அன்பானவர்களே, இன்றைக்கு, "உதாரகுணமுள்ள ஆத்துமா செழிக்கும்; எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்குத் தண்ணீர் பாய்ச்சப்படும்" (நீதிமொழிகள் 11:25) என்ற வசனத்தை தியானிப்போம். இயேசு, ஐந்தாயிரம் பேரை போஷித்த சம்பவம் அனைவருக்கும் தெரியும். திரளான கூட்டத்தினர் தம்மிடம் வருவதைக் கண்டபோது இயேசு மனதுருகினார். தம்முடைய சீஷர்களுள் ஒருவனாகிய பிலிப்புவிடம், "இத்தனைபேர் சாப்பிடுவதற்கு அப்பங்களை எங்கே வாங்க முடியும்?" என்று கேட்டார். தாம் செய்யப்போவதை அறிந்திருந்தாலும் அவனை சோதிக்கும்படியாக அப்படி கேட்டார். பிலிப்பு, ஒவ்வொருவரும் கொஞ்சம் சாப்பிடவேண்டுமென்றாலும் இருநூறு பணத்தை விட அதிகமாகும் என்றான். இன்னொரு சீஷனாகிய அந்திரேயா, "இங்கே ஒரு பையன் இருக்கிறான். அவனிடம் ஐந்து சிறு அப்பங்களும் இரண்டு சிறுமீன்களும் இருக்கிறது," என்றான். பிறகு இயேசு ஜனங்களை அமரச் செய்து, அப்பங்களையும் மீனையும் எடுத்து ஸ்தோத்திரம்பண்ணி, முழு கூட்டத்தினரையும் போஷிக்கும்படி பெருகப்பண்ணினார். எல்லாரும் சாப்பிட்டு திருப்தியானார்கள். 12 கூடைகள் மீதமும் எடுத்தார்கள்.

ஆம், சிறுவன் கொடுத்த இரண்டு மீன்களையும் ஐந்து அப்பங்களையும் ஐயாயிரம் பேர் உண்ணத்தக்கதாக எப்படி பெருகப்பண்ணினார்? அந்தச் சிறுவன் ஐயாயிரம் பேரை இவ்வளவு கொஞ்சம் உணவு எப்படி திருப்தியாக்க முடியும் என்று எண்ணியிருப்பான். ஆனாலும் உதார உள்ளத்தோடு அவற்றை இயேசுவிடம் கொடுத்தான்; இயேசு, உதார உள்ளத்தோடு அவற்றை கூடைகள் மீதம் இருக்கும்படி பெருகப்பண்ணினார். அன்பானவர்களே, நீங்கள் ஆண்டவருடைய ஊழியத்தில் விதைக்கும்போது, என்னிடம் இவ்வளவுதான் இருக்கிறது; இது எப்படி போதும் என்று சொல்லக்கூடும். ஏழைகளுக்கு உணவிடும்போது நான் இத்தனை பேருக்கு தானே உதவி செய்தேன்? இது எப்படி மாற்றத்தை உண்டாக்கும்? இரண்டு அல்லது மூன்று ஆத்துமாக்களைதானே தேற்றினேன். அது எப்படி மாற்றத்தை உண்டாக்கும்? என்று கேட்கலாம். அன்பானவர்களே, அதை நீங்கள் உதார உள்ளத்தோடு கொடுக்கும்போது, இவ்வளவு சிறிய தொகைதானே என்ற எண்ணினாலும், உங்களிடம் எதுவுமில்லாத நிலையிலும் உதாரகுணத்தோடு கொடுக்கும்போது, தேவன் அதை வர்த்திக்கப்பண்ணுவார்; பெருக்கமான பலனை காண்பீர்கள்.

இந்த உலகம் நீங்கள் விதைப்பதே கிடைக்கும் என்று கூறலாம். ஆனால், கையில் எதுவுமில்லாத நிலையில் விதைக்கும்போது, கூடைகள் மீதமிருக்கும்படி தேவன் அதைப் பெருகப்பண்ணுவார். தங்கள் நிலத்தை விற்று, கிடைக்கும் பணத்தை விதைக்கும் மக்களைப் பார்க்கிறோம். அவர்கள் ஊழியத்தில் அதை விதைக்கும்போது, தேவன் சொந்தமாக இரண்டு வீடுகளை கட்டும்படி அவர்களை ஆசீர்வதிக்கிறார். அன்று சம்பாதிக்கும் 100 ரூபாயிலிருந்து 10 ரூபாயை கொடுக்கும்போது தேவன் ஊழியத்தை தாங்கும்படி அதை பெருகப்பண்ணி அவர்களுக்கு ஆசீர்வாதத்தை கொண்டு வருகிறார். தேவன், அவர்கள் தங்களிடம் எதுவுமில்லாத நிலையில் பணத்தை விதைத்ததால், தங்கள் பிள்ளைகளை படிக்கவைத்து, வீடு கட்டி, வாழ்க்கையில் உயரும்படி செய்கிறார். அவ்வாறே உதார உள்ளத்தோடு நீங்கள் கொடுக்கும்போது தேவன் செழிக்கப்பண்ணுவார். உங்கள் கூடைகள் நிறைவதற்கு அவர் உதவி செய்வார். நீங்கள் மற்றவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதால் உங்களுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும். ஆகவே, தேவனுடைய ராஜ்யத்தில் விதைப்பதை நிறுத்தாதிருங்கள். அப்படிச் செய்யும்போது தேவன் உங்களை செழிக்கப்பண்ணுவார்; தண்ணீர் பாய்த்து உங்களை ஆசீர்வதிப்பார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உதாரகுணமுள்ள மனுஷன் செழிப்பான். எவன் தண்ணீர் பாய்ச்சுகிறானோ அவனுக்கு தண்ணீர் பாய்ச்சப்படும் என்ற வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். ஆண்டவரே, இப்போதும் என்னிடம் உள்ளதை, அது எவ்வளவு சிறிதாக காணப்பட்டாலும் அதை உம்மிடம் கொண்டு வருகிறேன். உம்மிடம் அதை விருப்பத்தோடு, அன்பான உள்ளத்தோடு கொடுக்கிறேன். தயவுசெய்து உம்முடைய மகிமைக்காக அதை பெருகப்பண்ணி, அநேகருக்கு ஆசீர்வாதமாக்கும். கொஞ்சமே இருந்தாலும் அதிலிருந்தும் கொடுப்பதற்கு எனக்குக் கற்றுத்தாரும். நீர் பெருகப்பண்ணுவீர் என்ற விசுவாசத்துடன் விதைப்பதற்கு உதவி செய்யும். ஆண்டவரே, நீர் என் ஆத்துமாவுக்கு தண்ணீர் பாய்ச்சி, என் வாழ்க்கை உம்முடைய மனதுருக்கத்தால் சாட்சியாக மாறும்படி, மற்றவர்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவதற்கு என்னை அர்ப்பணித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.