"என்னை விருந்துசாலைக்கு அழைத்துக்கொண்டுபோனார்; என்மேல் பறந்த அவருடைய கொடி நேசமே" (உன்னதப்பாட்டு 2:4 ) என்று வேதம் சொல்லுகிறது. ஆம், அன்பானவர்களே, தேவன் உங்களை தமது விருந்துசாலைக்குள் அழைத்துச் செல்லப்போகிறார். ஒரு திருமண விருந்தை எண்ணிக்கொள்ளுங்கள். தங்கள் மகன் அல்லது மகளுடைய திருமணத்தை நடத்தும் பெற்றோர், "நம்முடைய விருந்தினர்களுக்கு சிறந்ததைக் கொடுப்போம்," என்று கூறுகிறார்கள். சிறந்த பிரியாணி, உச்சிதமான இனிப்புகள், அனைவரும் மகிழும்படி புதிதான, விருப்பமான ஓர் உணவு என்று திட்டமிடுவார்கள். சில சமயங்களில் சமையல்காரரும் "இந்த திருமணத்திற்கென்றே புத்தம் புதிய உணவு ஒன்றை தயார் செய்தேன்," என்று பெருமிதமாகக் கூறுவார். வந்து செல்லும் அனைவரும், "இதுதான் சிறந்த கல்யாணம். சிறந்த விருந்து," என்று மகிழ்ச்சியோடு கூறுவார்கள். பூமிக்குரிய பெற்றோர் இவ்வாறு மகிழும்போது, தம் மணவாட்டியாகிய உங்களில் நம் பரம பிதா எவ்வளவு மகிழ்வார்! நீங்கள் இயேசுவோடு இணைக்கப்பட்டிருக்கிறீர்கள். அவரோடு ஒன்றாயிருக்கிறீர்கள். ஆகவே, அவர் தம் நேசக்கொடியை உங்கள்மேல் பறக்கச் செய்து, உங்களை தனிமைப்படுத்தவோ, பாடுபடுத்தவோ அல்ல, "வா, வந்து என் அன்பை அனுபவி," என்று கூறி விருந்துசாலைக்கு அழைத்துச்செல்கிறார்.

ஆனால், நீங்கள் அனுதினமும் சிலுவையை எடுத்து உங்களை நீங்களே வெறுக்கவேண்டும். உலகத்திற்கும் இவ்வுலகின் தீய உறவுகளுக்கும் மறுப்பு தெரிவிக்க வேண்டும். பரிசுத்தமாக்கப்பட்ட வாழ்க்கை வாழவேண்டும்; ஆனால், அது பாடுபடுவதல்ல; இயேசுவின் ஆசீர்வாதங்களின் விருந்தை உண்ணும் பாதை அது. வேதம், காலைதோறும் அவரது இரக்கங்கள் புதிதாயிருக்கிறது என்று சொல்லுகிறது. தினமும், நாம், "இன்றைக்கு என்ன விசேஷம்?" என்று கேட்கிறோம். அவர் நமக்கு புதிதான ஒன்றை தருகிறார். வீட்டில் காலையில் என் மனைவி, இன்றைக்கு பூரி (மகிமையான நாள்) என்பாள். மறுநாள் இட்லி, பிறகு தோசை அல்லது ரொட்டி. தேவன் ஒருபோதும் நமக்கு முந்தின நாள் உணவை தருவதில்லை. ஏன்? தினமும் பிசாசின் தாக்குதல் புதிதாயிருக்கிறது; தேவன், அதை மேற்கொள்ள புதிய இரக்கத்தின் விருந்தை ஆயத்தம்பண்ணுகிறார். அவர் உங்களைப் பெலப்படுத்துவார்; தூக்குவார்; மகா உயரங்களுக்கு எழும்பும்படி செய்வார். பயப்படாதிருங்கள். ஆண்டவர் உங்களை நேசிக்கிறார். அவர் உங்களுக்கு விருந்து தருவார்.

