அன்பானவர்களே, தேவன் இன்றைக்கு, "அவன் தண்ணீரண்டையிலே நாட்டப்பட்டதும்...மரத்தைப்போலிருப்பான்" (எரேமியா 17:8) என்ற வசனத்தை வாக்குத்தத்தமாக தருகிறார். நீங்களும் நானும் ஆண்டவரில் நாட்டப்பட்டவர்களாக, உறுதியானவர்களாக இருக்கப்போகிறோம். அவரே நமக்கு மூலைக்கல்லாக, கன்மலையாக, திட அஸ்திபாரமாக இருப்பார்; நாம் ஒருபோதும் தோற்றுப்போவதில்லை. இந்த வசனத்தை வாசித்தோமானால், அந்த மரத்திற்கு என்ன நடக்கும்? அது தண்ணீரண்டையில் நாட்டப்பட்டிருப்பதால் மிகவும் செழிப்பாக, பசுமையாக, உறுதியாக இருக்கிறது. அது கால்வாய் ஓரமாக வேர்விடுகிறது என்பது, தேவன் நம்மை தமக்குள், தம்முடைய ஏற்ற போதனைகளில், தேவனுடைய வழிகளில் வேர்விடும்படி செய்கிறார்; அப்போது நம் அஸ்திபாரம் சரியானதாயிருக்கும்.
அநேகர், கோணலான பாதையில் செல்லும்படி கற்றுக்கொடுக்கிறார்கள்; ஆனால் நாமோ ஆண்டவருக்கு முன்பாக சரியானவற்றை செய்வோம். இந்த மரம் வெயில் வரும்போது அதற்குப் பயப்படாது. பஞ்சத்திற்கு அஞ்சாது. அதேவண்ணமாக நீங்கள் உங்களுக்கு முன்னால் சவால்கள் எழும்பும்போது, திகிலான சூழ்நிலைகளுக்கு, மிரட்டும் மக்களுக்குப் பயப்படமாட்டீர்கள். மாறாக, நீங்கள் தேவ சமாதானத்தில் உறுதியாக நாட்டப்பட்டிருப்பீர்கள். இந்த வசனம் அந்த மரத்தின் இலைகள் பச்சையாயிருப்பதாகக் கூறுகிறது. இதற்கு, நீங்கள் எப்போதும் சமுதாயத்தில் நல்ல மதிப்பை, நற்பெயரை பெற்றிருப்பீர்கள்; எப்போதும் பசுமையாய், நீர்வளத்துடன் இருப்பீர்கள் என்று அர்த்தம். ஒருபோதும் நீங்கள் பட்டுப்போவதில்லை.
பஞ்சம் வருவதை எண்ணி அது கலங்காது; கவலைப்படாது. மாறாக, அது தேவனுடைய ஆசீர்வாதத்தினால் செழிப்பாக இருக்கும். நீங்கள் கனி கொடுப்பதை நிறுத்துவதில்லை. ஏற்றவேளையில் தேவன், என்ன செய்ய வேண்டும் என்ற வெளிப்பாட்டை கொடுப்பார்; அதை செய்யக்கூடிய ஆற்றலையும் அளித்து உங்களைக் கனிகொடுக்கும்படி செய்வார். தேவனுடைய வார்த்தையை அனுதினமும் வாசிக்கும்போது, அவருடைய வாக்குத்தத்தத்தை பெற்றுக்கொள்ளும்போது, வெளிப்பாடுகளை அறியும்போது கால்வாய் ஓரமாக நடப்பட்ட மரத்தைப்போல இருப்பீர்கள். தேவனுடைய ஆசீர்வாதத்தில் நீங்கள் உறுதியாக இருப்பீர்கள்; உங்கள் அஸ்திபாரம் சரியாய் இருக்கும். நீங்கள் ஒருபோதும் அசைக்கப்படுவதில்லை. இந்த அருமையான ஆசீர்வாதத்தை தந்திருப்பதால் தேவனை இன்றைக்கு துதிப்பீர்களா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய அன்பின் சமுகத்தில், தண்ணீரண்டையில் உள்ள மரம்போல என்னை ஆழமாக நாட்டியிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய சத்தியத்தில் நான் ஆழமாக வேரூன்றவும், பஞ்சகாலத்தில் பயத்தால் அசைக்கப்படாதிருக்கவும் கிருபை செய்யும். எல்லா காலத்திலும் நான் கனி கொடுக்கும்படி உம்முடைய பரிசுத்த ஆவியினால் தினமும் என்னை நிரப்பும். உம்மை முழுவதுமாக நம்பவும், நீதியில் நடக்கவும், நான் செய்கிற எல்லா காரியங்களிலும் உம்முடைய மகிமையைக் காட்டவும் கற்றுத்தாரும். நான் ஒருபோதும் இலையுதிராமல், கலங்காமல் உம்முடைய நோக்கத்தில் உறுதியாக நிற்க உதவி செய்யும். இப்போதும் எப்போதும் அசைக்க முடியாத அஸ்திபாரமாக நீர் இருப்பதால் உம்மை துதித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.