"கர்த்தர் தம்மில் அன்புகூருகிற யாவரையும் காப்பாற்றி, துன்மார்க்கர் யாவரையும் அழிப்பார்" (சங்கீதம் 145:20) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தம். கர்த்தர் உங்களைக் காக்கிறவர் (சங்கீதம் 121). அவர் எல்லா தீங்குக்கும் உங்களை விலக்கிக் காப்பார். உங்கள் போக்கையும் வரத்தையும் பாதுகாப்பார். இஸ்ரவேல் ஜனங்கள்மேல் தம்முடைய நாமத்தை உரைத்து, இந்த ஆசீர்வாதத்தை கூறுமாறு மோசேக்கு கட்டளையிட்டார் (எண்ணாகமம் 6:24). கர்த்தர் உங்களை ஆசீர்வதித்து, உங்கள் ஆத்துமாவை காத்துக்கொள்வார். பல ஆண்டுகளுக்கு முன்பு, எகிப்தின் மன்னர்களான பார்வோன்கள், தாங்கள் இறந்ததும் தங்கள் கரங்களை மார்பின்மீது வைத்து அடக்கம்பண்ணுமாறு கூறியிருந்தனர். அப்போதுதான் பிசாசு ஆத்துமாவை எடுத்துக்கொண்டு நரகத்திற்குச் செல்லமாட்டான் என்று நம்பினர். இறந்த மனிதரின் கரங்களை மார்பின்மீது வைப்பதால் பிசாசு ஆத்துமாவை திருடிக்கொண்டு செல்வதை தடுக்க முடியாது. நம் ஆத்துமா தேவனுக்குக் கொடுக்கப்பட வேண்டும். நாம் ஜீவிக்கும்போதே, நம் ஆத்துமாவை தேவனிடம் கொடுக்கவேண்டும்.
இயேசு, "உன் இருதயத்தை எனக்குத் தா. நான் உள்ளே வருவேன். அதனுள் நான் வாசம்பண்ணி, சகல ஆசீர்வாதங்களையும் நீ அனுபவிக்கும்படி செய்வேன்," என்கிறார் (வெளிப்படுத்தல் 3:20). ஆம், உங்கள் இருதயத்தை ஆண்டவருக்கு தந்தால், அவர் அதைக் காத்துக்கொள்வார். நீங்கள் இந்த உலகை விட்டுச் செல்லும்போது, பரலோகத்திற்குள் பிரவேசிக்கப்பண்ணுவார். அப்படிச் செய்யும்போது, இந்த உலகில் உங்களை ஆசீர்வாதமாக வைப்பார். ஆம், உலகத்தின் மீதல்ல; பணத்தின் மீதல்ல; தேவன்மேல் எப்போதும் அன்புகூரும்போது உங்கள் ஆத்துமா காக்கப்படும். உங்கள் ஆத்துமா ஆண்டவர்பேரிலான அன்பினால் நிறைந்திருக்கும்போது, எல்லாம் உங்களுக்கு நன்மைக்கேதுவாக நடக்கும் (ரோமர் 8:28). இன்று உங்கள் இருதயத்தை இயேசுவுக்குக் கொடுங்கள். அவர் உங்கள் ஆத்துமாவை ஆசீர்வதிப்பார். அவரை நேசிப்பதற்கான அன்பை தருவார். அவரை நேசிப்பது என்பது எல்லா ஆசீர்வாதமும் கிடைக்கும் என்று அவரையே நம்புவதாகும். அவர் சகலமும் உங்களுக்கு நன்மைக்கேதுவாக நடக்கும்படி செய்வார்.
