அன்பானவர்களே, "கர்த்தருக்குப் பயப்படுகிறவனுக்குத் திடநம்பிக்கை உண்டு; அவன் பிள்ளைகளுக்கும் அடைக்கலம் கிடைக்கும்" (நீதிமொழிகள் 14:26) என்ற வல்லமையான வாக்குத்தத்தம் இன்று நமக்கு கொடுக்கப்பட்டுள்ளது.

நீங்கள் கர்த்தருக்குப் பயப்படும் பயத்தில் நடந்திருக்கிறீர்கள். "என் பிள்ளைகளை தேவ பயத்தில் வளர்க்கவேண்டும்," என்று நீங்கள் சொல்லி, அப்படியே செய்துமிருக்கிறீர்கள். தேவனுக்கு பயந்து, அவருடைய கட்டளைகளின்படி நடந்து, அவருடைய வசனத்துக்கு கீழ்ப்படிந்திருக்கிறீர்கள். அவருக்கு முன்பாக நீதியாக நடந்து, பயபக்தியோடு காணிக்கைகளை செலுத்தி, மற்றவர்களுக்கு இயேசுவைக் குறித்து உண்மையாய் சாட்சி கூறியிருக்கிறீர்கள். பொல்லாத மனுஷர்களின் குற்றச்சாட்டுகள், தாக்குதல்களின் மத்தியிலும் பொறுமையாக, கர்த்தரின் பயத்தில் வேரூன்றி இருந்திருக்கிறீர்கள். இதற்காக இன்று தேவன் உங்களை ஆசீர்வதிக்கிறார். தேவன் உங்களோடிருக்கிறார்; உங்களுக்காக யுத்தம்பண்ணுவார் என்ற அசைக்கமுடியாத உறுதியான திடநம்பிக்கையை தருகிறார். பெரிய இடுக்கண்களின் மத்தியிலும் அவர் உங்களுக்காக யாவற்றையும் செய்து முடிப்பார் என்பதே அந்த நம்பிக்கை. தேவன், உங்கள் பிள்ளைகளுக்கு அரணாக இருந்து, அவர்களை பராமரித்து, அவர்கள் பாதைகளைச் செவ்வையாக்கி, பாதுகாத்து, செழிக்கப்பண்ணுவார் என்பதே அந்த திடநம்பிக்கையாகும். இதுவே உங்களுக்கு, உங்கள் குடும்பத்தினருக்கு, உங்கள் பிள்ளைகளுக்கு தேவன் தரும் வாக்குத்தத்தமாகும்.

