எனக்கு அருமையான தேவ பிள்ளையே, ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "நீங்கள் வலதுபுறமாய்ச் சாயும்போதும், இடதுபுறமாய்ச் சாயும்போதும்: வழி இதுவே, இதிலே நடவுங்கள் என்று உங்களுக்குப் பின்னாலே சொல்லும் வார்த்தையை உங்கள் காதுகள் கேட்கும்" (ஏசாயா 30:21) என்ற வசனத்தை நாம் தியானிப்போம். நம்முடைய ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து, நமக்கு உதாரணமாக வாழ்ந்து சென்றுள்ளார். அவர் அதிகாலமே எழுந்து, வனாந்தரமான இடத்துக்குச் சென்று பிதாவாகிய தேவனை தேடினார் என்று வேதத்தில் வாசிக்கிறோம் (மாற்கு 1:35). பிதாவாகிய தேவன் அவரிடம் பேசியிருப்பார். "இதுதான் வழி. இதிலே நட," என்று சொல்லியிருப்பார். எனக்கு அருமையானவர்களே, அதையே செய்யுங்கள். அதிகாலையில் எழுந்திருங்கள்; முழங்கால்படியிடுங்கள்; ஆண்டவரை நோக்கி, "ஆண்டவரே இதோ இருக்கிறேன். என்ன செய்யவேண்டுமென்று எனக்கு கற்றுத்தாரும்," என்று கூறுங்கள். அவர், "இதுதான் வழி. இதிலே நட," என்று சொல்லுவார். எவ்வளவு மகிமையான வாழ்க்கை!
நம்முடைய முற்பிதாக்கள் கர்த்தரை இவ்வாறே தேடினார்கள் என்று வேதம் குறிப்பிடுகிறது (உபாகமம் 30:20). தாவீதும் கர்த்தரை இவ்வாறே தேடினான். அவன், "கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர்," என்று கூறுகிறான் (சங்கீதம் 27:1). வேதாகமம், "தேவனே, உமக்குக் காத்திருக்கிறவர்களுக்கு நீர் செய்பவைகளை, நீரேயல்லாமல் உலகத்தோற்றம்முதற்கொண்டு ஒருவரும் கேட்டதுமில்லை, செவியால் உணர்ந்ததுமில்லை, அவைகளைக் கண்டதுமில்லை" (ஏசாயா 64:4) என்று கூறுகிறது. அன்பானவர்களே, தேவனுடைய சமுகத்தில் காத்திருக்கிற பழக்கம் உங்களுக்கு இருக்கிறதா? நீங்கள் காலையில் எந்த நேரம் எழுந்திருக்கிறீர்கள்? காலை பத்து மணிக்கா? அன்பானவர்களே, தினமும் உங்கள் வாழ்க்கையை ஆராய்ந்து பாருங்கள்; ஆண்டவரை முழு இருதயத்தோடும் தேடுங்கள்.
இயேசு அதிகாலமே பிதாவை தேடியதுபோல நீங்களும் தேடுங்கள். அப்போது உங்கள் வாழ்க்கையில் தேவ பிரசன்னம் நிறைந்திருக்கும். அவர் எங்கே செல்லவேண்டும், என்ன செய்யவேண்டும், எப்படி செய்யவேண்டும் என்று உங்களுக்குப் போதிப்பார். எல்லாவற்றையும் கற்றுத்தருவார். உங்கள் வாழ்க்கையை ஆசீர்வாதமானதாக மாற்றுவார். இப்போது உங்கள் வாழ்க்கையை அவருக்கு முன்பாக அர்ப்பணிப்பீர்களா? அவரிடமிருந்து ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்வீர்களா?
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, அன்போடு பேசி, வழிநடத்தும் தேவனாக நீர் இருக்கிறபடியால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இயேசு, பூமியில் இருந்த நாட்களில் அதிகாலையில் அவரை வழிநடத்தியதுபோல, எனக்கும் அதிகாலையில் வழிகாட்டும். உம்முடைய, "வழி இதுவே. இதில் நட," என்ற சத்தத்தைக் கேட்கும்படி என் செவிகளைத் திறந்தருளும். எல்லாவற்றுக்கும் மேலாக முதலாவது உம்மை தேடுவதற்கு, உம்முடைய சமுகத்தில் காத்திருப்பதற்கு, நீர் எனக்கென்று நியமித்த பாதையில் செல்வதற்கு எனக்குக் கற்றுத்தாரும். ஒருபோதும் என்னுடைய சொந்த விருப்பங்களின்படி செய்து அழிந்துபோக அனுமதிக்காதிரும். உம்மையே முழுவதுமாக நம்புவதற்கு உதவி செய்யும். என் இருதயத்தை உம்முடைய ஞானத்தினால் நிரப்பும்; என் அடிகளை உம்முடைய சமாதானத்தினால் நிரப்ப வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.