அன்பானவர்களே, கர்த்தருக்கு துதியுண்டாவதாக. "கர்த்தர் எனக்காக யாவையும் செய்து முடிப்பார்" (சங்கீதம் 138:8) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்த வசனமாகும். இன்றைக்கு எதைக் குறித்தாவது கவலையோடு இருப்பீர்களானால், திடன்கொள்ளுங்கள்! ஆண்டவர், 50% அல்லது 70% என்று அரைகுறையாக உதவி செய்வதாக வாக்குப்பண்ணவில்லை. உங்களுக்கு 100% பூரணமாக வாக்குப்பண்ணுகிறார். "ஆண்டவரே, எனக்கு தோல்விமேல் தோல்வி வருகிறதே. எப்போது என் வாழ்வில் நல்லதொரு திருப்பம் ஏற்படும்?" என்று கேட்கலாம். இன்றைக்கு உங்கள் வாழ்க்கையில் பரிபூரணம் வருகிறது. தைரியமாயிருங்கள். இயேசுவின்மேல் 100% விசுவாசம் வைத்திடுங்கள்; 100% பரிபூரண பலனை பெற்றுக்கொள்வீர்கள். சிறுபிள்ளைகளுக்கு தேவன்மேல் பெரிய விசுவாசம் இருக்கும் என்று சொல்லுவார்கள். எங்கள்  மகள் கேட்டியிடம் இதைப் பார்த்தேன். இப்போதுதான் அவள்  உயரமான சோபாமேல் ஏறி கீழே குதிக்கப் பழகுகிறாள். ஆனால், ஒவ்வொரு முறை குதிப்பதற்கு முன்பும், "இயேசப்பா, எனக்கு உதவும்," என்று சொல்கிறாள். பிறகு பத்திரமாக குதித்து, சந்தோஷமாக ஓடி வந்து, "ம்மா... எனக்கு அடிபடவில்லை. இயேசப்பா உதவி பண்ணினார்," என்று கூறுவாள். சிறுபிள்ளையைப் போன்ற எளிய விசுவாசம்.

இன்றைக்கு உங்களுக்கு கொஞ்ச விசுவாசம் இருந்தாலும், ஆண்டவர் உங்கள் வாழ்வில் எல்லாவற்றையும் பூரணமாக செய்துமுடிப்பார். ஏற்ற வாழ்க்கைத்துணைக்காக காத்திருக்கிறீர்களா? தேவன், ஏற்ற துணையை ஏற்றவேளையில் கொண்டு வருகிறார். பணக்கஷ்டத்தோடு போராடுகிறீர்களா? அவர் ஏற்றவேளையில் ஏற்ற தொகையை தந்தருளுவார். இஸ்ரேல் ஜெப கோபுரத்திற்கு கட்டடத்தை வாங்க நினைத்தபோது இப்படியே நடந்தது. இஸ்ரேலில் ஒரு இடத்தை கண்டு பிடிப்பது பெரிய சவாலான விஷயமாகும். ஆனால், ஆண்டவர், தேவைப்பட்ட சரியான தொகையை குறித்தவேளைக்கு சற்று முன்பாக தந்தருளினார். இன்றைக்கு அந்த ஜெப கோபுரத்தின் மூலம் பல லட்சக்கணக்கானோர் ஆசீர்வதிக்கப்பட்டு வருகின்றனர். ஆம், பரிபூரண ஆசீர்வாதம்! ஆகவே, அன்பானவர்களே, இன்றைக்கு இயேசுவிடமிருந்து பரிபூரண ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்காக யாவற்றையும் செய்து முடிப்பதாக நீர் அளிக்கும் வாக்குத்தத்தத்தை நம்பி உம்மிடம் வருகிறேன். ஆண்டவரே, நீர் அரைகுறையான ஆசீர்வாதத்தை அல்ல; 100% பரிபூரண ஆசீர்வாதத்தை என் வாழ்வில் அளிப்பீர் என்பதை அறிந்து என் கவலைகளை, தோல்விகளை உம்முடைய கரங்களில் ஒப்படைக்கிறேன். ஆண்டவரே, நீர் எல்லாவற்றையும் ஏற்றவேளையில், ஏற்ற வழியில் அளிப்பீர் என்று சிறுபிள்ளைபோல உம்மை நம்பும்படி என் விசுவாசத்தை பெலப்படுத்தும். தாமதங்கள் ஏற்படும்போது எனக்கு பொறுமையை தந்தருளும். எதுவும் நிச்சயமற்ற சூழ்நிலையில் எனக்கு சமாதானத்தை தந்தருளும். ஒவ்வொரு தேவையையும் பூரணமாக சந்தித்தருளும். என்னுடைய கடுகளவு விசுவாசத்திற்கு பூரண பலனை அளிக்கும்படி நீர் பின்னணியில் கிரியை செய்துகொண்டிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, மிகுந்த எதிர்பார்ப்போடும், நன்றியறிதலோடும் உம்மிடமிருந்து பரிபூரண பெலனை பெற்றுக்கொள்வேன் என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.