அன்பானவர்களே, "பயப்படுகிறதற்கு நீங்கள் அடிமைத்தனத்தின் ஆவியைப் பெறாமல், அப்பா பிதாவே, என்று கூப்பிடப்பண்ணுகிற புத்திர சுவிகாரத்தின் ஆவியைப் பெற்றீர்கள்" (ரோமர் 8:15)என்று வேதம் நமக்கு நிச்சயமாய்க் கூறுகிறது. இது, தேவன் உங்களுக்குத் தரும் வாக்குத்தத்தமாயிருக்கிறது. நாம் பாவத்திற்குள் விழுந்து, பிசாசுக்கு அடிமைப்படும்போது பயம் நம்மை பிடிக்கிறது. பாவத்தினால், பயமும், குற்றவுணர்ச்சியும் வருகிறது. பிசாசே பயத்திற்கு காரணமாயிருக்கிறான். ஆனால், நாம், நம்மை இயேசுவின் பரிசுத்த ஆவியானவருக்கு அர்ப்பணிக்கும்போது, தேவனை, நம் தகப்பன் என்று அழைக்கக்கூடிய கிருபையை பெறுகிறோம். பூரண அன்பு பயத்தை புறம்பே தள்ளும்.
இன்றைக்கு இயேசுவிடம் வாருங்கள்; எல்லா பாவத்திலிருந்தும், அடிமைத்தனத்திலிருந்தும் தம்முடைய விலையேறப்பெற்ற இரத்தத்தினால் உங்களை கழுவும்படி அவரிடம் கேளுங்கள். பிசாசு கொண்டு வரும் பாவமும் பயமும் உங்களைவிட்டு அகற்றப்படும்போது, நீங்கள் விடுதலையையும் சந்தோஷத்தையும் அனுபவிப்பீர்கள். நீங்கள் சந்தோஷப்பட்டு களிகூர்ந்து, "இப்போது பிசாசு ஓடிவிட்டான்; பாவம் போய்விட்டது; நான் இயேசுவின் பிள்ளையாக இருக்கிறேன். ஆண்டவரே, உமக்கு ஸ்தோத்திரம்," என்று கூறுவீர்கள். உங்களுக்கு கிருபையும் இரக்கமும் காண்பிக்க ஆண்டவர் எப்போதும் ஆயத்தமாயிருக்கிறார். நீங்கள் அவரிடம் வந்து, உங்கள் பாவங்களை அறிக்கையிடும்போது அவர் உங்களை மன்னிக்கிறார். இயேசுவே, பாவங்களிலிருந்து உங்களை இரட்சிக்கிறவர். அவர் பாவமறியாதவராக இருந்தபோதிலும், உங்கள் பாவங்கள் யாவற்றையும் சிலுவையில் தம்மீது ஏற்றுக்கொண்டார். தேவ இரத்தத்தின் பரிசுத்தம் விளங்கிய பரிசுத்தராக அவர் இருந்தார். அந்தச் சிலுவையில் இயேசு, "பிதாவே, இவர்களை மன்னியும். தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்கள்," என்று அவர் ஜெபித்தார்.
பாவத்திலிருந்து வெளியே வந்து, மன்னிப்புக்காக இயேசுவின் நாமத்தைச் சொல்லி கூப்பிடும் நீங்கள், இனி பாவத்தைக் கொண்டு வரும் பிசாசின் பிள்ளையல்ல; மாறாக, மன்னிப்பையும் ஜீவனையும் பரிசுத்தத்தையும் அளிக்கும் இயேசுவின் பிள்ளையாகிவிட்டீர்கள். ஆமாம், இயேசுவின் நாமத்தில் இரட்சிப்பு இருக்கிறது. உங்கள் பாவத்திலிருந்து நீங்கள் விடுதலையாகும்படி வேறு யாரும் தங்களையே பலியாகக் கொடுக்கவில்லை. பாவ மன்னிப்பை பெறுவதற்கு நீங்கள் இரத்தம் சிந்தவேண்டிய அவசியமோ, வேறு யாரின் பலியையும் தேடவேண்டிய தேவையோ இல்லை. மாம்சத்தில் வந்த தேவனாகிய இயேசு கிறிஸ்துவின் இரத்தமே, எல்லா பாவத்தையும் கழுவும். அன்பானவர்களே, இன்றே இயேசுவிடம் வாருங்கள். அவர் உங்கள் வாழ்வை மறுரூபமாக்கி, உங்களை பரிபூரணப்படுத்துவார்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை உம்முடைய பிள்ளையாக சுவீகரித்துக்கொண்டு, உம்மை அப்பா, பிதாவே என்று கூப்பிடும் சிலாக்கியத்தை தந்திருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் உம்மிடம் வந்து, என்னுடைய பாவங்களை அறிக்கையிட்டு, இயேசுவின் விலையேறப் பெற்ற இரத்தத்தின் மூலம் மன்னிப்பை வேண்டுகிறேன். என்னை கட்டியிருக்கும் எல்லா பாவமும், அடிமைத்தனமும், சாபமும் நீங்கும்படி என்னை கழுவியருளும். உம்முடைய பரிசுத்த ஆவியினால் என்னை நிறைத்து, உம்முடைய பூரண அன்பு, எல்லா பயத்தையும் என் இருதயத்தை விட்டு துரத்தும்படி செய்தருளும். ஆண்டவரே, எனக்கான தண்டனையை உம்மீது ஏற்றுக்கொண்டு, எனக்கு விடுதலையையும் இரட்சிப்பையும் தருவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னை புதுச்சிருஷ்டியாக்கி, உம்முடைய பிள்ளையாக பரிசுத்தமாக வாழ உதவி செய்யும். சத்துரு கூறும் பொய்களிலிருந்து என் உள்ளத்தையும் மனதையும் காத்துக்கொள்ளும். மன்னிப்பை பெற்று, உம்முடைய அன்பால் மீட்கப்பட்டதினால் கிடைக்கும் சந்தோஷத்தையும் விடுதலையையும் நான் அனுபவிக்க உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.