சுகந்தி என்ற அன்பு சகோதரியின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். அவர்களுக்கு ஏஞ்சல் என்ற மகள் இருக்கிறாள். மகள் இரண்டு வயது குழந்தையாக இருந்தபோது, சகோதரி சுகந்தியின் கணவர், அவர்களை நிராதரவாய் விட்டு சென்றுவிட்டார். சுகந்தி, வாடகை வீட்டில் இருந்தார்கள்; மகள் உடல் ஆரோக்கியமில்லாமல் இருந்தாள். அவளை கவனிக்க அவர்கள் போராடினார்கள். மகள் ஏஞ்சலுக்கு அடிக்கடி மூக்கு, வாய் வழியாக இரத்தம் வரும். அடிக்கடி அவள் சுகவீனப்பட்டாள். ஆகவே, சுகந்தி, எல்லா பணத்தையும் மருத்துவத்திற்குச் செலவிட்டார்கள். ஆனாலும், பலன் கிடைக்கவில்லை. இந்த துயரமான நேரத்தில் அவர்கள் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தை பற்றி கேள்விப்பட்டிருக்கிறார்கள். அங்கு வந்து, சிறிய தொகையை காணிக்கையாக கொடுத்து மகளை இளம் பங்காளராக ஊழியத்தில் சேர்த்திருக்கிறார்கள். ஜெப கோபுரத்தில் தினமும் அவர்கள் மகளுக்காக ஜெபங்கள் ஏறெடுக்கப்பட்டன. அதிசயவிதமாக தேவன் ஏஞ்சலை சுகப்படுத்தியுள்ளார். அவள் பெலம் பெற்று வளர்ந்து, படித்து, எம்.ஏ. பட்டம் பெற்றிருக்கிறாள். தன் மகளுக்கு நல்ல கணவரை தேடுவதில் ஆண்டவரின் உதவியை நாடி, சுகந்தி மறுபடியும் ஜெப கோபுரத்தில் ஜெபிக்கும்படி வந்திருக்கிறார்கள். அற்புதவிதமாக ஒரு நல்ல மனிதர், ஏஞ்சலுக்கு கணவராக அமைந்துள்ளார். அவர்களுக்கு குழந்தைகள் பிறந்துள்ளனர். பாட்டி, நன்றியறிதலுடன் தன் பேரப்பிள்ளைகள் இருவரையும் இளம் பங்காளர் திட்டத்தில் இணைத்துள்ளார்கள். தேவன் அவர்களையும் ஆசீர்வதித்துள்ளார். அவரே அவர்களுக்கு அரணும் திடநம்பிக்கையுமாய் விளங்கியிருக்கிறார். சகோதரி சுகந்தியின் பேத்தி ஜெனிலியா, பத்தாம் வகுப்பில் 483/500 மதிப்பெண் பெற்றிருக்கிறாள். அதற்காக நான்கு பதக்கங்களும் அவளுக்கு கிடைத்துள்ளன. அனைவர் முன்பாகவும் தேவன் அவர்களை கனப்படுத்தியுள்ளார். மெய்யாகவே, அம்மா ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்; மகள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்; பேத்தியும் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறாள். தேவனே நமக்கு திடநம்பிக்கையாயிருக்கிறார். எல்லாரும் கைவிட்டாலும், தேவனே நமக்கு திடநம்பிக்கையாயிருக்கிறார். நீங்கள் ஆண்டவருக்கு பயந்து, அவருக்கு முன்பாக நீதியாய் வாழ்வதால், அவர் உங்கள் பட்சத்தில் நிற்பார். அவர் வாக்குப்பண்ணியுள்ளபடியே, உங்கள் பிள்ளைகளுக்கும், பேரப்பிள்ளைகளுக்கும் அவர் அரணாக விளங்குவார்.

ஜெபம்:
பரம தகப்பனே, நன்றி நிறைந்த இருதயத்தோடும் பயபக்தியோடும் உம்மிடம் வருகிறேன். என்னுடைய முழு ஆத்துமாவோடும் இருதயத்தோடும் பெலத்தோடும் உம்மிடம் அன்புகூரும்படி, உம்மைப் பற்றிய பரிசுத்தமான பயத்தினால் என்னை நிரப்பும். உம்முடைய வசனத்திற்குக் கீழ்ப்படிவதிலும், உம்முடைய கட்டளைகளுக்கு உண்மையாயிருப்பதிலும் நான் ஜீவிக்கிற சாட்சியாக விளங்கும்படி செய்யும். உபத்திரவங்கள், குற்றச்சாட்டுகளின் மத்தியிலும் பொறுமையாய், உம்மேல் உறுதியான நம்பிக்கையோடு இருப்பதற்கு தேவையான கிருபையை எனக்கு அளித்தருளும். தகப்பனே, என்னுடைய திட நம்பிக்கையாக இருப்பதற்காக, எனக்காகவும் என் குடும்பத்துக்காகவும் யாவற்றையும் செய்து முடிப்பதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய பாதுகாக்கிற, ஆசீர்வதிக்கிற கரம் என் குடும்பத்தின் மேலிருந்து எங்களை வழிநடத்தி, உம்முடைய பாதைகளில் செழிக்கப்பண்ணவேண்டுமென்று ஜெபிக்கிறேன். ஆண்டவரே, எனக்கு புதிய வாய்ப்புகளை தந்து, நான் உம்மை உண்மையாய் சேவிக்கும்படி நடத்தும். நீர் செல்வாக்கான இடங்களில் அமர்த்தியுள்ளவர்களுடன் நடக்குமளவுக்கு நான் உயர எனக்கு உதவி செய்யும்; நான் பெற்றுக்கொள்கிற எல்லா ஆசீர்வாதங்களினாலும் உம்முடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வர உதவ வேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.