அன்பானவர்களே, உங்களை பிழைத்திருக்கப்பண்ணவும், எல்லாவற்றிலும் சிறந்திருக்கப்பண்ணவும் தேவன் விரும்புகிறார். "அக்கிரமங்களில் மரித்தவர்களாயிருந்த நம்மைக் கிறிஸ்துவுடனேகூட உயிர்ப்பித்தார்; கிருபையினாலே இரட்சிக்கப்பட்டீர்கள்" (எபேசியர் 2:5) என்று வேதம் கூறுகிறது. இயேசு, "நானே உயிர்த்தெழுதலும் ஜீவனுமாயிருக்கிறேன், என்னை விசுவாசிக்கிறவன் மரித்தாலும் பிழைப்பான்," என்று கூறியிருக்கிறார். நீங்கள் கிறிஸ்துவுக்குள்ளிருக்கும்போது, அக்கிரமங்களுக்கும் பாவங்களுக்கும் மரிப்பீர்கள்; உயிர்த்தெழுதலை அனுபவிப்பீர்கள். தேவனுடைய இந்த வல்லமை உங்கள்மேல் வருகிறது. நீங்கள் பாவங்களை அறிக்கையிடும்போது, அதற்கு மரித்து, தேவனிடம் திரும்பி, எல்லா பெலவீனங்களையும் அவரிடம் ஒப்படைக்கிறீர்கள். பாவங்களை மன்னிக்க அதிகாரம் கொண்ட இயேசுவுடன் இணைகிறீர்கள். அவருக்கு மாத்திரமே அந்த அதிகாரம் உண்டு. அவர் தம்மைத்தாமே சிலுவையில் பலியாக ஒப்புக்கொடுத்தார்; உங்கள் பாவங்களையும் என் பாவங்களையும் மன்னிக்கும்படியாக தம்முடைய இரத்தத்தை சிந்தினார். அவரது இரத்தத்தினால் நாம் பாவம் நீங்க கழுவப்பட்டோம். அவர் உங்களை கழுவி மறுரூபப்படுத்துவார். நீங்கள் அவரிடம் சரணடையும்போது, அக்கிரமங்களுக்கு மரிப்பீர்கள்; இயேசுவுக்குள் ஜீவிப்பீர்கள். உங்கள் வாழ்வு முற்றிலுமாக உயிர்ப்பிக்கப்படும்.
பெங்களூருவை சேர்ந்த கருணாகரன் என்ற சகோதரர் தன்னுடைய சாட்சியை இவ்விதமாய் பகிர்ந்துகொண்டுள்ளார்: அவரது மனைவி பெயர் செல்வி. சகோ. கருணாகரன் கட்டடங்களுக்கு வண்ணம் பூசும் ஒப்பந்தவேலையை செய்து வருகிறார். அவர்களுக்கு மூன்று பிள்ளைகள். அவர் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருந்திருக்கிறார். குடும்பத்தை பராமரித்து, பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பு அவரது மனைவிக்கு பெரிய பாரமாக இருந்துள்ளது. ஒருநாள் அவர்கள் இயேசு அழைக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சியை பார்த்திருக்கிறார்கள். அந்நிகழ்ச்சியில் நான் மதுப்பழக்கத்திற்கு அடிமையாக இருப்பவர்களுக்காக ஜெபித்திருக்கிறேன். அப்போது சகோ. கருணாகரன் தன்னுடைய அறைக்குள் சென்றிருக்கிறார். அவரது மனைவி, தன் கணவரை அப்பழக்கத்திலிருந்து விடுவிக்குமாறு தேவனை நோக்கி அழுது முறையிட்டிருக்கிறார்கள். அப்போது சகோ. கருணாகரன் யாரோ அறைக்குள் நுழைந்து தன்னை தொடுவதை உணர்ந்திருக்கிறார். அவர் புது மனிதராய், மதுவின்மேல் நாட்டமில்லாதவராக எழுந்திருக்கிறார். அடிமைத்தனமெல்லாம் மறைந்துபோனது. அவர் நன்றாக வேலை செய்ய தொடங்கியிருக்கிறார். தங்கள் பிள்ளைகளை இளம் பங்காளர் திட்டத்தில் இணைத்ததுடன், குடும்பத்தை குடும்ப ஆசீர்வாத திட்டத்தில் சேர்த்திருக்கிறார்கள். தேவன் அவர்களை ஆசீர்வதித்து உயர்த்தியிருக்கிறார்; சொந்தமாக வீட்டையும் கொடுத்திருக்கிறார். எவ்வளவு சந்தோஷம்! நீங்கள் கிறிஸ்துவுக்குள் இருக்கும்போது, புது ஜீவன் பெற்றிடுவீர்கள். உங்கள் வாழ்க்கையை இயேசுவுக்கு அர்ப்பணித்திடுங்கள்; மெய்யான ஜீவனை அனுபவிப்பீர்கள்.
கிறிஸ்துவை ஏற்றுக்கொள்ளும்போது உங்கள் வாழ்வு முற்றிலுமாக மறுரூபமாக்கப்படும்; உயிர்ப்பிக்கப்படும். சகோ. கருணாகரனின் வாழ்க்கை புதுப்பிக்கப்பட்டு அவரது குடும்பம் ஆசீர்வதிக்கப்பட்டதுபோல, நீங்களும் பாவத்திலிருந்து விடுதலையைப் பெற்றுக்கொள்ளலாம்; உங்கள் ஆவி புதுப்பிக்கப்படும். இயேசுவிடம் சரணடையுங்கள். அவரது வல்லமை உங்களை சுத்திகரித்து, உயர்த்தும். அவரது கிருபையினால் நீங்கள் மெய்யாய் உயிர்ப்பிக்கப்படுவீர்கள்.

ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, எல்லா பாவமும், பாவத்திற்கான இச்சையும் இயேசுவின் நாமத்தில் அகன்று போகட்டும். எல்லா அடிமைத்தனமும் என் இரத்தத்தையும் ஆவியையும் விட்டு விலகட்டும். ஆண்டவரே, என்னை விடுவித்தருளும். நான் போதைமருந்தை விட்டுவிடும்போது பின்விளைவுகள் எதுவும் இல்லாமல் காத்துக்கொள்ளும். உம்முடைய வல்மையினால் என்னை பெலப்படுத்தும். என்னை உயிர்ப்பித்தருளும்; வர்த்திக்கப்பண்ணும். என் படிப்பை ஆசீர்வதியும்; வேலையில், தொழிலில் என்னை வர்த்திக்கப்பண்ணும். அதிகமாய் என்னை கனப்படுத்தும். எனக்கு நற்சுகத்தையும் சமாதானத்தையும் தந்தருளுவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.