அன்பானவர்களே, இன்றைக்கு 'தேவன் நம்மோடிருக்கிறார்' என்பதற்கேற்ப இம்மானுவேலாக அவர் நம்முடன் கூட இருக்கிறார். அவர் தூரத்து உறவாக அல்ல, அன்பான சிநேகிதராக உங்களுக்குச் சமீபமானவராக உங்களுடன் கூட நடப்பதற்கு விரும்புகிறார். "என் உள்ளத்தில் விசாரங்கள் பெருகுகையில், உம்முடைய ஆறுதல்கள் என் ஆத்துமாவைத் தேற்றுகிறது" (சங்கீதம் 94:19)என்ற தமது வசனத்தின் மூலம் அவர் பெரிய சத்தியமொன்றை நமக்குப் போதிக்க விரும்புகிறார். தேவனுடைய குணாதிசயத்தை இந்த வசனம் எவ்வளவு அழகாக காட்டுகிறது! அவர் நம்முடைய வெளிப்புற தோற்றத்தையோ, வெற்றுப்புன்னகையையோ பார்ப்பதில்லை; அவர் நம் ஆத்துமாவின் ஆழத்தைப் பார்க்கிறார்; நாம் சுமக்கும் ஒவ்வொரு பாரத்தையும், மறைத்து வைத்திருக்கும் எல்லா பயத்தையும் காண்கிறார். நம்முடைய உள்ளங்கள் துக்கத்தினாலும், கலக்கத்தினாலும் பாரம் கொள்வதை அவர் விரும்புவதில்லை. நம்மை தூக்கியெடுக்கும்படியாக, நமக்கு ஆறுதல் செய்யும்படியாக, நம்மை தேற்றும்படியாக அவர் நம்முடன் இருக்கிறார்.


தேவன் மகத்துவமானவரும் பெரியவருமாக இருந்தாலும் நம்முடைய எளிமையான, பெலவீனமான ஆத்துமாக்களைக் குறித்து அவர் கரிசனையுள்ளவராயிருக்கிறார். சிறிதானதோ, பெரிதானதோ எதுவாக இருந்தாலும் நம்முடைய ஒவ்வொரு வேதனையைக் குறித்தும் அவர் அக்கறையுள்ளவராக இருக்கிறார். ஜனங்கள் ஜெபிப்பதற்காக வரும்போது, அநேக ஜெப விண்ணப்பங்களை கூறுவார்கள்; அவர்களுக்கு இருக்கும் போராட்டங்கள், முகங்களிலேயே தெரியும். அவர்களது பிரச்னைகளை கேட்கும்போது, என் இருதயம் உடைந்துபோகும். சில பெண்கள், நான் ஒரு பிரச்னைக்காக ஜெபிக்கும்போது, ஒன்றுக்கு பின் ஒன்றாக கூறிக்கொண்டே இருப்பார்கள். அவர்கள் பாடுகளின் சுமை அதிகமாக இருக்கும். அவர்கள் உள்ளத்தின் விசாரங்கள் அநேகமாயிருக்கும். சிலவேளைகளில், அவர்களுடைய வேதனையின் ஆழத்தை கற்பனை செய்து பார்க்கக்கூட முடியாது.


ஆனால், தேவனுடைய வசனம், அவருடைய ஆறுதல்கள் உங்கள் ஆத்துமாவை தேற்றும் என்று வாக்குப்பண்ணுகிறது. அவர் துக்கத்தின் குழியிலிருந்து உங்களை தூக்கியெடுத்து, உங்களை தேற்றுவார். அதையே தான் இயேசு, "வருத்தப்பட்டுப் பாரஞ்சுமக்கிறவர்களே! நீங்கள் எல்லாரும் என்னிடத்தில் வாருங்கள்; நான் உங்களுக்கு இளைப்பாறுதல் தருவேன்" (மத்தேயு 11:28) என்று வாக்குப்பண்ணுகிறார். "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" (சங்கீதம் 23:4)என்று சங்கீதக்காரன் கூறுகிறான். மேய்ப்பன் ஒருவன் தன் ஆடுகளை தேற்றுவதைப்போல தேவன் நம்மை தேற்றுகிறார்.


