அன்பானவர்களே, இன்றைக்கு, "நீங்கள் இப்பொழுது இருக்கிறதைப் பார்க்கிலும் ஆயிரமடங்கு அதிகமாகும்படி உங்கள் பிதாக்களின் தேவனாகிய கர்த்தர் உங்களுக்குச் சொல்லியபடியே உங்களை ஆசீர்வதிப்பாராக" (உபாகமம் 1:11) என்ற விசேஷித்த வாக்குத்தத்தம் நமக்குக் கொடுக்கப்பட்டிருக்கிறது. நாம் அனைவருமே வாழ்வில் பெருக்கத்தை காணவேண்டும் விரும்புகிறோம் அல்லவா! தேவன் உங்களை ஆயிரமடங்காய்ப் பெருகச் செய்வதாய் வாக்குக்கொடுக்கிறார். இந்த தெய்வீக பெருக்கத்தை நாம் எப்படி பெற்றுக்கொள்ள முடியும்?
தேவனை முதலாவதாக தேடுவதே அதற்கான முதற்படியாகும். "முதலாவது தேவனுடைய ராஜ்யத்தையும் அவருடைய நீதியையும் தேடுங்கள்; அப்பொழுது இவைகளெல்லாம் உங்களுக்குக் கூடக் கொடுக்கப்படும்" (மத்தேயு 6:33) என்று வேதம் கூறுகிறபடி, தேவனுடன் ஐக்கியம் கொண்டு, அவரது சித்தத்திற்கு நம் திட்டங்களை அர்ப்பணிப்பதே, அவர் அளிக்கும் பெருக்கத்தைப் பெற்றுக்கொள்வதற்கான வழியாகும். ஆம், தேவன் நமக்கு அநேக ஈவுகளை, பொக்கிஷங்களை, லௌகீக ஆசீர்வாதங்களை தருகிறார்; ஆனாலும், அந்த ஆசீர்வாதங்கள்மேல் அல்லாமல் தம்மேலேயே நம் உள்ளம் நோக்கமாயிருக்கவேண்டும் என்று அவர் விரும்புகிறார். அவரே சகல நன்மைகளையும் அளிக்கிறவராக இருக்கிறார். முதலாவது, அவரால் உங்களை நிரப்புமாறு இன்று அவரிடம் கேளுங்கள். அவருடனான உறவில் நீங்கள் வளரும்போது, அவர் உங்களுக்குத் தேவையான எல்லாவற்றையும் அருளிச்செய்வார்.
இரண்டாவது காரியம், தேவனுடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதாகும். தேவனுக்குச் செவிகொடுத்து, அவருக்குக் கீழ்ப்படிகிறவர்களுக்கே அவரது ஆசீர்வாதம் உரித்தானவையாகும். "நான் உனக்கு விதிக்கிற உன் தேவனாகிய கர்த்தருடைய கட்டளைகளின்படியெல்லாம் செய்ய நீ கவனமாயிருக்கும்படிக்கு, அவர் சத்தத்திற்கு உண்மையாய்ச் செவிகொடுப்பாயானால், உன் தேவனாகிய கர்த்தர் பூமியிலுள்ள சகல ஜாதிகளிலும் உன்னை மேன்மையாக வைப்பார்" (உபாகமம் 28:1) என்று வேதம் கூறுகிறது. ஆம், கீழ்ப்படிவது எளிதான காரியமல்ல. நம் விருப்பங்களுக்கு மாறாக, தேவனுடைய வழிகளைப் பின்பற்றுவது கடினமானதாக காணப்படலாம்; ஆனால், அவருடைய நினைவுகள் நம் நினைவுகளைக் காட்டிலும் மிகவும் பெரியவை. நாம் அவருக்கு முழுவதுமாக கீழ்ப்படியும்போது, அவர் தம்முடைய உயர்வான ஆசீர்வாதங்களை நம்மேல் பொழிந்தருள்கிறார்.
