எனக்கு அன்பான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமான இயேசு கிறிஸ்துவின் வல்லமையான நாமத்தில் உங்கள் வாழ்த்துகிறேன். ஆண்டவர், இன்றைக்கு நாம் தியானிக்கும்படியாக, "என் நாமத்தினாலே நீங்கள் எதைக்கேட்டாலும் அதை நான் செய்வேன்" (யோவான் 14:14) என்ற வசனத்தை தந்திருக்கிறார். "நாம் எதையாகிலும் அவருடைய சித்தத்தின்படி கேட்டால், அவர் நமக்குச் செவிகொடுக்கிறாரென்பதே அவரைப் பற்றி நாம் கொண்டிருக்கிற தைரியம்" (1 யோவான் 5:14) என்றும் வேதம் கூறுகிறது. ஆகவே, அன்பானவர்களே, நீங்கள் விரும்புகிறவற்றை இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் கேளுங்கள். "சர்வவல்லமையுள்ள தேவன் என்னும் நாமத்தினால் நான் ஆபிரகாமுக்கும் ஈசாக்குக்கும் யாக்கோபுக்கும் தரிசனமானேன்" (யாத்திராகமம் 6:3) என்று கர்த்தர் கூறுகிறார். ஆகவே, நீங்கள் ஜெபம்பண்ணும்போது, சர்வவல்லமையுள்ள தேவனிடம், "ஆண்டவரே, என்மேல் இரக்கமாயிரும்," என்று அவரது நாமத்தில் ஆசீர்வாதங்களை கேளுங்கள்.

வேதாகமத்தில் மனோவா என்று ஒருவர் இருந்தார். அவர் சிம்சோனின் தந்தை ஆவார். அவர் கர்த்தரிடம், "உம்முடைய நாமம் என்ன?" என்று கேட்டார். அதற்கு தேவனாகிய கர்த்தர், தம்முடைய நாமம் அதிசயம் என்று கூறினார் (நியாயாதிபதிகள் 13:17,18). "இதுவரைக்கும் நீங்கள் என் நாமத்தினாலே ஒன்றும் கேட்கவில்லை; கேளுங்கள், அப்பொழுது உங்கள் சந்தோஷம் நிறைவாயிருக்கும்படி பெற்றுக்கொள்வீர்கள்" (யோவான் 16:24) என்று ஆண்டவராகிய இயேசு நம்மை உற்சாகப்படுத்துகிறார். ஆகவே, நீங்கள் இயேசுவின் நாமத்தில் கர்த்தரிடம் கேளுங்கள்; அவரிடத்திலிருந்து எல்லாவற்றையும் பெற்றுக்கொள்வீர்கள்;உங்கள் சந்தோஷம் பூரணமாயிருக்கும்.

நாம் ஆண்டவரிடம் அவரது நாமத்தில் கேட்கும்போது, அவர் நமக்கு தம்முடைய நன்மையான ஈவுகளை தருவார் என்று வேதம் கூறுகிறது (மத்தேயு 7:11). வேதம் கூறுகிறபடி, தேவனுடைய நன்மையும் கிருபையும் ஆயுள்பரியந்தம் நம்மை தொடரும்; நம்முடைய தேவைகள் எல்லாவற்றையும் அவர் நேர்த்தியாய் அருளிச்செய்வார்.  நாம் விரும்புகிறதற்கும் வேண்டிக்கொள்ளுகிறதற்கும் மேலாக தேவன் நம் தேவைகளை சந்திப்பார் என்றும் வேதம் கூறுகிறது (எபேசியர் 3:20). இப்போது, ஆண்டவரிடம் அவரது நாமத்தில் கேட்பீர்களா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, "கேளுங்கள், அப்பொழுது உங்களுக்குக் கொடுக்கப்படும்," என்று நீர் கூறியிருப்பதால், உம்முடைய வல்லமையுள்ள நாமத்தில், உம்முடைய ஆசீர்வாதங்களை தேடி வந்திருக்கிறேன். உம் முன்னே சாஷ்டாங்கமாய் விழுந்து, என்னுடைய விண்ணப்பங்களை சமர்ப்பிக்கிறேன். நீரே எனக்கு வேண்டியவற்றை அருளிச்செய்கிறவராகவும், என் சமாதானப் பிரபுவாகவும், என்னுடைய பரிகாரியாகவும், என்னை விடுவிக்கிறவராகவும், என்னை இரட்சிக்கிறவராகவும் இருக்கிறீர். நீர் ஜெபத்திற்கு பதிலளிக்கிற தேவனாயிருக்கிறீர். என்னுடைய கூப்பிடுதலை கேட்டு, என்னுடைய உபத்திரவங்களிலிருந்து என்னை விடுவித்து, என் தலையை உயர்த்துவீராக. உம்மிடத்தில் நான் கேட்பதற்கும், நான் விரும்புகிறதற்கும் மேலாக என்னுடைய தேவைகள் எல்லாவற்றையும் சந்திப்பீராக. ஆண்டவரே, என்னுடைய ஜெபத்திற்குச் செவிகொடுப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உமக்கே சகல மகிமையையும் செலுத்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.