அன்பு தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். புத்தாண்டின் இரண்டாவது நாளில் (ஜனவரி 2)இந்த ஆண்டு சந்தோஷமானதாகவும் ஆசீர்வாதமானதாகவும் அமையும்படி உங்களை வாழ்த்துகிறேன். ஆண்டவர்தாமே உங்களோடு பேசுவாராக; உங்களை பரிபூரணமாய் ஆசீர்வதிப்பாராக. இன்றைக்கு, "கர்த்தர் நித்தமும் உன்னை நடத்தி, மகா வறட்சியான காலங்களில் உன் ஆத்துமாவைத் திருப்தியாக்கி, உன் எலும்புகளை நிணமுள்ளதாக்குவார்; நீ நீர்ப்பாய்ச்சலான தோட்டத்தைப்போலவும், வற்றாத நீரூற்றைப்போலவும் இருப்பாய்" (ஏசாயா 58:11)என்ற வசனத்தை தியானிப்போம்.
இந்த வாக்குத்தத்தத்தை தாவீது உறுதியாக விசுவாசித்து, "என் கன்மலையும் என் கோட்டையும் நீரே; உமது நாமத்தினிமித்தம் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தியருளும்" (சங்கீதம் 31:3)என்ற எளிமையானதும் வல்லமையானதுமான ஜெபத்தை ஏறெடுத்தான். அன்பானவர்களே, இது சிறிய ஜெபமாக இருந்தாலும், வல்லமை நிறைந்ததாகும். இந்த ஆண்டை ஆரம்பித்திருக்கிற நாம், தினமும், எவ்வேளையிலும் இந்த ஜெபத்தை ஏறெடுப்போம்; நம் வாழ்வில் ஆண்டவர் செயல்படுவதை காண்போம்.
இப்படி நீங்கள் ஜெபிக்கும்போது என்ன நடக்கிறது? 23ம் சங்கீதத்தை வாசித்துப் பாருங்கள். அதில் ஆசீர்வாதங்கள் நிரம்பியுள்ளன. இப்படிப்பட்ட ஆசீர்வாதங்களைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் என்ன செய்யவேண்டும்? தேவனாகிய கர்த்தரை நம்முடைய மேய்ப்பராக ஏற்றுக்கொள்ளவேண்டும். அவரே நமக்கு தலைவராகவும் வழிகாட்டியாகவும் கோட்டையாகவும் எல்லாமுமாகவும் இருக்கவேண்டும். அன்பானவர்களே, உங்கள் வாழ்க்கை இப்படிப்பட்டதாய் இருக்கிறதா? ஆண்டவரோடு நெருங்கி ஜீவிக்கிறீர்களா? "அவரே என் கோட்டை" என்று திடநம்பிக்கையுடன் உங்களால் கூற இயலுமா? அப்படியாயின், இந்த ஆண்டு முழுவதும் தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்களை அனுபவிப்பீர்கள்.
ஆண்டவரை உங்கள் குடும்பத்தின் தலைவராக ஏற்றுக்கொள்ளுங்கள். தினமும் குடும்பமாக கூடி, தேவனை நினைத்து, அவருடைய பரிபூரண ஆசீர்வாதத்தை உரிமையாக்கி ஜெபியுங்கள். அப்படிச் செய்யும்போது, இந்த வாக்குத்தத்தம் உங்கள் வாழ்வில் நிறைவேறும் (ஏசாயா 58:11). ஆண்டவர் தொடர்ந்து உங்களை நடத்தி, பெலப்படுத்தி, உங்கள் ஆத்துமாவை திருப்தியாக்குவார். அவர் உங்களுக்கு முன்னே சென்று தமது வேளையில் எல்லாவற்றையும் நேர்த்தியாக்குவார். இன்றைக்கு உங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்து, தாவீதைப்போல இந்த எளிமையானதும், வல்லமையானதுமான ஜெபத்தை ஏறெடுப்பீர்களா?
ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, புதிய ஆண்டை தொடங்கியிருக்கும் வேளையில் என் வாழ்க்கையை உமக்கு அர்ப்பணிக்கிறேன். நீரே எனக்கு கன்மலையாகவும் கோட்டையாகவும் நல்ல மேய்ப்பராகவும் இருக்கிறீர். அனுதினமும் எனக்கு வழிகாட்டி, என்னை நடத்தி, பெலப்படுத்தும். பஞ்சகாலத்தில் என் ஆத்துமாவை திருப்தியாக்கி, ஒருபோதும் இலையுதிராதிருக்கிற நீர்ப்பாய்ச்சலான தோட்டமாக என்னை மாற்றும். என் குடும்பத்துக்கும் என் வாழ்க்கைக்கும் நீரே தலைவராக இருந்தருளும். அடிதோறும் என்னை வழிநடத்துவீர் என்று நம்பி, உம்மோடு நெருங்கி ஜீவிக்க எனக்கு உதவி செய்யும். உம்முடைய பரிபூரண ஆசீர்வாதங்களினால் என்னை நிரப்பி, உமக்கு ஏற்றவேளையில் எல்லாவற்றையும் நேர்த்தியாக செய்யும். உம்முடைய சமுகம் என்னை எப்போதும் வழிநடத்தி, அனுதினமும் என்னை புதுப்பிக்கட்டும். உம்முடைய மாறாத வாக்குத்தத்தங்களுக்காகவும் நித்திய அன்புக்காகவும் உமக்கு நன்றி செலுத்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.