அன்பானவர்களே, நீங்கள் இயேசுவின் நாமத்தில் எதைக் கேட்டாலும் அதைப் பெற்றுக்கொள்வீர்கள் என்பதை மறந்துபோகாதிருங்கள். தேவனிடம் எதைக் கேட்கவேண்டும் என்று அறிந்துகொள்ளும்படி பரிசுத்த ஆவியானவர் உங்களை வழிநடத்துவார். பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு உதவி செய்கிறவர் என்று வேதவசனம் கூறுகிறது. "ஆவியானவரும் நமது பலவீனங்களில் நமக்கு உதவிசெய்கிறார்" (ரோமர் 8:26) என்று வேதத்தில் வாசிக்கிறோம். சவால்களை, நிச்சயமற்ற சூழலை நீங்கள் எதிர்கொள்ளும்போது, தேவனுடைய சித்தத்தை எப்படி அறிந்துகொள்ள முடியும்? பரிசுத்த ஆவியானவர் வந்து, தேவனுடைய சித்தத்தை உங்களுக்குக் காண்பிப்பார். தேவனுடைய சித்தத்தை அறிந்துகொள்ளும்படி நீங்கள் நாடினால் மாத்திரமே அவர் அதை உங்களுக்கு வெளிப்படுத்துவார். யாரை திருமணம் செய்வது? எந்த வேலை செய்வது? எந்தப் படிப்பை படிப்பது? எங்கே வேலை செய்வது? என்று நிதானித்து அறிவதற்கு உதவக்கூடிய கிருபையை இன்று நீங்கள் பெற்றுக்கொள்ளலாம். "நீங்கள் பேசவேண்டியவைகளைப் பரிசுத்த ஆவியானவர் அந்நேரத்திலே உங்களுக்குப் போதிப்பார்" (லூக்கா 12:12) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்த வசனமாகும். சிலநேரங்களில் என்ன ஜெபிப்பது என்று நீங்கள் அறியாதிருக்கலாம்; ஆனால், எப்படி ஜெபிக்கவேண்டும் என்று பரிசுத்த ஆவியானவர் உங்களுக்கு கற்றுக்கொடுப்பார். உங்கள் உயரதிகாரிகளை சந்திக்கும்போது, விசாரணை குழுவின் முன் ஆஜர் ஆகும்போது, நிர்வாக கூட்டத்தில் கலந்துகொள்ளும்போது, குடும்ப விஷயங்களை நிர்வகிக்கும்போது, பரிசுத்த ஆவியானவர் உங்கள் மூலமாக பேசி, உங்களை வழிநடத்துவார். இன்றைக்கு உங்களை நிரப்புவதற்கு பரிசுத்த ஆவியானவர் ஆயத்தமாயிருக்கிறார்.தேவனுடைய கிருபை உங்கள்மேல் வரவேண்டும் என்று இயேசுவின் நாமத்தில் நான் ஜெபிக்கிறேன். மற்றவர்களையும் வழிநடத்தும்படி தமது ஆவியினால் அவர் உங்களை அபிஷேகிப்பார்.

விசாகப்பட்டினத்தை சேர்ந்த பிரசன்ன குமார் என்ற சகோதரர் அவருடைய சாட்சியை பகிர்ந்துகொண்டார். மிகவும் அருமையான சாட்சி அது. அவர் நெடுங்காலமாக இன்னொரு நல்ல வேலை வேண்டும் என்று தேடிக்கொண்டிருந்தார். ராஜமுந்திரியில் நடைபெற்ற இயேசு அழைக்கிறார் கூட்டங்களில் கலந்துகொண்டார். கூட்டத்தில் நான் ஜெப நேரத்தில், "ஆண்டவரே, வேலை இல்லாதவர்கள், நாளை இந்தக் கூட்டத்திற்கு வரும்போது வேலையோடு வரவேண்டும்," என்று ஜெபித்தேன். ஆச்சரியவிதமாக, அன்று இரவே மும்பையில் ஐஐடி தேர்வுக்கு பயிற்சியளிக்கும் நிறுவனத்திடமிருந்து அவருக்கு தொலைபேசி அழைப்பு வந்தது. ஆண்டுக்கு 35 லட்ச ரூபாய் ஊதியத்தில் வேலை இருப்பதாக தெரிவித்தார்கள். அவர் நினைத்துப் பார்த்திராத அளவு பெரிய வேலை அது. ஆனாலும், அதை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்ற தயக்கம் அவருக்குள் எழுந்தது. அடுத்த நாள் பங்காளர் கூட்டத்திற்கு வந்தார். நான் செய்தியளிப்பதற்கு முன்பு, "உங்களுக்கு முன்னே இருக்கும் வேலையை எடுத்துக்கொள்வதா, வேண்டாமா என்று இப்போது வரைக்கும் போராடிக்கொண்டிருந்தீர்கள். ஆனால், ஆண்டவர் உங்களுக்கு ஆலோசனை சொல்லி, நீங்கள் போகவேண்டிய வழியை காட்டுவார்," என்று தீர்க்கதரிசனமாக கூறினேன். உடனே, அந்த வேலையை ஏற்றுக்கொள்ளும்படியான உணர்த்தலை பெற்றார். அந்த நிறுவனத்தில் சேர்ந்தார். ஆண்டவரின் ஆவியினால் வழிநடத்தப்படுவது எத்தனை பெரிய பாக்கியம்!

அன்பானவர்களே, பரிசுத்த ஆவியானவருக்காக தேவனை ஸ்தோத்திரியுங்கள். இப்போது வேலை தேடிக்கொண்டிருப்பீர்களானால், நீங்கள் எதிர்பார்ப்பதற்கும் மேலாய், நல்ல ஊதியத்தில் ஆண்டவர் உங்களுக்கு வேலையை தருவார் என்று விசுவாசியுங்கள். இந்த ஆசீர்வாதம் உங்களுக்குக் கிடைக்கும்படி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, என் வாழ்க்கையை குறித்த உம்முடைய பூரண திட்டத்தை அறிந்துகொள்ள முடியும் என்று எனக்குக் கற்றுக்கொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னுடைய எல்லா பெலவீனங்களிலும் எனக்கு உதவி செய்யும்படியும், எல்லாவற்றையும் சரியாய் நிதானிப்பதற்கான அறிவை தரும்படியும் உம்முடைய விலையேறப்பெற்ற பரிசுத்த ஆவியானவரை அனுப்புகிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். இப்போதும் என் வாழ்க்கையில் சிறு விவரங்கள் உள்பட எல்லாவற்றையும் உம்முடைய அன்பின் கரங்களில் ஒப்படைக்கிறேன். என்னை உம்முடைய பரிசுத்த ஆவியினால் நிரப்பும். என் வாழ்க்கையில் அவரை செயல்பட அனுமதிக்கும்போது, அவர் சகல சத்தியத்திற்குள்ளும் என்னை நேர்த்தியாய் நடத்தி, உம்முடைய உயர்வான எண்ணங்களை எனக்கு வெளிப்படுத்துவார் என்று விசுவாசிக்கிறேன். உம்முடைய சத்தத்தை கேட்கவும், வாழ்வில் எல்லா நிலைகளிலும் உம்முடைய வழிகாட்டுதலை பின்தொடரவும் உம்முடைய கிருபையையும் பெலத்தையும் நான் பெற்றுக்கொள்ளவேண்டும் என்று ஜெபிக்கிறேன். எனக்கான ஆசீர்வாதங்களுக்கு நேராக என்னை வழிநடத்தும்படி நீர் என்னோடிருப்பதற்காக நன்றி செலுத்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.