எனக்கு அன்பான தேவ பிள்ளையே, ஆண்டவர் தம் வார்த்தையின் மூலம் உங்களை ஆசீர்வதிப்பாராக. இன்றைக்கு, "இருதயத்தில் சுத்தமுள்ளவர்கள் பாக்கியவான்கள்; அவர்கள் தேவனைத் தரிசிப்பார்கள்" (மத்தேயு 5:8) என்ற வசனத்தை தியானிப்போம். ஆம், நாம் தேவனை தரிசிக்க முடியும்; அவரது பிரசன்னத்தை வல்லமையாக உணர முடியும். அப்படிப்பட்ட ஆழமான ஆவிக்குரிய அனுபவத்தை அடைவதற்கு நாம் ஆண்டவருடன் சஞ்சரிக்க வேண்டும். நம் முழு இருதயத்துடன் அவரைத் தேடி, இருதயத்தில் சுத்தமுள்ளவர்களாக இருக்க பிரயாசப்படவேண்டும். பழைய ஏற்பாட்டில் ஆபிரகாம், ஈசாக்கு, யாக்கோபு ஆகியோர் கர்த்தருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்தார்கள் என்று பார்க்கிறோம். அவர்கள் அவருடன் நடந்தார்கள்; பேசினார்கள்; அவர்கள் வாழ்க்கை அவருக்கு முன்பாக தூய்மையாய் இருந்தது.
நாமும் அவ்வாறே இருக்கவேண்டும். உங்கள் இருதயத்தை ஒருமுறை ஆராய்ந்து பாருங்கள். உங்கள் இருதயம் எப்படிப்பட்டதாயிருக்கிறது? ஆண்டவருக்கு முன்பு அது சுத்தமாயிருக்கிறதா? உண்மையாயிருந்த இவர்கள், தேவனுடன் எவ்வளவு நெருங்கிய ஐக்கியம் கொண்டிருந்தார்கள் என்பதை வேதத்தில் காணலாம் (ஆதியாகமம் 12:7; 31:13; 26:2; யாத்திராகமம் 3:2). அவ்வாறே, புதிய ஏற்பாட்டில் அப்போஸ்தலர்கள் ஆண்டவரை தங்கள் முழு இருதயத்துடனும் தேடினார்கள்; அதினால், பூரண ஆசீர்வாதத்தை பெற்றார்கள். புறஜாதியாக இருந்தாலும் கொர்நேலியு ஆண்டவரை உண்மையாய் தேடினான் (அப். 10ம் அதிகாரம்). அவனது தேவபக்தியின் காரணமாக, அவனும் அவன் வீட்டாரும் தேவனுடைய பரிபூரண ஆசீர்வாதங்களை அடைந்தனர்; அவரது வல்லமையால் நிரப்பப்பட்டனர்.
அன்பானவர்களே, இன்றைய தினம், உங்கள் பழக்கவழக்கங்களை மாற்றி, உங்கள் எண்ணங்களை புதுப்பித்துக்கொள்ளவேண்டிய நாளாகும். ஆண்டவரை கிட்டிச் சேருங்கள். நீங்கள் அவரை முழு இருதயத்துடன் தேடி, அவருக்கு முன்பாக பரிசுத்தமாக வாழ்ந்தால், அவரை தரிசிப்பீர்கள். என்னுடைய 16வது வயதில், நான் ஆண்டவரை முழு மனதுடன் தேடினேன்; அவர் என்னோடு பேசினார். நான் வழிவிலகும்போது அவர் என்னை திருத்தி, அவருடன் மீண்டும் ஐக்கியப்படும்படி நடத்துவார். இன்றைக்கு நீங்களும் இந்த ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளலாம். இப்போதே உங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணியுங்கள். ஆண்டவர் உங்கள் இருதயத்தை மறுரூபப்படுத்துவார்; உங்கள் சிந்தையை புதுப்பிப்பார்; உங்கள் வாழ்க்கையை பரிபூரண ஆசீர்வாதங்களால் நிரப்புவார். அவர் உங்களுடன் உலாவவும் உங்களுடன் உரையாடவும் வாஞ்சையாய் இருக்கிறார். ஆகவே, உங்கள் இருதயத்தை திறந்து, அவரைக் கிட்டிச் சேருங்கள்.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம் பார்வையில் சுத்தமானவனா(ளா)ய் காணப்பட விரும்பி, தாழ்மையுள்ள இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். எல்லா அசுத்தமும் நீங்கும்படி என்னை சுத்திகரித்து, என் இருதயத்தை உம்முடைய தெய்வீக பிரசன்னத்தால் நிரப்பும். உம்மை உண்மையாய் தேடுவதற்கும், தினமும் உம்மோடு நெருங்கி ஜீவிக்கவும் எனக்கு உதவும். ஆபிரகாமும் ஈசாக்கும் யாக்கோபும் அப்போஸ்தலர்களும் உம்மோடு நெருங்கிய ஐக்கியம் கொண்டிருந்ததுபோல என்னையும் உம்மிடம் கிட்டிச் சேர்த்திடும். உமக்கு பிரியமில்லாத காரியங்களை என் இருதயத்திலிருந்து விலக்கி, சுத்தமான இருதயத்தை எனக்குள் சிருஷ்டித்தருளும். என் எண்ணங்களும் வார்த்தைகளும் செய்கைகளும் உம்முடைய பரிசுத்தத்தையும் அன்பையும் பிரதிபலிக்கட்டும். உம்முடைய வல்லமையான பிரசன்னத்தை அனுபவிக்க இயலாதபடி என்னை பிரிக்கும் எல்லா காரியத்தையும் அகற்றும். கொர்நேலியுவைப்போல என் ஜெபம், என் வாழ்வின்மேலும் என் குடும்பத்தின்மேலும் உம்முடைய பரிபூரண ஆசீர்வாதங்கள் வருவதற்கு காரணமாய் அமையட்டும். நான் இன்னும் அதிகமாய் உம்மை அறிந்துகொள்ளும்படி நீதியில் நடப்பதற்கு எனக்கு போதித்தருள வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.