மூன்றாவதாக, கொடுத்தல் ஆகும். பெருக்கமடைவதற்கு முக்கியமாக நாம் செய்யவேண்டியது கொடுப்பதே ஆகும். "என்னிடம் இருப்பதே மிகக் கொஞ்சம். இதையும் கொடுத்துவிட்டால் என்னிடம் எதுவும் மீதம் இருக்காது," என்று நீங்கள் நினைக்கலாம். ஆனால், இயேசு, "கொடுங்கள், அப்பொழுது உங்களுக்கும் கொடுக்கப்படும்; அமுக்கிக் குலுக்கிச் சரிந்து விழும்படி நன்றாய் அளந்து, உங்கள் மடியிலே போடுவார்கள்" (லூக்கா 6:38) என்று கூறுகிறார். நீங்கள் எவ்வளவு கொடுக்கிறீர்கள் என்று தேவன் பார்க்கமாட்டார். ஆனால், கொடுக்கும் உங்கள் உள்ளத்தை அவர் காண்கிறார். சிறிய காணிக்கை, உங்கள் நேரம், தாலந்துகள், திறமைகள் எதையும் நீங்கள் உற்சாகமான உள்ளத்தோடு கொடுத்தால், தேவன் அதை பெருகப்பண்ணி, மற்றவர்களுக்கு நீங்கள் ஆசீர்வாதமாக விளங்கும்படி செய்வார்.
தேவன் ஏன் உங்களைப் பெருகப்பண்ண விரும்புகிறார்? "என் ஆசீர்வாதம் எப்படி தேவனுக்கு மகிமையை கொண்டு வரும்?" என்று நீங்கள் வியக்கலாம். உங்கள் வாழ்வை எப்பக்கமும் தேவன் பெருகப்பண்ணும்போது, அவரது வல்லமை, ஞானம், கிருபை, தயை உங்கள் மூலம் வெளிப்படுத்தப்படும். உங்கள் வெற்றி, மற்றவர்களுக்கு சாட்சியாக விளங்கும். நீங்கள் செய்யும் வியாபாரம் அநேகருக்கு ஆசீர்வாதமாக இருக்கும்; உங்கள் வேலை அநேகருக்கு ஊக்கமளிக்கும். உங்கள் குடும்ப ஆசீர்வாதம், எதிர்கால தலைமுறையினருக்கு நன்மையாய் அமையும். உங்கள் செல்வம், தேவையுள்ளவர்களுக்கு உதவும். நீங்கள் செழிப்புற்று மற்றவர்களுடன் அதைப் பகிர்ந்துகொள்ளும்போது, இவ்வுலகிற்கு நம்பிக்கையையும் தேவ வெளிச்சத்தையும் அளிப்பீர்கள். உங்கள் பெருக்கம், உங்களுக்கு மாத்திரமானதல்ல. உங்கள் வருங்கால தலைமுறைகளுக்கும் ஆசீர்வாதமானதாக அமையும். அன்பானவர்களே, தேவன் உங்களை ஆசீர்வதித்து, ஆயிரமடங்கு அதிகமாகும்படி செய்வார். முதலாவது அவரைத் தேடவும், அவருடைய கட்டளைகளுக்குக் கீழ்ப்படியவும், உற்சாகமான உள்ளத்துடன் கொடுக்கவும் இன்று அர்ப்பணித்திடுங்கள். அப்போது, உங்கள் வாழ்வில் ஆசீர்வாதங்கள் நிரம்பி வழியும்; நீங்கள் பெருகுவதால், தேவனுக்கு மகிமை சேர்ப்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை ஆசீர்வதித்து, ஆயிரமடங்கு அதிகமாகும்படி செய்வதாக வாக்குப்பண்ணுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்மோடு நெருங்கிய உறவை பேணும்படி இன்றைக்கு உம்மிடம் வருகிறேன். அனுதினமும் உம்முடைய சமுகத்தில் நேரம் செலவழிக்கவும், உம்முடைய வசனத்தை வாசிக்கவும், உம்முடைய சித்தத்தின்படி நடக்கவும் எனக்கு உதவும். உம்முடைய கட்டளைகளுக்கு முழு மனதுடன் கீழ்ப்படியவும், உம்மை கனப்படுத்தும்படியாக வாழவும் எனக்குப் போதித்தருளும். மற்றவர்களுக்குக் கொடுக்கவும், மக்களுக்கு ஊழியம் செய்யவும், உம்முடைய ராஜ்யத்தை சந்தோஷத்துடன் கட்டவும்படியாக உதாரகுணத்தினால் என் இருதயத்தை நிறைத்திடும். ஆண்டவரே, ஆசீர்வாதங்கள் எனக்குள் நிறைந்து, என்னைச் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கும் பாய்ந்து செல்வதாக. என்னுடைய குடும்பத்தினரும் பிள்ளைகளும் தலைமுறையினரும் உம்முடைய தயவாலும் அன்பாலும் மூடப்படுவார்களாக. ஆண்டவரே, என் வாழ்வில் உம்முடைய தயவை பெருகப்பண்ணி, என்னை ஆசீர்வாதத்தின் பாத்திரமாக விளங்கப்பண்ணுவதற்காக நன்றி செலுத்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.