சகோ. தீபக் குமாரின் அருமையான சாட்சி. 2007ம் ஆண்டு அவருக்கும் கபிலாவுக்கும் திருமணம் நடந்தது. அவர்களுக்கு மகள் பிறந்தாள். 2016ம் ஆண்டு வரைக்கும் எல்லாம் சமாதானமாக இருந்தது. அதன்பிறகு பிசாசின் வல்லமை அவரது வாழ்க்கைக்குள் புகுந்தது. அவர் ஐம்பதுக்கும் மேற்பட்டோரிடம் கடன் வாங்கியிருந்தார். கடனால் அநேக வழக்குகள் அவர்மீது இருந்தன. இரண்டு முறை தற்கொலைக்கு முயன்றார். கடன் கொடுத்தவர்களின் தொல்லையால் அவரால் தன்னுடைய கடைக்கே செல்லமுடியாத நிலை ஏற்பட்டது. எட்டு மாதங்கள் வீட்டைவிட்டு சென்று மனச்சோர்விலும் பயத்திலும் வறுமையிலும் வாழ்ந்தார். ஒருநாள் தன் மனைவியை அழைத்து எல்லாவற்றையும் கூறினார். அவர் மனைவி, "நான் உங்களுடன் இருக்கிறேன்," என்று உறுதி கூறினார்கள். அவர்கள் தன்னுடைய சகோதரியை அழைத்தார்கள். அவர்கள் சகோதரியும் அவர்கள் கணவரும் இயேசு அழைக்கிறார் பங்காளர்கள். அவர்கள் அவரை ஜெப கோபுரத்திற்கு அழைத்துச் சென்றார்கள். தேவனுடைய அன்பை அவர் கண்டு கொண்டார். தேவன் அவருடைய வாழ்வில் கிரியை செய்ய ஆரம்பித்தார். அந்த ஆண்டு ஏப்ரல் மாதம், தேவன் கணவன், மனைவி, பிள்ளைகளை ஒன்றாய் இணைத்தார். சமாதானத்தை திரும்ப தந்தார்; வியாபாரத்தை திரும்ப தந்தார். அவரிடமிருந்து எடுக்கப்பட்ட சொத்து திரும்ப வந்தது. வியாபாரம் மறுபடியும் நடக்க ஆரம்பித்தது. யாரும் அவருக்கு எதிராக இல்லை. தேவன் அவரை கடனிலிருந்து விடுவித்தார்; அவர் சகலத்தை திரும்ப செலுத்தினார். தேவன் எவ்வளவு ஆச்சரியமானவர். அவர் உங்களுக்கும் உதவி செய்வார். இயேசு, "உன் இருதயத்தை எனக்கு தா. நான் உன்னை காப்பாற்றுவேன்; உன் ஆத்துமாவை காப்பேன்; உன்னை ஆசீர்வாதமாக வைப்பேன். என்மேல் அன்புகூரும்படி என்னை நம்பும்படி செய்வேன்," என்று கூறுகிறார். இந்த அழைப்பை ஏற்றுக்கொள்ளுங்கள்.
ஜெபம்:
பரம தகப்பனே, என் இருதயத்தை இன்றைக்கு உம்மிடம் தருகிறேன். தயவுசெய்து உள்ளே வந்து, எனக்குள் வாசம்பண்ணும். என் ஆத்துமாவை உம்முடைய அன்பினால் பாதுகாத்தருளும். நான் போகும்போதும் வரும்போதும் என்னை காத்தருளும். உலகத்தின் மீதான அன்பினால் அல்ல; உம்மேலான அன்பினால் என்னை நிறைத்தருளும். சகலமும் நன்மைக்கேதுவாகவே நடக்கும் என்ற உம்முடைய வாக்குத்தத்தத்தை நம்புகிறேன். என்னை ஆசீர்வதியும்; எனக்கு வழிகாட்டும்; நாளுக்கு நாள் உம்மேலான அன்பு அதிகரிக்க உதவும். உம்முடைய அழைப்பை சந்தோஷத்துடன் ஏற்றுக்கொள்கிறேன். ஆண்டவரே, என்னை காத்தருளும்; ஒருபோதும் விட்டுவிடாதிருக்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.