அன்பானவர்களே, "கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?" (சங்கீதம் 27:1) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாகும். காரணம் தெரியாத பயங்கள், மனச்சோர்வு, சிந்தனையும் கவனமும் பலம் குன்றுதல், பொல்லாத மக்களின் தாக்குதல், மாம்சத்தின் இச்சை, குற்றவுணர்ச்சி, தோல்விகள் என்று இவ்வுலக காரியங்கள் நம்மை பயமுறுத்தலாம். சிறிய தோல்விகளை நாம் சந்திக்க நேர்ந்தாலும், நம் பெலன் எல்லாம் வற்றிப்போய்விட்டது போன்று நாம் உணரக்கூடும். எப்போதும் எல்லாவற்றையும் இழந்துபோவதே நமக்கு நியமிக்கப்பட்டுள்ளது என்று சலித்துக்கொள்ளலாம்.

வேதாகமத்தில் பவுல் என்ற மனுஷர் இருந்தார். அவர் தன் கலக்கத்தில் தேவனை நோக்கிக் கூப்பிட்டார். தான் எதிர்கொள்ளும் எல்லா தாக்குதல்களும் முள்போல குத்துவதாக, சாத்தானே தாக்குவதுபோல இருப்பதாக கூறினார். அவர் ஆண்டவரிடம் மூன்று முறை, "இந்த முள்ளை எடுத்துப்போடும்," முறையிட்டார். ஆனால் ஆண்டவர் வந்து, "பவுலே, என்னுடைய பெலனே உனக்குத் தேவை. என் பெலன் (இயேசுவின் பெலன்) உன் பெலவீனத்தில் பூரணமாய் விளங்கும். என் கிருபை உனக்குப் போதும். பவுலே உம் பெலவீனத்தை பெரிதுபடுத்தாதே. உன் தவறுகளை எண்ணி கவலைப்படுவதிலும், பயப்படுவதிலும் காலத்தை கடத்தாதே. மாறாக, இயேசுவாகிய நான் எழும்பி உன்னை நிரப்புவதற்கு அனுமதிப்பதிலேயே நேரத்தை செலவிடு. ஜெயிப்பதற்கான எல்லா வல்லமையும் எனக்கு இருக்கிறது. எல்லாவற்றிலும் உன்னை சிறந்திருக்கச் செய்யும் வல்லமை என்னிடம் இருக்கிறது. ஆகவே, உனக்குள் எழும்ப என்னை அனுமதி," என்று கூறுகிறார். ஆகவேதான் பவுல், "இனி நான் அல்ல; கிறிஸ்துவே எனக்குள் இருக்கிறார். கிறிஸ்து எனக்குள் மகிமையின் நம்பிக்கையாயிருக்கிறார்," என்று அறிக்கையிட்டான். அந்த தருணத்திலிருந்து அவன் முற்றும் ஜெயங்கொண்டவனானான். அவன் மூலமாக, முழு உலகமுமே தேவ அன்பை பெற்றுக்கொண்டது. அன்பானவர்களே, நீங்களும் அதைப் பெற்றுக்கொள்ள முடியும். நீங்களும் அப்படி செய்யலாம்.

"ஆண்டவரே, நான் உம்மை எழும்பப்பண்ணுவேன். நீர் வந்து என்னை எழுப்புவதாக இல்லாமல், எனக்குள் நீர் எழும்பும்படி செய்வேன். நான் உம் பிள்ளை என்று அறிக்கையிடுவேன். உமக்கே எல்லா வல்லமையும் உண்டு. ஆண்டவரே, நீர் எனக்குள் இருக்கிறீர். ஆண்டவரே, எனக்குள் ஞானமாய், பெலனாய் தயவுடன் எழும்புவீராக. என் வாழ்க்கைக்கு தேவையானவற்றுடன் நீர் எனக்குள் எழும்பும். ஜெயத்துடன் எழும்பும். நீர் மரணத்தை ஜெயித்து, சாவிலிருந்து எழும்பியபடியினால் எனக்குள்ளும் எழும்புவீர்," என்று நீங்கள் தொடர்ந்து அறிக்கையிடும்போது, இயேசு உங்களுக்குள் பெருகுவார்; உங்கள் பயங்கள் காணாமல்போகும். உங்களை நேசிக்கிற அவர் மூலமாய் நீங்கள் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவர்களாய் விளங்குவீர்கள்.