கடுங்காற்று வீசியபோது, இயேசு தமது சீஷர்களை அமைதிப்படுத்தியதை எண்ணிப்பாருங்கள். காற்று கடுமையாக வீசியபோதும், அவர்கள் படகின்மேல் மோதியபோதும், இயேசு, "நான் உங்களுடன் இருக்கிறேன்; ஏன் பயப்படுகிறீர்கள்?" என்று கேட்டார். தேவன், சாத்ராக், மேஷாக், ஆபேத்நேகோவுடன் எரிகிற அக்கினி சூளையினுள் நின்று, "நான் உங்களுடன் இருக்கிறேன்; பயப்படாதிருங்கள்," என்று தைரியப்படுத்தினார். எலியா பயத்தாலும் திகிலாலும் நிறைந்திருந்தபோது, அவர் தமது தூதனை அனுப்பி, "எலியாவே, இளைப்பாறு; சாப்பிடு. தேவனுடைய கரிசனையும் மனதுருக்கமும் உன்னை கைவிடாது," என்று கூறச் செய்தார்.


உங்களுக்கும் அவ்வாறு செய்ய அவர் விரும்புகிறார். எந்த காரியத்தை எதிர்கொள்ள வேண்டியதிருந்தாலும் பயப்படாதிருங்கள். தேவன் உங்கள்மேல் கரிசனையாயிருக்கிறார்; ஆபத்துக்காலத்தில் உங்களிடம் வந்து உங்களை தேற்றுவார். உங்கள் பாடுகள் எவ்வளவு அதிகமாக இருக்கிறதோ, அவ்வளவு அதிகமாய் அவருடைய ஆறுதல்கள் பெருகும். என்னுடைய தாத்தா அதிகமாய் உபத்திரவப்பட்டபோதும், வியாதிப்பட்டிருந்தபோதும் தேவன் அவ்வாறே அவரை தேற்றினார். தேவன், தம்மை என் தாத்தாவுக்கு வெளிப்படுத்தி, பரலோக தரிசனங்களை காட்டி, பரிசுத்தவான்கள் அவரை தைரியப்படுத்தும்படி செய்தார். நீங்களும் தாழ்மையான நிலையில் இருக்கும்போது, தேவன், உங்களுக்கும் தம்மைத்தாமே வெளிப்படுத்துவார். அவர் உங்களிடம் வருவார்; தம்முடைய பிரசன்னத்தோடு வருவார்; உங்கள் உள்ளத்தை சந்தோஷத்தால் நிரப்புவார்.
பாடுகளின் மத்தியில் நீங்கள் அவரை காண்பீர்கள். சில காலம் நீங்கள் உபத்திரவத்தை அனுபவித்தாலும் திடன்கொள்ளுங்கள்; உங்கள் துக்கம் சந்தோஷமாக மாறும். தேவன் தாமே உங்களுக்கு ஆறுதலாக விளங்குவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய அன்பையும் ஆறுதலையும் குறித்த அருமையான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இப்போதும் உம்முடைய கரிசனைக்காக ஜெபிக்கிறேன். உம்முடைய ஆறுதலின் பிரசன்னம் என்னை சூழ்ந்துகொள்ளவேண்டுமென்று வாஞ்சிக்கிறேன். உம்முடைய ஆறுதல்கள் என் உள்ளத்தை தேற்றுவதாக. தாய் தன் குழந்தையை நேசிப்பதுபோல என்னை நேசித்தருளும். இப்போதும் எனக்கு உதவி செய்வதற்கும் என்னை தேற்றுவதற்கும் யாருமில்லை. நீர் மாத்திரமே எனக்கு சமாதானத்தின் ஊற்றாகவும், எனக்கு அடைக்கலமாகவும் இருக்கிறீர். உம்முடைய அன்பின் கரங்களால் என்னை அரவணைத்துக்கொள்ளும். நீரே கீலேயாத்தின் தைலமாயிருக்கிறீர். என்னுடைய காயங்களை ஆற்றி, என் உடைந்த உள்ளத்தை குணப்படுத்த உம்மால் மாத்திரமே கூடும்.  உம்முடைய ஆறுதல் என்மேல் நதியாக பாய்ந்து, எல்லா கவலையையும் பயத்தையும் கழுவுவதாக. ஆண்டவரே, என் விசுவாசத்தை வர்த்திக்கப்பண்ணும். என் வாழ்வில் உம்முடைய அதிசயங்களை செய்யும் வல்லமை, கிரியை செய்ய வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.