அன்பானவர்களே, "இஸ்ரவேலரெல்லாரும் அறியும்படிக்கு, இன்று அவர்கள் கண்களுக்குமுன்பாக உன்னை மேன்மைப்படுத்துவேன்" (யோசுவா 3:7) என்று தேவன் கூறுகிறார். இது, எவ்வளவு அருமையான வாக்குத்தத்தம்! உங்களை மேன்மைப்படுத்தவே தேவன் விரும்புகிறார். தமக்கு முன்பாக தாழ்மைப்படுகிறவர்களை ஆண்டவர் உயர்த்துகிறார். ஆகவே, இயேசுவை நம்பி, "ஆண்டவர் என்னை உயர்த்துவார். நான் அவரை நம்புவேன்," என்று அறிக்கையிடுங்கள். ஒருவேளை நீங்கள் அதிக வெட்கத்தை அனுபவித்திருக்கலாம். பெரிய இழப்பை சந்தித்திருக்கலாம். உங்களை அழுத்தப் பார்க்கும், பெலவீனங்கள், தவறான உறவுகள், கெட்டப் பழக்கங்களோடு நீங்கள் போராடிக்கொண்டிருக்கலாம். கடந்த காலம் எப்படியிருந்தாலும், இன்றைய தினம் புதிய நாளாகும். ஆண்டவரிடம் திரும்பி, "ஆண்டவரே, என் வாழ்க்கையை உம் கரங்களில் ஒப்படைக்கிறேன். நான் உம்மை முற்றிலுமாய் நம்புகிறேன். உலக காரியங்களை நான் விட்டுவிடுகிறேன். உலக பிரகாரமான நட்பு, உறவு, தவறான வழியில் பணம் சம்பாதித்தல், நிலையில்லாத இன்பங்கள் அனைத்தையும் விட்டுவிடுகிறேன். ஆண்டவராகிய இயேசுவே, என் வாழ்க்கையை உமக்கு அர்ப்பணிக்கிறேன்," என்று கூறுங்கள். தேவன், "நான் உன்னை மேன்மைப்படுத்துவேன்," என்று கூறுகிறார்.

நர்மதா என்ற இளம்பெண்ணின் சாட்சியை உங்களோடு பகிர்ந்துகொள்கிறேன். நர்மதா 10ம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தபோது டைபாய்டு காய்ச்சல் வந்தது. அதற்காக அதிக மருந்து சாப்பிடவேண்டியதாயிற்று. இதன் காரணமாக ஏறத்தாழ ஒன்றரை ஆண்டுகள் கடுமையான தலைவலியும், அசதியும் நர்மதாவுக்கு ஏற்பட்டன. அதனால் படிக்க இயலவில்லை. 12ம் வகுப்பு தேர்வு நெருங்கியபோது, படித்தவை யாவும் மறந்துபோனதுபோல் இருந்தது. மாதிரி தேர்வுகளை எழுதியபோது, அசதியினால் உறங்க நேரிட்டது. அந்த ஆண்டு பொதுத் தேர்வினை எழுதாமல் அடுத்த ஆண்டு முயற்சி செய்யும்படி மருத்துவர்கள் ஆலோசனை கூறினார்கள். ஆனால், நர்மதா இயேசு அழைக்கிறார் மாணவர் பிரார்த்தனையில் கலந்துகொண்டார்கள். அங்கு நான் இயேசு அருளிய தீர்க்கதரிசன செய்தியை, "ஆண்டவர் பெலவீனத்திலிருந்து உங்களை விடுவிப்பார்; அவர் உங்களை உயர்த்துவார்" என்று பகிர்ந்துகொண்டேன். அந்த வார்த்தைகள் நர்மதாவை தொட்டன; புது நம்பிக்கையை அளித்தன. நர்மதா, ஜெப கோபுரத்திற்கும் சென்று ஜெபித்துள்ளார்கள்; அவரது குடும்பத்தினர் காணிக்கை செலுத்தி இயேசு அழைக்கிறார் தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றை தாங்கியுள்ளார்கள்.

தேவன் அற்புதம் செய்தார். தேர்வுகளை எழுதும்படி நர்மதாவை பெலப்படுத்தினார். தேர்வு முடிவுகள் வந்தபோது, வணிகவியலில் 200/200, வணிக கணிதத்தில் 200/200 உள்பட மொத்தத்தில் 1172/1200 மதிப்பெண்களுக்கு நர்மதாவுக்கு கிடைத்திருந்தன. நர்மதாவின் விசுவாசத்தையும் முயற்சியையும் தேவன் கனப்படுத்தினார். அடுத்த கூட்டத்தில் நர்மதா, "நான் ஆடிட்டர் (CA) படிக்க விருப்பப்படுகிறேன்," என்று கூறினார்கள். நான் அவர்கள் தலைமீது கை வைத்து ஜெபித்தேன். தேவனுடைய கிருபையால் ஒரு பாடத்தில்கூட தோல்வியடையாமல் நர்மதா Chartered Accountant தேர்வில் வெற்றி பெற்றார்கள். இன்று, தேவன் அவர்களை மகா உயரத்திற்கு மேன்மைப்படுத்தியுள்ளார்.  அன்பானவர்களே, நர்மதாவுக்கு செய்ததுபோல, தேவன் உங்களுக்கும் செய்வார். உங்கள் முழு இருதயத்தோடும் இயேசுவை பற்றிக்கொள்ளுங்கள். அவர் நிச்சயமாய் உங்களை மேன்மைப்படுத்துவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, தாழ்மையுள்ள இருதயத்தோடு உம்மண்டை வருகிறேன். என் வாழ்க்கையை உம் அன்பு கரங்களில் ஒப்படைக்கிறேன். ஆண்டவரே, நாம் உம்மை முற்றிலுமாய் நம்புகிறேன். உம்முடைய சமுகத்தை விட்டு என்னை விலகச் செய்யும் காரியங்கள் அகன்றுபோகட்டும். உலக பிரகாரமான நட்பு, உறவு மற்றும் நிலையற்ற இன்பங்களிலிருந்து என்னை விடுவித்துக் கொள்வதற்கு உதவி செய்வீராக. உம்முடைய வழிகளில் நடக்கவும், தவறான பழக்கங்களையும் நேர்மையற்ற லாபத்தையும் விட்டுவிடவும் கிருபை செய்யும். நீர் என்னை உயர்த்துவீர் என்பதை அறிந்து, உம்முடைய சமுகத்தில் பொறுமையோடு காத்திருக்க என்னை பெலப்படுத்தும்.  உமக்கு முன்பாக தங்களை தாழ்த்துகிறவர்கள் உயர்த்தப்படுவார்கள் என்ற உம்முடைய வாக்குத்தத்தத்தை விசுவாசிக்கிறேன். வாழ்க்கையை உமக்கு அர்ப்பணிக்கும் என்னை உம்முடைய சமாதானத்தினாலும் அன்பினாலும் நம்பிக்கையினாலும் நிரப்புவீராக. நீர் என்னோடு இருப்பதை அனைவரும் காணும்படி உம்முடைய வெளிச்சம் என் மூலமாக பிரகாசிக்கட்டும். உம்மை நம்புவதற்காகவும், உறுதியாய் உம்மை பற்றிக்கொள்வதற்காகவும் நீர் தந்திருக்கிற புதிய நாளுக்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் வல்லமையுள்ள நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.