அரவிந்த் ஜெயராமன் என்ற சகோதரரின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவர் ஆடிட்டர்  (சார்ட்டட் அக்கவுண்டண்ட்) தகுதிக்கான தேர்வின் இரண்டு நிலைகளில் ஒரே முயற்சியில் தேர்ச்சி பெற்றார். அதற்கான இறுதி தேர்வை எழுத முயற்சிக்கும்போது, சிந்திப்பதிலும் ஞாபக சக்தியிலும் அவருக்கு சிக்கல் ஏற்பட்டது. அவரால் கவனம் செலுத்தி படிக்க முடியவில்லை. பயம் அவரை பிடித்தது. மருத்துவர்கள் மிகவும் சிறப்பாக அவரை கவனித்தபோதிலும், சிகிச்சை பலன் தரவில்லை. இந்த மனக்கலக்கத்தில், "என் வாழ்க்கையை முடித்துக்கொள்ளட்டும்" என்று அவர் எண்ணினார். எதிர்காலத்தை குறித்த பயம் அவரை வாட்டியது. ஆனால், தேவன் ஒரு திட்டம் வைத்திருந்தார். அரவிந்த் ஜெயராமனின் பெற்றோர் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தை குறித்து கேள்விப்பட்டு, அவரை அங்கே அழைத்துச் சென்றனர். ஜெப வீரர்கள் அவருடன் அமர்ந்து, இயேசுவின் மூலம் அவரை ஆறுதல்படுத்தி, இயேசுவால் அவருக்கு உதவி செய்ய முடியும் என்று கூறினர். அவர்கள் அவருடன் இணைந்தும், அவருக்காகவும் ஜெபித்தனர். பெற்றோர் அவரை இயேசு அழைக்கிறார் இளம் பங்காளராக இணைத்தனர். இளம் பங்காளர்களுக்காக நாங்கள் தினமும் ஜெப கோபுரத்தில் ஜெபிக்கிறோம். நாங்கள் குடும்பமாகவும் ஜெபிக்கிறோம். இளம் பங்காளர்கள் தருகிற காணிக்கைகளால், இயேசு அழைக்கிறார் ஊழியம் பல லட்சம் மக்களுக்கு இலவசமாகவே ஊழியம் செய்ய முடிகிறது. ஆண்டவர் அந்த ஆசீர்வாதங்கள், இளம் பங்காளர்களின் வாழ்வில் ஆசீர்வாதமாக பொழிந்தருளும்படி செய்கிறார். ஆகவே, அரவிந்த் இளம் பங்காளராக சேர்ந்தார். அவர் வேதாகமத்தை வாசித்து இயேசுவிடம் ஜெபிக்க தொடங்கினார். ஆசீர்வாதம் பெற்ற மக்களின் சாட்சிகளை இயேசு அழைக்கிறார் பத்திரிகையில் வாசித்த அரவிந்தின் இருதயத்தை விசுவாசம் நிறைத்தது. அவர் சுகம் பெற்றார். தற்கொலை எண்ணம் மறைந்தது. படிப்பில் கவனம் செலுத்த முடிந்தது. சார்ட்டட் அக்கவுண்டண்ட்வுக்கான இறுதி தேர்வை எழுதினார்; பெரிய வெற்றியை பெற்றார். தற்போது ஆடிட்டராக (சார்ட்டட் அக்கவுண்டண்ட்) பணியாற்றுகிறார். "கர்த்தர் என் ஜீவனின் பெலனானவர், யாருக்கு அஞ்சுவேன்?" என்று கூறுங்கள். இயேசு உங்களுக்கு உதவுவார். உங்கள் வாழ்க்கையை அவரிடம் ஒப்படையுங்கள்.  உங்களுக்குள் எழும்ப அவரை அனுமதியுங்கள். அவர் உங்கள் ஜீவனின் தேவனானபடியினால் அவரை துதியுங்கள். இனி நீங்கள் அல்ல; உங்கள் வெற்றி அல்ல; இயேசுவே உங்களுக்குள் வெற்றியின் நம்பிக்கையாக இருப்பார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நீரே எனக்கு அரணான கோட்டையாக, எனக்கு அடைக்கலமாக, எனக்கு பெலனாக இருக்கிறீர். பயமும் தோல்வியும் என்னை மேற்கொள்ள முயற்சிக்கும்போது, உம்முடைய கிருபை போதுமானது என்று எனக்கு நினைவுப்படுத்தும். நீர் பவுலை பெலப்படுத்தியதுபோன்று, என்னுடைய பெலவீனத்தில் உம்முடைய பெலன் பரிபூரணமாக விளங்கட்டும். என்னுடைய போராட்டங்களை பெரிதாக காண்பிக்காமல், என் வாழ்க்கையில் உம்மை மகத்துவமாக காண்பிக்க எனக்கு உதவும். ஆண்டவரே, எனக்குள் எழுந்தருளும். உம்முடைய ஞானத்தினாலும் பெலத்தினாலும் தயவினாலும் என்னை நிரப்பும். உம்முடைய பிரசன்னம் என் சந்தேகங்களையும், பயங்களையும், சத்துருவின் சகல தாக்குதல்களையும் ஜெயிப்பதாக. என் கவலைகளை உம்மிடம் ஒப்படைக்கிறேன். என் வாழ்வின் எப்பக்கமும் உம் நாமம் மகிமைப்படட்டும். நீர் பெருகவேண்டும்; நான் சிறுகவேண்டும். நீர் எனக்குள் இருக்கும்போது நான் முற்றும் ஜெயங்கொள்ளுகிறவனா(ளா)க விளங்குவேன் என்பதை அறிந்து உம்மை முற்றிலும் நம்பி இயேசுவின் வல்லமையான நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.