அன்பானவர்களே, இன்றைக்கு, "நாம் இருதிறத்தாரும் ஒரே ஆவியினாலே பிதாவினிடத்தில் சேரும் சிலாக்கியத்தை அவர்மூலமாய்ப் பெற்றிருக்கிறோம்" (எபேசியர் 2:18) என்ற வசனத்தை தியானிப்போம். இந்த வசனத்தை வாசித்தபோது, தினசரி நாம் பார்க்கும் ஒரு காரியம் எனக்கு நினைவுக்கு வந்தது. வேலைக்குப் போகும்போது, அலுவலகத்திற்குள் நுழைவதற்கு நமக்கு ஒரு அனுமதி அட்டை (access card) கொடுக்கப்பட்டிருக்கும். நம்முடைய பணியாளர் எண்ணும் விவரங்களும் அந்த அனுமதி அட்டையுடன் இணைக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு முறை நாம் கதவை திறக்கும்போது, அந்த அட்டையை ஸ்கேன் செய்து உள்ளே செல்ல வேண்டும். நாம் எப்போது அலுவலகத்திற்கு வருகிறோம்; எவ்வளவு நேரம் வேலை செய்கிறோம்; எப்போது செல்கிறோம் என்ற அனைத்து விவரங்களையும் அது பதிவு செய்யும்.
அந்த அனுமதி அட்டையை நாம் தொலைத்துவிட்டால் என்ன நடக்கும்? ஒருநாள், அலுவலகத்திற்கு வந்த பிறகு, அந்த அட்டையை வீட்டில் வைத்துவிட்டதை அறிந்தால், தற்காலிக அனுமதி அட்டை ஒன்றை வாங்க வேண்டும். ஆனால், அந்த தற்காலிக அட்டை உங்கள் பணியாளர் எண்ணுடன் இணைக்கப்பட்டிருக்காது. அது உங்களைப் பற்றிய விவரங்களைக் கொண்டிருக்காது. உண்மையில் அது உங்களுடன் இணைக்கப்படவில்லை.
அவ்விதமே நாம் இயேசு கிறிஸ்துவின் மூலமாக பிதாவை தொடர்கொள்கிறோம். அவருக்குள் நம்மைப் பற்றிய விவரங்கள் அனைத்தும் உள்ளன. நல்லவையோ, கெட்டவையோ நாம் யாருக்கும் தெரியாமல் செய்தவை, தேவனின் நாமத்திற்காக நாம் செய்த தியாகம், ஜெபம் செய்த நேரம், மற்றவர்களுக்கு நாம் எப்படி ஊழியம் செய்தோம், எப்படி சுவிசேஷத்தை அறிவித்தோம் உள்ளிட்ட எல்லா விவரங்களும் பதிவு செய்யப்பட்டிருக்கும். அந்த விவரங்களை இயேசு பிதாவுக்கு முன்பாக சமர்ப்பிக்கிறார். கடைசி நாளில் தேவன் நீங்கள் அவருக்காக செய்த எல்லாவற்றையும் பார்த்து, அதற்கேற்ப உங்களுக்கு பலனளிப்பார். ஆனால், அநேகர் இயேசுவுடனான தொடர்பை இழந்துவிடுகின்றனர். தற்காலிக மாற்றாக, போதை மருந்துகள், மது, நட்பு அல்லது உலகப்பிரகாரமான இன்பங்களை நாடுகின்றனர். ஆனால், அந்த காரியங்கள் ஒருபோதும் அவர்களை உண்மையாக தேவனுடன் இணைத்திடாது. அவை நம் செயல்கள் எவற்றையும் பதிவு செய்திராத தற்காலிக மாற்றாகவே அமையும். பிதாவிடம் செல்வதற்கு மெய்யான ஒரே வழியான இயேசுவுடன் நாம் இணைந்திருக்கும்போது, அவர் நம்மை பரலோகத்திற்கு, மெய்யான பலனுக்கு நேராக வழிநடத்துவார். அவர் நமக்கு நோக்கமும், அர்த்தமும், பரிபூரண ஆசீர்வாதங்களும் நிறைந்த முழுமையான புதுவாழ்வை தருகிறார். இன்றைக்கு, இயேசுவுடன் இணைந்திருக்க தீர்மானம் செய்வீர்களா?
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, உம்முடைய பிரசன்னத்தை வாஞ்சிக்கும் இருதயத்துடன் உம்மிடம் வருகிறேன். இயேசு கிறிஸ்துவின் மூலமாய் உம்மிடம் வருவதற்கு வழி கொடுத்ததற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். நான் தற்காலிகமான மாற்று வழிகளை தேடாமல், எப்போதும் அவருடன் இணைந்திருக்க உதவி செய்யும். கீழ்ப்படிந்திருந்து, முழு இருதயத்துடன் உமக்கு ஊழியம் செய்யும்படி என்னை பெலப்படுத்தும். என்னுடைய ஜெபங்களும், மற்றவர்கள்பால் நான் கொள்ளும் அன்பும் உமக்கு பிரியமாய் அமைவதாக. என் வாழ்க்கை உம்முடைய மகிமையை காண்பிப்பதாக, மற்றவர்களை உம்மிடம் கொண்டு வருவதாக அமையட்டும். என்னை உம்முடைய ஆவியினால் நிரப்பும்; இன்று என்னை உமக்கு அர்ப்பணித்து, நீர் எனக்கென்று ஆயத்தம்பண்ணியிருக்கும் நித்திய பலனை நோக்கி என்னை நடத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.