அன்பானவர்களே, "விசுவாசித்தவளே பாக்கியவதி, கர்த்தராலே அவளுக்குச் சொல்லப்பட்டவைகள் நிறைவேறும்" (லூக்கா 1:45) என்று வேதம் கூறுகிறது. தேவன் தம் ஆசீர்வாதங்களை உங்கள்மேல் உரைக்கிறார் என்பதை உங்களுக்கு நினைவுப்படுத்த விரும்புகிறேன். அவர் தமது திட்டங்களை, நோக்கத்தை, அன்பை உங்கள் வாழ்வினுள் உரைக்கிறார். தம்முடைய வசனத்தின் மூலமாக, தீர்க்கதரிசனங்கள், தரிசனங்கள் மூலமாக எப்போதும் தேவன் உங்கள் இருதயத்திற்குள் பேசுகிறார். ஆனால், உங்கள் விசுவாசமே தேவனுடைய வாக்குத்தத்தங்களை செயல்பட வைக்கிறது. தேவன் உரைத்தவை நிறைவேறும் என்று நீங்கள் விசுவாசிக்கும்போது, நிச்சயமாகவே  ஆசீர்வதிக்கப்படுவீர்கள்.

நீங்கள் அடையாளங்களை உடனடியாக காணாமல் இருக்கலாம்; ஆனால், தேவன் உரைத்தவை,  நடக்கும் என்பதை மறந்துபோகாதிருங்கள். தேவன் உங்கள் வாழ்க்கையில் உரைத்தவை எல்லாம் நிறைவேறும் என்று இயேசுவின் நாமத்தில் அறிவிக்கிறேன். தேவன், இல்லாதவற்றை இருக்கிறவையாக அழைக்கிறார்; மனுஷரால் கூடாதவை தேவனால் கூடும். "நீங்கள் விசுவாசித்தால், தேவனுடைய மகிமையை காண்பீர்கள்". சின்னவன் ஆயிரமும், சிறியவன் பலத்த ஜாதியுமானவான் என்று அவர் வாக்குப்பண்ணுகிறார். தேவன், "நான் உன்னில் அன்புகூருவேன்; நான் உன்னை ஆசீர்வதிப்பேன்; உன்னை பெருகப்பண்ணுவேன்; வர்த்திக்கப்பண்ணுவேன்," என்று கூறுகிறார். இப்போதே அவரது ஆசீர்வாதம் உங்கள்மேல் வருகிறது; இயேசுவின் நாமத்தில் ஒரு பெருக்கம், இரட்டிப்பான ஆசீர்வாதம் வருகிறது.

தேவன் உண்மையுள்ளவர் என்பதை விளக்கும் ஓர் அருமையான சாட்சியை பகிர்ந்துகொள்கிறேன். நாகர்கோவிலை சேர்ந்த ஜூலியட் என்ற சகோதரிக்கு திருமணமாகி எட்டு ஆண்டுகள் கடந்தும் குழந்தையில்லை. அதிக அவமானத்தை சந்தித்தார்கள்; குழந்தையில்லாததால் அநேகர் அவர்களை புறக்கணித்தார்கள். குழந்தை பாக்கியமில்லாததால் இல்லற வாழ்வில் பிரச்னைகள் எழும்பின. பல மருத்துவமனைகளுக்குச் சென்றும், அநேக பரிசோதனைகளை செய்தும், எல்லாம் இயல்பாகவே இருக்கிறது என்று சோதனை அறிக்கைகள் வந்தும், அவர்களுக்கு யாராலும் உதவி செய்ய இயலவில்லை. அவர்கள் உள்ளங்கள் உடைந்துபோயின; நம்பிக்கை மங்க தொடங்கியது.

அப்போது நாங்கள் திருநெல்வேலியில் பங்காளர் கூட்டம் ஒன்றை நடத்தினோம். நான் பங்காளர்கள் ஒவ்வொருவருக்காகவும் தனித்தனியாக ஜெபித்தபோது, ஜூலியட்டுக்கும் ஜெபித்தேன். அப்போது, "தேவன் உங்களுக்கு அடுத்த ஆண்டு ஒரு குழந்தையை தருவார்," என்று கூறினேன். அதிசயவிதமாக அவர்கள், சீக்கிரத்திலே கருவுற்றார்கள்; அடுத்த ஆண்டு அவர்களுக்கு அழகிய பெண் குழந்தை பிறந்தது. தன்னுடைய மகளை அவர்கள் இளம் பங்காளர் திட்டத்தில் சேர்த்தார்கள். அவள் இப்போது வளர்ந்து விளையாட்டுப் போட்டிகளில் பரிசுகளை வெல்கிறாள்; எப்போதும் முதலிடம் பிடித்து குடும்பத்தினரை மகிழ்ச்சியாக்குகிறாள். இப்போது அவர்கள் ஆசீர்வதிக்கப்பட்டிருக்கிறார்கள்; தேவனுடைய சந்தோஷத்தினால் நிறைந்து, அவருடைய உண்மைக்கு சாட்சிகளாக வாழ்கின்றனர்.

தேவன் உங்களைக் குறித்து உரைத்தவற்றை நிறைவேற்றுவார் என்று விசுவாசிக்கும் நீங்கள் பாக்கியவானாயிருக்கிறீர்கள். உங்கள் பெருக்கத்தின், ஆசீர்வாதத்தின், நிறைவேறுதலின் காலம் சமீபித்திருக்கிறது; ஆகவே, தைரியமாயிருங்கள். விசுவாசமாயிருங்கள்; தேவனுடைய வாக்குத்தத்தங்கள் எப்போதும் உண்மையாயிருக்கின்றன.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என் வாழ்க்கையைக் குறித்து நீர் உரைத்திருக்கிற அருமையான வாக்குத்தத்தங்களுக்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் இருக்கிற சூழ்நிலையை தாண்டி உம்மேல் நம்பிக்கை வைக்கவேண்டும் என்று நீர் விரும்புகிறீர். நீர் வாக்குத்தத்தத்தை காக்கிற தேவனாயிருக்கிறீர்; நீர் சத்தியமும் உண்மையுமானவர்; உம்மில் வஞ்சனை இல்லை என்று உம்முடைய வேதம் கூறுகிறது. உம்முடைய வாக்குத்தத்தங்களெல்லாம் கிறிஸ்துவுக்குள் 'ஆம்' என்றும், 'ஆமென்' என்றும் இருக்கிறது. உடனடியாக எல்லாம் மாறுவதற்கான அடையாளத்தை என்னால் காண இயலாவிட்டாலும், நீர் சகலத்தையும் அதினதின் காலத்தில் நேர்த்தியாகச் செய்கிற தேவனாயிருக்கிறபடியினால் உம்மில் நம்பிக்கை வைக்கிறேன். விசுவாசத்தில், குறிப்பாக, இக்கட்டின் பாதையில் உம்மை பற்றிக்கொள்வதற்கு எனக்கு உதவி செய்யும். விசுவாச பாதையில், உம்முடைய ஏற்ற நேரத்தின்மேல் நம்பிக்கை வைத்து நடப்பதால், உம்முடைய அன்பின் கரங்களிலிருந்து நான் நூறுமடங்கு ஆசீர்வாதத்தை பெற்றுக்கொள்ளவேண்டுமென்று ஜெபிக்கிறேன். நீர் எப்போதும் எனக்கு நன்மையே செய்வீர் என்பதை அறிந்து, உம்முடைய வாக்குத்தத்தங்களை முழுமையாக சார்ந்துகொண்டு, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.