அன்பானவர்களே, மகிழ்ச்சியோடு உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன் சந்ததியை வானத்து நட்சத்திரங்களைப் போலவும், கடற்கரை மணலைப்போலவும் பெருகவே பெருகப் பண்ணுவேன்" (ஆதியாகமம் 22:17) என்ற வசனத்தை தியானிப்போம். ஆம், அன்பானவர்களே, உங்களை நிச்சயமாகவே ஆசீர்வதித்து, அபரிமிதமாய் பெருகப்பண்ணுவதாக தேவன் வாக்குப்பண்ணுகிறார்.

குழந்தைக்காக நீங்கள் ஆவலுடன் காத்துக்கொண்டிருக்கலாம். பல ஆண்டுகள் அந்த ஆசீர்வாதத்திற்காக நீங்கள் நம்பிக்கையோடு ஜெபித்துக்கொண்டிருக்கலாம். இன்னும் குழந்தை பிறக்காத நிலையில் சந்தோஷமாக குடும்ப வாழ்க்கை நடத்தி உங்களைச் சுற்றிலுமிருக்கிறவர்களுக்கு முன்பு சாட்சியாக விளங்குவது சவாலான காரியமாக இருக்கலாம். குடும்ப வாழ்க்கையை ஆரம்பிப்பது குறித்து மற்றவர்கள் உங்களிடம் விசாரிக்கும்போது உள்ளத்தில் பெரிய வேதனையை நீங்கள் உணரலாம். புறக்கணிக்கப்பட்ட, வெட்கமான சூழ்நிலையில் வீட்டை விட்டு வெளியே வரக்கூட முடியாமல் நீங்கள் இருக்கலாம். ஒருவேளை வாழ்க்கை துணை என்னும் ஆசீர்வாதத்திற்காக நீங்கள் காத்திருக்கலாம். உங்கள் வேலையில், வியாபாரத்தில் எந்த வளர்ச்சியையும் காணமுடியாமலிருக்கலாம்; உங்கள் படிப்பில், தேர்வுகளில் நீங்கள் விரும்பிய மதிப்பெண்கள் கிடைக்காமல் இருக்கலாம்.

ஒருவேளை, மருத்துவர்கள் உங்களை கைவிட்டிருக்கலாம்; ஆசிரியர்கள் கைவிட்டிருக்கலாம். நீங்கள் அதிகமாய் நம்பியவர்கள் உங்களை கைவிட்டிருக்கலாம். வாழ்க்கை ஸ்தம்பித்துப்போய், எதிர்காலம் எப்படியிருக்குமோ என்று நீங்கள் திகைத்துக்கொண்டிருக்கலாம். ஆபிரகாமையும் சாராளையும், எண்ணற்றதும், வானத்து நட்சத்திரங்களையும், கடற்கரை மணலையும்போல கணக்கற்றதுமான  சந்ததியை கொடுத்து ஆசீர்வதித்ததுபோல, அவர் உங்களையும் ஆசீர்வதித்து வர்த்திக்கப்பண்ணுவார். காணக்கூடிய ஆதாரங்களின்றி, தேவன் உங்களைக் குறித்து செய்த தம் வாக்குத்தத்தங்களை நிறைவேற்றுவார்; உங்கள் வாழ்வில் ஆசீர்வாதங்களை அருளி அவற்றை பெருகப்பண்ணுவார். அவரது நன்மைக்கு நீங்கள் சாட்சியாக வாழ்வீர்கள்.

"நிச்சயமாக நான் உன்னை ஆசீர்வதிக்கவே ஆசீர்வதித்து, உன்னைப்பெருகவே பெருகப்பண்ணுவேன்" (எபிரெயர் 6:14) என்று வேதத்தில் எழுதப்பட்டுள்ளது. நீங்கள் ஆவலுடன் காத்திருக்கும் குழந்தையை தேவன் அருளிச்செய்வார் என்றும், உங்கள் குடும்பத்திற்கு ஆசீர்வாதங்களை தருவார் என்றும் நம்புங்கள். எல்லாவற்றுக்கும் மேலாக, தேவன் உங்கள் முயற்சிகளை ஆசீர்வதித்து, பாக்கியங்களை பெருகப்பண்ணுவார். நாம் ஜெபித்து, இந்த ஆசீர்வாதத்தை அவரிடமிருந்து பெற்றுக்கொள்வோமா?

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை ஆசீர்வதித்து பெருகப்பண்ண விரும்புகிறீர் என்பதை உறுதிப்படுத்தியதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் வாழ்வில் உம்முடைய நன்மை விளங்குவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நீரே சகல ஆசீர்வாதங்களின் உறைவிடமாக இருக்கிறீர். இப்போதும், நீர் ஜெபத்திற்கு பதில் தருகிற தேவனாயிருக்கிறீர் என்று விசுவாசித்து உம்மண்டை வருகிறேன். சூழ்நிலைகள் எனக்கு எதிராக காணப்பட்டாலும், என் வாழ்வில் பெரிய அற்புதங்களை செய்ய உம்மால் கூடும் என்று நம்புகிறேன். நான் தரிசித்து நடவாமல் விசுவாசித்து நடந்து வாழ்வில் ஒவ்வொரு தருணத்திலும் உம்முடைய மகிமையை அனுபவிக்க உதவி செய்யவேண்டுமென்று ஜெபிக்கிறேன். நீர் என் வாழ்வில் ஒரு நற்கிரியையை தொடங்கியிருக்கிறீர் என்றும், நீர் வாக்குப்பண்ணுகிறபடி என்னை ஆசீர்வதித்து பெருகப்பண்ண உண்மையுள்ளவராயிருக்கிறீர் என்றும் விசுவாசித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.