வறண்ட பாதை வழியே நீங்கள் நடந்துசென்றாலும், தேவன், "நீ கேட்டதைக் காட்டிலும் மிக அதிகமாக செய்வேன். உன்னால் வைத்துக்கொள்ள இயலாத அளவு ஆசீர்வாதங்களை வானத்தின் பலகணிகளைத் திறந்து ஊற்றுவேன்," என்று கூறுகிறார். நீங்கள் மகிழ்ச்சியினால் சிரிப்பீர்கள். ஆபிரகாமும் சாராளும் தேவன் தங்கள் முதிர்வயதில் குமாரனை கொடுத்தபோது, 'நகைப்பு' என்று பொருள்தரும் வண்ணம் ஈசாக்கு என்று பெயரிட்டனர். தேவன், பிசாசுக்கு முன்பாகவும் உங்களுக்குக் கெடுதி செய்த விரோதிகளுக்கு முன்பாகவும் உங்களுக்கு விருந்தை ஆயத்தம் செய்வார். அவர் பொதுவெளியில் உங்களை கனப்படுத்துவார். இதை இயேசுவின் நாமத்தில் கூறுகிறேன். அந்த விருந்து இப்போதே ஆரம்பமாவதாக.

காருண்யா பல்கலைக்கழகத்தில் படித்த வின்ஸ்டன் ஜேம்ஸ் டேனியல் என்ற மாணவனை குறித்து உங்களோடு பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். அவருடைய தந்தையும் காருண்யாவில் படித்தவர்தாம். வின்ஸ்டன் பி.டெக். ஆர்ட்டிபிஃஷியல் இன்டெலிஜென்ஸ் படிப்பில் சேர்ந்தார்.  காருண்யாவில் விசுவாசத்தில் வளர்ந்த அவர் உலகத்தை எதிர்கொள்வதற்கு பயிற்சி பெற்றார்; அதே சமயம் இயேசுவுடனும் நெருக்கமாக இணைந்திருந்தார். தேவன் அவருக்கு சமாதானத்தை, நோக்கத்தைக் கொடுத்ததுடன் இறுதியாண்டில் வளாக நேர்முகத் தேர்வில் Sabre Corporation என்ற நிறுவனத்தில் ஆண்டுக்கு 13.5 லட்ச ரூபாய் ஊதியத்தில் வேலையும் கிடைக்கும்படி செய்தார். தனக்குள் தேவ வெளிச்சத்தைப் பெற்றவராக அவர் வெளியேறினார். வின்ஸ்டனுக்கு கர்த்தரின் விருந்து கிடைத்ததுபோல, தேவன் உங்கள்பேரில் வைத்திருக்கிற அன்பினிமித்தம் விருந்தில் பங்குபெறுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, உம்முடைய விருந்துசாலைக்கு என்னை அழைத்து வந்ததற்காகவும், உம்முடைய நேசக்கொடியை என்மேல் பறக்கச் செய்ததற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். வனாந்தரத்தின் மத்தியிலும் வறட்சியின் மத்தியிலும் உம்முடைய புதிய இரக்கங்களினால், சந்தோஷத்தினால், பரிபூரணத்தினால் எனக்கொரு பந்தியை ஆயத்தம் செய்கிறீர். நீர் எதையும் வைத்துக்கொள்கிற தேவனல்ல; நான் கேட்கிறதற்கும் நினைக்கிறதற்கும் மேலாக என்னை ஆசீர்வதிக்க விரும்புகிற தேவனாயிருக்கிறீர். நான் வறண்ட பாதையில் தனிமையாக நடந்தபோதிலும் என் சத்துருக்கள் முன்னிலையில் எனக்கொரு பந்தியை ஆயத்தம் செய்கிறீர் என்று விசுவாசிக்கிறேன். உம்முடைய அன்பில் நான் இளைப்பாறவும், உம்முடைய வாக்குத்தத்தங்களில் களிகூரவும், உம்முடைய பரிபூரண கிருபையை பெற்றுக்கொள்ளவும் உதவி செய்யும். உம்முடைய திட்டத்திற்கு என்னை அர்ப்பணிக்கிறேன். உம்முடைய இரக்கத்தின், கனத்தின், நகைப்பின் விருந்து இன்றே என் வாழ்வில் தொடங்கட்டும் என்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.