அன்பானவர்களே, நீங்கள் கிறிஸ்துவின் ஸ்தானாபதியாயிருக்கிறீர்கள். "நாங்கள் கிறிஸ்துவுக்காக ஸ்தானாபதிகளாயிருந்து... வேண்டிக்கொள்ளுகிறோம்" (2 கொரிந்தியர் 5:20) என்று வேதம் கூறுகிறது. நீங்கள் அநாதைகள் அல்ல; புறக்கணிக்கப்பட்டவர்கள் அல்ல. ஒருவேளை நீங்கள் யாரிடமாவது வேலை செய்து, உண்மையாய் உரித்தான அந்த நிறுவனத்தை சொந்தமாக்கிக்கொள்வது குறித்த கனவில் இருந்திருக்கலாம். ஆனால், தள்ளிவிடப்பட்டிருக்கலாம். ஒருவேளை உங்கள் சொந்தக் குடும்பத்திலும் புறக்கணிக்கப்பட்டதுபோல் உணர்ந்து, தவித்துக்கொண்டிருக்கலாம். நண்பர்களும் விலகிப்போயிருக்கலாம். ஆனாலும், இயேசு உங்களை தமக்குச் சொந்தமானவன்(ள்) என்று அழைக்கிறார். அவர், "என் பிள்ளையே, என்னுடைய ஸ்தானாபதியாயிருக்கும்படி உன்னை அழைத்திருக்கிறேன்," என்று அவர் கூறுகிறார். "எனக்கு பெலனில்லை; ஞானமில்லை; பணமில்லை; அந்தஸ்து இல்லை; பரிசுத்தமுமில்லை" என்று நீங்கள் கூறலாம். ஆனால் இயேசு, "நீ உன் வாழ்க்கையை என் கரங்களில் தந்திருக்கிறார்; உன்னை எனக்குச் சொந்தமாக்கிக்கொண்டிருக்கிறேன். நீ என்னுடையவன்(ள்)," என்று இன்று கூறுகிறார்.

அன்பானவர்களே, பயப்படாதிருங்கள். இயேசு உங்களோடு நித்திய உடன்படிக்கை செய்திருக்கிறார். "மலைகள் விலகினாலும், பர்வதங்கள் நிலைபெயர்ந்தாலும், என் கிருபை உன்னைவிட்டு விலகாமலும், என் சமாதானத்தின் உடன்படிக்கை நிலைபெயராமலும் இருக்கும்" (ஏசாயா 54:10) என்று வேதம் கூறுகிறது. இயேசு, "அன்பின் கயிறுகளினால் நீ என்னுடன் கட்டப்பட்டிருக்கிறாய்," என்று கூறுகிறார். மாறாத தேவ அன்பைக் குறித்து வேதத்தில் வாசிக்கிறோம்.  நீங்கள் இயேசுவுக்குச் சொந்தமானவர்; அவருடைய ஸ்தானாபதி. உங்கள் மூலமாகவே இயேசு இந்த உலகிற்கு அறிவிக்கப்படுகிறார். ஆகவே, களிகூருங்கள். உங்கள் வாழ்க்கையை அவருக்கு அர்ப்பணித்திடுங்கள். தினமும், "ஆண்டவரே, இன்றைக்கு யாரிடமாவது உம்மைக் குறித்து பகிர்ந்துகொள்வதற்கான வாசலை திறந்தருளும்," என்று ஜெபித்திடுங்கள்.

ஒருவரிடம் நேரடியாக நீங்கள் இயேசுவைக் குறித்து பகிர்ந்துகொள்ளலாம் அல்லது பெரிய கூட்டத்தில் அவரது இரட்சிப்பின் வல்லமையை, ஆசீர்வாதங்களைக் குறித்து சாட்சி அளிக்கலாம். இரண்டாவதாக, எல்லோருக்கும் முன்பாகவும் சாட்சியாக வாழ்ந்து, உங்கள் பரிசுத்த வாழ்க்கையின் மூலம் நீங்கள் அவரை வெளிப்படுத்தலாம். மூன்றாவதாக, உங்கள் மூலமாக அற்புதங்களை நடப்பித்து, உங்களை எல்லாவிதங்களிலும் செழிக்கப்பண்ணி நீங்கள் தமது ஸ்தானாபதி என்று தேவன்தாமே உறுதிப்படுத்தலாம். உங்களுக்கு இப்படியே நடக்கும்.

