அன்பானவர்களே, இன்றைக்கு, "நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்; ஆத்துமாக்களை ஆதாயப்படுத்திக்கொள்ளுகிறவன் ஞானமுள்ளவன்" (நீதிமொழிகள் 11:30 )என்ற வசனத்தை தியானிப்போம். அவன் ஆத்துமாக்களை நித்தியத்திற்கென்று சேகரிக்கிறான். ஆத்துமாக்களை ஆதாயம் பண்ணுகிறவன் பேரில் தேவன் பிரியமாயிருக்கிறார். ஞானவான்கள் ஆகாயமண்டலத்தைபோல பிரகாசிப்பார்கள். அதைக் காட்டிலும் அநேகரை நீதிக்குட்படுத்துகிறவர்கள் நட்சத்திரங்களைப்போல என்றென்றைக்கும் பிரகாசிப்பார்கள். சார்லஸ் ஸ்பர்ஜன், "ஆத்தும ஆதாயம் செய்கிறவன் ஜெபத்தில் சிறந்தவனாயிருக்கவேண்டும்," என்கிறார். ஆத்தும ஆதாயம் பண்ணுவதற்கு முன்னர் கிறிஸ்துவை முதலில் ஆதாயம் செய்ய வேண்டும். கிறிஸ்துவை ஆதாயம் செய்வது எப்படி? நாம் அனுதினமும் நேரம் ஒதுக்கி ஜெபிக்கும்போது தேவன் நம்மில் பிரியமாயிருப்பார். முதலில் சத்தியமாக வாழவேண்டும். நீங்கள் உங்களுக்காக உழைக்கவில்லை; ஆனால், தேவனுக்காக உழைக்கிறீர்கள் என்பதை மறந்துபோகக்கூடாது. தேவனில்லாமல் உங்களால் ஒன்றையும் செய்யக்கூடாது.
எங்கள் தகப்பனார் சகோ.டி.ஜி.எஸ். தினகரன், என்னிடம் அடிக்கடி, "இவாஞ்சலின், ஊழியம் செய்வதற்கு முன்பு ஜெபிக்காமல் வீட்டை விட்டு புறப்படக்கூடாது. கூடுமானால் உபவாசித்து ஜெபி," என்று கூறுவார். ஆகவே, அதை இந்நாள் வரைக்கும் செய்து வருகிறேன். அப்படிச் செய்யும்போது மற்றவர்களுக்கு ஆசீர்வாதமாக இருப்போம். "குறை குடம் கூத்தாடும் (காலி பாத்திரங்கள் சத்தம் போடும்)," என்று சொல்வார்கள். ஜெபிக்காமல் சென்றால் சொன்ன வார்த்தைகளையே மீண்டும் மீண்டும் சத்தமாக சொல்லுவோம்; ஜெபத்துடன் செல்வோமானால் ஆத்துமாக்களை ஆதாயம் செய்ய முடியும். ஆகவேதான் வேதம், "நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்," என்று கூறுகிறது. இலவசமாக கொடுங்கள். எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும். இயேசுதாமே, "வாங்குகிறதைப்பார்க்கிலும் கொடுக்கிறதே பாக்கியம்," என்று கூறியிருக்கிறார்.
இலவசமாக எல்லாவற்றையும் தருகிறவன், மேலும் ஐசுவரியவானாவான். கொடுக்கவேண்டியவற்றை தடுத்து வைத்திருக்கிறவன் குறைவால் வாடுவான். நன்மை செய்வதில் நாம் சோர்ந்துபோகாமல் இருப்போமாக. நற்கிரியையை தொடருங்கள். ஏற்ற காலத்தில் பலனை அறுவடை செய்வீர்கள். அன்பானவர்களே, மனந்தளர்ந்து போகாதிருங்கள். தொடர்ந்து நற்காரியங்களை செய்யுங்கள். வேதம், "நீதிமானுடைய பலன் ஜீவவிருட்சம்" என்று கூறுகிறது. ஜீவனை காக்கிறவன் ஞானவான். "தப்பிப்போன மார்க்கத்தினின்று பாவியைத் திருப்புகிறவன் ஒரு ஆத்துமாவை மரணத்தினின்று இரட்சித்து, திரளான பாவங்களை மூடுவானென்று அறியக்கடவன்" (யாக்கோபு 5:20)என்று வேதம் கூறுகிறது. அன்பானவர்களே, ஆண்டவருக்காக தொடர்ந்து வேலை செய்யுங்கள். நித்தியத்திற்கென்று ஆத்துமாக்களை சேருங்கள். ஆண்டவர்தாமே உங்களைக் கனி தரும் மரமாக்குவாராக.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, மற்றவர்களுக்குக் கனி கொடுப்பதற்காக நீர் என்னை அழைத்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய ராஜ்யத்திற்கு அநேக ஆத்துமாக்களை கொண்டு சேர்க்கும்படி நீதியிலும் ஞானத்திலும் நடப்பதற்கு எனக்கு உதவி செய்யும். ஜெபத்தில் உண்மையாயிருக்கவும், உம்முடைய சத்தியத்தில் வேரூன்றவும், அன்பில் ஐசுவரியமாயிருக்கவும் எனக்குக் கற்பித்தருளும். உம்மை மகிமைப்படுத்தும்படி மற்றவர்களை என் வாழ்க்கை உயிர்ப்பிக்கட்டும். நன்மை செய்வதில் சோர்ந்துபோகாதிருக்கவும், நம்பிக்கையாய் தொடரவும், வாழ்க்கையில் ஏற்றவேளையில் பலனை தருவீர் என்பதை அறிந்திருக்கும்படியும் என்னை பெலப்படுத்தும். ஆண்டவரே, உம்முடைய நாமத்திற்கு பேர்சேர்க்கும் கனிதரும் மரமாக என்னை மாற்றவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.