறது.

வேதத்தில் தானியேல் தேவனை நோக்கி ஒரு நாளைக்கு மூன்று முறை ஜெபித்தான். அதனால், தேவன் அவனுக்கு வரும் நாட்களைக் குறித்த வெளிப்பாடுகளைக் கொடுத்தார்; அவன் அதிக ஞானமுள்ளவனாக இருந்தான். தரியு ராஜா, தானியேலின் மிகுந்த சாமர்த்தியத்தை கண்டுகொண்டான்; ராஜ்யத்தின் அதிபதியாக்கவும் எண்ணினான். ஆனால், தானியேலுடன் வேலை செய்த பிரதானிகள் அதை விரும்பவில்லை. தானியேலை சிங்கக்கெபிக்குள் போடும்படி அவர்கள் ஒரு சட்டத்தை இயற்றினார்கள். தானியேல் சிங்கக் கெபிக்குள் போடப்பட்டதும் தரியு ராஜா மிகவும் சங்கடப்பட்டான். அவன் தானியேலின் நண்பனாகியிருந்தான்; ஆகவே, சிங்கக் கெபிக்குள் அவன் போடப்படுவதை விரும்பவில்லை. இரவு முழுவதும் ராஜாவால் உறங்க முடியவில்லை. அதிகாலையில் அவன் சிங்கக் கெபிக்கு நேராக ஓடி, "தானியேலே நீ தேவனை ஆராதிக்கிறாய். உன் தேவன் உன்னை சிங்கங்களின் வாய்க்கு தப்புவித்தாரா?" என்று கேட்டான். அந்த அளவுக்கு ராஜா, தானியேலை நேசித்தான். நம்முடைய இருதயங்களில் தேவனுடைய வார்த்தை இருக்கும்போது, நாம் தேவனுடைய கிருபையுள்ள வார்த்தைகளைப்பேசும்போது, ராஜாவும் நமக்கு நண்பராவார். தேவன் உங்களையும் அப்படியே உருவாக்குவாராக. இன்றைக்கு நாம் தியானித்ததுபோன்று சுத்த இருதயத்தை ஆண்டவர் உங்களுக்குத் தருவாராக.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, ஜீவனுள்ள வார்த்தை என்னை நிரப்புவதற்காக, மறுரூபப்படுத்துவதற்காக, சுத்தப்படுத்துவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, என்னுள் சுத்த இருதயத்தை சிருஷ்டிக்கவேண்டுமென்று, என்னுடைய ஆவியை உயிர்ப்பிக்கவேண்டுமென்று ஜெபிக்கிறேன். என்னுடைய வார்த்தைகள் எப்போதும் கிருபையுள்ளவையாகவும் உமக்குப் பிரியமானவையாகவும் இருக்கும்படி என் இருதயம் உம்முடைய சத்தியத்தினால் நிரப்பி வழியட்டும். இந்த உலகத்தின் மிருதுவான வார்த்தைகளால் நான் வஞ்சிக்கப்படாதிருக்கவும் உம்முடைய பரிசுத்த ஆவியினால் தொடர்ந்து வழிநடத்தப்படவும் உதவி செய்யும். இயேசுவை நீர் பரிசுத்த ஆவியினால் அளவில்லாமல் நிரப்பியிருந்தவாறும், தானியேலுக்கு ஞானத்தை கொடுத்திருந்தவாறும் நான் சத்தியத்திலும் பரிசுத்தத்திலும் நடக்கும்படி தயவாய் உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிரப்பும். என் வார்த்தைகள் ராஜாக்களையும் சிநேகிதராக்கும்படி நற்பயனை கொடுக்கட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.