விஜயா என்ற அன்பு தாயார் தன்னுடைய சாட்சியை பகிர்ந்துகொண்டிருக்கிறார்கள். அவர்கள் இயேசுவைக் குறித்து அறியாதிருந்தார்கள். ஆனால், தேவ கிருபை, அவர்களை அவரை நோக்கி நடத்தியது. அவர்களுடைய பெற்றோரோ, குடும்பத்தினரோ இயேசுவை அறியவில்லை. ஆனால், அவர்கள் பட்டணத்தில் இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரம் ஸ்தாபிக்கப்பட்டபோது, மக்களை விசாரித்து, அவர்களுக்காக ஜெபிக்கும்படி தன்னார்வ ஜெப வீரராக முன்வந்தார்கள். அவர்கள் குடும்பம் வசதியுடையதாக இருப்பினும், இயேசு அழைக்கிறார் ஜெப கோபுரத்தில் ஸ்தானாபதியாக ஊழியம் செய்வதற்கு தன் நேரத்தை அர்ப்பணித்தார்கள். அவர்களுடைய வாழ்க்கையில் காணப்பட்ட உண்மையை கண்ட அவர்களுடைய பிள்ளைகளும் ஆண்டவரை ஏற்றுக்கொண்டனர். இப்போது அவர்கள் பிள்ளைகள் ஆசீர்வதிக்கப்பட்டவர்களாக, அமெரிக்காவிலும் பிற பகுதிகளிலும் வசித்து வருகிறார்கள். அவர்கள் இப்போதும் இயேசு அழைக்கிறார் ஸ்தானாபதி ஊழியத்தின் மூலம் இயேசுவுக்கு ஊழியம் செய்து வருகிறார்கள். 2022ம் ஆண்டு, இயேசு அழைக்கிறார் ஊழியத்தின் சிறந்த ஸ்தானாபதிக்கான கனத்தை பெற்றார்கள். ஆனால், பரலோகம் அவர்களை இன்னும் அதிகமாய் கனப்படுத்தும் என்று விசுவாசிக்கிறேன். தமக்கு ஸ்தானாபதியாக ஊழியம் செய்வதற்கு இதே கிருபையை தேவன் உங்களுக்கும் தந்து ஆசீர்வதிப்பாராக.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, என்னை உம்முடைய ஸ்தானாபதி என்று கூறுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். நான் தனியே இல்லை; எப்போதும் உமக்குச் சொந்தமானவனா(ளா)க இருக்கிறேன். நான் பெலவீனன் / பெலவீனமானவள், தகுதியில்லாதவன்(ள்) என்று நினைக்கும்போதெல்லாம், நீரே என்னை தெரிந்துகொண்டிருக்கிறீர் என்பதை நினைவுப்படுத்தும். உம்முடைய நித்திய உடன்படிக்கையின் வல்லமையில் என்னை நடக்கப்பண்ணும். உலகத்துடன் உம்மை பகிர்ந்துகொள்ளும்படியான தைரியத்தாலும் சந்தோஷத்தாலும் என் இருதயத்தை நிரப்பும். உம்முடைய அன்புக்கும் கிருபைக்கும் சாட்சியாக நான் வாழும்படி செய்யும். நான் உம்மை மகிமைப்படுத்தும்படி அற்புதங்கள் என் வழியாக கடந்து செல்லட்டும்; எல்லாவிதங்களிலும் என்னை செழிப்பாக்கும். மக்களை சந்திக்கவும், அவர்களை உம்மிடம் கிட்டிச் சேர்க்கவும் வாசல்களை திறந்தருளும். உம்முடைய நோக்கத்திற்கு என்னை அர்ப்பணிக்கிறேன். உமக்கு மகிமையாக என்னை பயன்படுத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.