அன்பானவர்களே, உங்களை வாழ்த்துகிறதிலும் உங்களோடு சேர்ந்து ஆண்டவரை தேடுகிறதிலும் அதிக மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு நீங்கள் அதிகமாய் சந்தோஷமடைவீர்கள். "நான் மரண இருளின் பள்ளத்தாக்கிலே நடந்தாலும் பொல்லாப்புக்குப் பயப்படேன்; தேவரீர் என்னோடேகூட இருக்கிறீர்; உமது கோலும் உமது தடியும் என்னைத் தேற்றும்" (சங்கீதம் 23:4) என்பதே உங்களுக்கான தேவனுடைய வாக்குத்தத்தமாயிருக்கிறது. கர்த்தருடைய கோலும் தடியும் நம்மை எப்படி தேற்றுகின்றன? தேவன், தம் ஆடுகளை எப்படி மேய்க்கிறார் என்பதை 23ம் சங்கீதம் அழகாக விவரிக்கிறது. மேய்ப்பனின் கோலாலும் தடியாலும் ஆடு எப்படி தேற்றப்பட முடியும்? நாம் சிறுபிள்ளைகளாயிருந்தபோது, இரவில் படுக்கச் செல்லும் வேளையில், வெளியே காவல்காரர் தன் தடியால் தட்டிக்கொண்டு செல்லும் சத்தத்தை கேட்டிருப்போம். பின்னிரவில், காவல்காரர், வீட்டைச் சுற்றி நடக்கும்போது, பெரிய தடியைக் கொண்டு தரையில் தட்டிக்கொண்டே செல்வார். ஏன் அவர் அப்படிச் செய்கிறார்? வெளியே இருந்து நுழைகிறவர்களுக்கு, திருடனுக்கு, தான் விழிப்புடன் இருப்பதை உணர்த்துவதற்காகவே அப்படி செய்கிறார். உள்ளே யாரோ இருக்கிறார்கள் என்று அந்த சத்தம் திருடர்களை எச்சரிக்கும்; அவர்களைப் பின்வாங்கப்பண்ணும். நம்மை ஒருவர் கண்காணித்துக்கொண்டிருக்கிறார் என்பதை அறிவதன் மூலம் வீட்டுக்குள் இருக்கிற நமக்கு சமாதானம் கிடைக்கும்; பாதுகாப்பாய் உணருவோம். 

அவ்வாறே ஆடு, மேய்ப்பன் விழிப்புடன் இருந்து தன்னை பாதுகாக்கிறான் என்பதை அறிந்துகொள்ளும். நாங்கள் மனச்சோர்வுற்றிருக்கும்போது, துக்கம் மேலிடும்போது, குடும்பமாய் ஆண்டவரிடமிருந்து அடையாளங்களை கண்டிருக்கிறோம். சரியாக அதுபோன்ற தருணங்களில் ஆண்டவர், தீர்க்கதரிசனமாக எங்களிடம் பேசும்படி தேவ ஊழியர் ஒருவரை அனுப்புவார். அவர்கள், "நீங்கள் இதன் வழியாக கடந்துசென்றுகொண்டிருக்கிறீர்கள் என்று ஆண்டவர் கூறுகிறார்; அவர் உங்களை இப்படி எழுப்புவார்," என்று சொல்வார்கள். அப்படிப்பட்ட வார்த்தைகள், எங்கள் உள்ளங்களை சந்தோஷத்தினால் நிரப்பும். சிலவேளைகளில், மக்கள் எங்களிடம் வந்து, "உங்கள் ஜெபத்தின் மூலம் இந்த ஆச்சரியமான அற்புதத்தை அனுபவித்தேன்," என்று சாட்சியை பகிர்ந்துகொள்வார்கள். இது எங்களை அதிகமாய் உற்சாகப்படுத்தும். இன்னும் சிலவேளைகளில், அதுபோன்ற இருளான தருணங்களில் ஆண்டவர்தாமே எங்கள் வாழ்வில் சிறு அற்புதத்தைச் செய்வார். அது எங்களை அதிகமாய் ஆறுதல்படுத்தும். இந்த எல்லா அடையாளங்கள் மூலமாகவும் ஆண்டவர் தமது ஆறுதலை எங்களுக்கு அளிப்பார். எங்களை ஆறுதல்படுத்துவதுபோலவே, உங்களுக்கும் அவர் ஆறுதலை தருவார். இஸ்ரவேல் ஜனங்கள் வனாந்தரத்தின் வழியாக சென்றபோது, பகலில் அவர்களை மேகஸ்தம்பமும் இரவில் அக்கினிஸ்தம்பமும் வழிநடத்தின. இந்த அடையாளங்களால், கர்த்தர் தங்களோடு இருக்கிற நிச்சயத்தை அவர்கள் பெற்று, ஆறுதலடைந்தார்கள். அன்பானவர்களே, நீங்கள் இருளின் பள்ளத்தாக்கில் இருக்கும்போது, ஆண்டவர் உங்களுக்குத் துணையாக இருப்பதை காண்பிக்கும்படி ஓர் அடையாளத்தை வெளிப்படுத்துவார். ஆகவே, இன்றைக்கு ஆண்டவரிடமிருந்து இந்த ஆச்சரியமான ஆசீர்வாதத்தையும் ஆறுதலையும் பெற்றுக்கொள்ளுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இருளின் பள்ளத்தாக்கில், உம்முடைய பிரசன்னத்தையும் ஆறுதலையும் தேடி வருகிறேன். எப்போதும் உம்மையே நோக்கிக்கொண்டிருக்கவும், நீர் எப்போதும் என்மேல் கண்ணோக்கமாயிருக்கும் மேய்ப்பராயிருக்கிறீர் என்று விசுவாசிக்கவும் எனக்கு உதவி செய்யும். நீர் என்மேல் கரிசனையாயிருப்பதற்கும், என்னோடு இருப்பதற்கும் ஓர் அடையாளத்தை காண்பித்து, சத்துருவின் ஆபத்தான அஸ்திராயுதங்களிலிருந்து என்னை பாதுகாத்துக்கொள்ளும். ஆண்டவரே, என் இருதயத்துடன் பேசும். கலங்கியிருக்கிற என் ஆவிக்கு உம் சத்தம் தெளிவை, ஆறுதலை, நம்பிக்கையை அளிக்கட்டும். ஆண்டவரே, என் வாழ்வில் ஒரு அற்புதத்தை செய்து, என் பாரங்களை அகற்றும். உம்முடைய ஊழியர்கள் மூலமும், ஆச்சரியமான கிரியைகள் மூலமும் என்னை திடப்படுத்தும் வார்த்தைகளை அனுப்பியருளும். எவ்வளவு ஆழமான பள்ளத்தாக்கில் இருந்தாலும், உம்முடைய ஆறுதல்கள் என்னை சூழ்ந்துகொள்ளும்படி செய்து, நான் ஒருபோதும் தனிமையில் இல்லை என்பதை நினைவுப்படுத்தும். நான் சந்தோஷப்பட்டு, உம்முடைய ஆசீர்வாதங்களை மலையளவாய் அனுபவிக்கும்படி என்னை உயர்த்தியருளவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.