அன்பானவர்களே, இன்றைக்கு, "நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக" (கொலோசெயர் 2:7) என்ற வசனத்தை தியானிப்போம்.

கிறிஸ்துவுக்குள் வேர்கொண்டு, இயேசுவுக்குள் கட்டப்படும் வாழ்க்கை எவ்வளவு பாக்கியமானது! அவரை மறைவிடமாகக் கொள்வது மெய்யாகவே ஆசீர்வாதமாயிருக்கிறது.

நாம் கிறிஸ்துவுக்குள் எப்படி வேர்கொள்ள முடியும்? இதற்கு, "என்னிடத்தில் வந்து, என் வார்த்தைகளைக் கேட்டு, அவைகளின்படி செய்கிறவன் " (லூக்கா 6:47) என்று இயேசு பதில் கூறுகிறார். அப்படிப்பட்டவர்கள் தங்கள் வீட்டினை கற்பாறையின்மேல் கட்டியவர்களுக்கு ஒப்பாவார்கள் என்று கூறுகிறார். கிறிஸ்துவின் வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றின்படி நடப்பதால் மாத்திரமே நாம் அவருக்குள் ஆழமாக வேர்கொள்ள முடியும். இப்படிச் செய்யும்போது, அவர் நம்மை உறுதிப்படுத்துகிறார் (லூக்கா 6:48). நாம், கற்பாறையின்மேல் கட்டப்பட்ட வீட்டைப் போன்று, வாழ்வின் புயல்களால் அசைக்க முடியாதவர்களாக விளங்குவோம்.

நாம் கிறிஸ்துவுக்குள் வேர்கொண்டிருந்தால், "நீதியின் விருட்சங்களென்னப்படுவார்கள்" என்று வேதம் கூறுகிறது (ஏசாயா 61:3). இந்த விருட்சங்கள் கிறிஸ்துவுக்குள் ஆழமாக வேரூன்றி, அவரிடமிருந்து எப்போதும் போஷாக்கை பெற்றுக்கொள்கின்றன. இந்த மரங்கள், தொடர்ந்து கனி கொடுத்து, ஆவியின் கனியை அளிக்கின்றன (கலாத்தியர் 5:22,23). நாம் கிறிஸ்துவுக்குள் ஸ்திரமாக வளர்ந்து இந்த பெலமான மரங்களைப் போலாகும்போது, தேவையோடு இருக்கிறவர்களுக்கு அடைக்கலமாகவும் இளைப்பாறுதல் அளிக்கிறவர்களாகவும் விளங்குவோம்.

முதலாவது, நாம் கிறிஸ்துவுக்குள் வேர்கொண்டிருக்கிறோம். இரண்டாவது, நாம் கிறிஸ்துவுக்குள் கட்டப்பட்டிருக்கிறோம் என்று வேதம் கூறுகிறது. "அப்போஸ்தலர் தீர்க்கதரிசிகள் என்பவர்களுடைய அஸ்திபாரத்தின்மேல் கட்டப்பட்டவர்களுமாயிருக்கிறீர்கள்; அதற்கு இயேசுகிறிஸ்து தாமே மூலைக்கல்லாயிருக்கிறார்" (எபேசியர் 2:20) என்று வாசிக்கிறோம். நாம் அவருக்குள் ஆழமாக வேர்கொண்டிருக்கிறோம்; தொடர்ந்து அவருக்குள் கட்டப்பட்டு வருகிறோம். "நீங்கள் போதிக்கப்பட்டபடியே, விசுவாசத்தில் உறுதிப்பட்டு, ஸ்தோத்திரத்தோடே அதிலே பெருகுவீர்களாக" (கொலோசெயர் 2:7) என்று வேதம் கூறுகிறபடி, இதற்காக நாம் ஸ்தோத்திரத்தில் பெருகவேண்டும். தேவன், கிறிஸ்துவுக்குள் நமக்கு பெரிய விசுவாசத்தை அளிக்கிறார். நாம் உலகில் ஒரு காலும், கிறிஸ்துவில் ஒரு காலும் வைக்க முடியாது. நாம் அவருக்குள் வேர்கொண்டு, அவருக்குள் மாத்திரமே கட்டப்படவேண்டும். இப்போதிலிருந்து கிறிஸ்துவுக்குள் வேரூன்றி கட்டப்பட உங்களுக்கு அவர் உதவுவாராக. அவரே உங்களை பெலப்படுத்துவாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்மில் ஆழமாக வேர்கொள்ளும்படியாக இன்று உம்மிடம் வருகிறேன். என் வாழ்க்கை உம்முடைய சத்தியமாகிய உறுதியான பாறையின்மேல் கட்டப்படும்படி, உம்முடைய வார்த்தைகளுக்குச் செவிகொடுத்து, அவற்றின்படி நடப்பதற்கு எனக்கு உதவி செய்யும். வாழ்வின் புயல்களால் நான் அசைக்கப்படாதபடி என்னை பெலப்படுத்தும். உம்முடைய ஆவியின் கனியை நான் கொடுக்கும்படி உம்முடைய பிரசன்னம் எப்போதும் என்னை சூழ்ந்திருக்கட்டும். நான் உமக்குள் அதிகமாய் வளரவும், தேவையில் உள்ள மக்கள், என் வாழ்வில் அடைக்கலம் கண்டு, இளைப்பாறவும் உதவி செய்யும். என்னுடைய மூலைக்கல்லாக நீர் விளங்குவதற்காகவும், விசுவாசத்தில் என்னை கட்டியெழுப்புவதற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் உம்மோடு அனுதினமும் நடப்பதால் என் இருதயம் நன்றியறிதலுள்ளதாக இருக்கட்டும். உலகின் வழிகளில் நான் செல்லாதவண்ணம், உமக்குள் வேர்கொண்டிருக்கும்படி செய்யும். உம் பெலன் எப்போதும் என் மூலமாக பாய்ந்துசெல்லவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.