அன்பானவர்களே, புத்தாண்டில் நுழைந்திருக்கிறவேளையில், தேவன் நமக்கு கொடுக்க இருக்கும் அருமையான காரியங்களை எதிர்பார்த்திருப்போம். "உன் வழிகளிலெல்லாம் உன்னைக் காக்கும்படி, உனக்காகத் தம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிடுவார்" (சங்கீதம் 91:11) என்று அவருடைய வாக்குத்தத்தம் கூறுகிறது. தேவன், தம் ஜனங்களை காக்கும்படி தம் தூதர்களுக்குக் கட்டளையிடுவார் என்பதை எவ்வளவு நிச்சயமானது! தேவனுடைய தூதர்கள் உங்களை நோக்கிக்கொண்டிருக்கிறபடியினால் பயப்படவேண்டிய அவசியமேயில்லை.

தேவன் இதை எப்படி அசாதாரணமானவிதங்களில் செய்தார் என்பதற்கு வேதத்தில் அநேக எடுத்துக்காட்டுகள் உள்ளன. இஸ்ரவேல் ஜனங்களுக்காக யுத்தம்பண்ணும்படி தேவன் அநேகமுறை தம் தூதர்களை அனுப்பியிருக்கிறார். தூதர்கள் அவர்களுக்கு முன்னே சென்று, போரிட்டு, தேவ ஜனங்களுக்காக ஜெயம் பெற்றிருக்கிறார்கள். தேவனுடைய ஊழியனாகிய எலியா, ஒருமுறை கலக்கமுற்று, விசுவாசத்தில் தளர்ந்து, சரீரப்பிரகாரமாகவும் ஆவிக்குரிய பிரகாரமாகவும் சோர்ந்துபோனான். தேவன் இரக்கமாக தம்முடைய தூதனை அனுப்பி அவனுக்கு புத்துயிர் அளித்து, அவன் விசுவாசத்தை பெலப்படுத்தி, அவர் சரீரத்திற்கு புதுப்பெலனை கொடுத்து, தொடர்ந்து செல்லும்படி செய்தார். எலியா விசுவாசத்தை இழந்துவிடாதவண்ணம் தேவன் அவன் பாதையை காத்தார்.

யோசேப்பையும் எண்ணிப்பாருங்கள். அவன் மரியாளுக்கு நியமிக்கப்பட்டிருந்தான். திருமணத்திற்கு முன்பே அதிசயவிதமாக அவள் கர்ப்பமுற்றிருப்பதை அறிந்ததும் அவளை இரகசியமாய் தள்ளிவிட அவன் யோசனையாயிருந்தான். ஆனாலும் தேவன் இடைப்பட்டு, தம்முடைய தூதனை அனுப்பி, "இது சாதாரண குழந்தையல்ல; என்னுடைய ஆவியினாலே உண்டான பரிசுத்த பிள்ளை," என்று அவனுக்கு உறுதிப்படுத்தினார். தூதன் மூலமாக செய்தி அனுப்பி, தேவன் யோசேப்பின் எதிர்காலத்தை காத்து, மரியாளை திருமணம் செய்துகொண்டு, தெய்வீக அழைப்புக்கேற்ப குடும்பமாக வாழும்படி தைரியப்படுத்தினார்.

சிலவேளைகளில் தூதர்கள் நமக்குக் காட்சியளிக்கிறார்கள்; வேதாகமத்தில் செய்ததுபோல நம்மை பெலப்படுத்தி வழிநடத்துகிறார்கள். சிலவேளைகளில் தூதனின் ரூபத்தில் ஆண்டவர்தாமே வருகிறார். மற்ற நேரங்களில், அவர் தம்முடைய ஊழியராக இருக்கும் சாதாரண மனிதர்களை நமக்கு உதவி செய்யவும் நம்மை காக்கவும் தூதர்களாக அனுப்புகிறார். வழிகளிலெல்லாம் உங்களைக் காக்கும்படி தம்முடைய தூதர்களுக்கு அவர் கட்டளையிடுவதாக வாக்குத்தத்தம் கூறுகிறது. அவர் உங்கள் காலை தள்ளாடவிடமாட்டார். இந்த உன்னதமான வாக்குத்தத்தத்திற்காக இருதயத்தை உயர்த்தி துதித்து, நன்றியுடன் அதைப் பெற்றுக்கொள்வீர்களா?

ஜெபம்:
அன்புள்ள பரம தகப்பனே, புத்தாண்டு தொடங்கியிருக்கிற நிலையில் உம்முடைய வாக்குத்தத்தங்களே எனக்கு உறுதியான நிச்சயத்தை தருகின்றன. அதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் செல்லுகிற பாதையில் என்னை காக்கும்படி உம்முடைய தூதர்களுக்குக் கட்டளையிட்டிருக்கிறபடியினால் உமக்கு நன்றி செலுத்துகிறேன். எலியாவின் விசுவாசத்தை நீர் பெலப்படுத்தியதுபோல என்னுடைய விசுவாசத்தையும் பெலப்படுத்தும்; யோசேப்பை நீர் வழிநடத்தியதுபோல என்னையும் வழிநடத்தும். நீர் வேண்டியவற்றை தருவீர் என்று நாம் நம்பிக்கையாயிருக்க உதவி செய்யும். உம்முடைய சமுகம் என்னை சூழ்ந்திருப்பதற்காகவும் தூதர் சேனை என்னை காப்பதற்காகவும் உமக்கு நன்றி. நீர் ஒருபோதும் என் காலை தள்ளாடவிடமாட்டீர். உம்முடைய கிருபையை எண்ணி, என் இருதயத்தை உயர்த்தி துதித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.