அன்பானவர்களே, "தேவனாகிய கர்த்தர் சூரியனும் கேடகமுமானவர்; கர்த்தர் கிருபையையும் மகிமையையும் அருளுவார்; உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மையை வழங்காதிரார்" (சங்கீதம் 84:11) என்பதே உங்களுக்கான இன்றைய தேவ வாக்குத்தத்தம். ஆம், அன்பானவர்களே, தேவன், உங்களுக்கு நன்மையை வழங்காமல் இருக்கமாட்டார். ஆகவே, சந்தோஷமாயிருங்கள்.

ஜனங்கள் உங்களுக்கு விரோதமாய் பேசுகிறார்கள் என்று எண்ணுகிறீர்களா? குடும்பத்தில் நம்பிக்கையோ, சமாதானமோ இல்லாததுபோல் உணர்கிறீர்களா? வேலையில் சமாதானமில்லாமல் தவிக்கிறீர்களா? தனிமையில் இருப்பதாக நினைக்கிறீர்களா? அன்பானவர்களே, தேவன் உங்களை தாங்குவார்; உங்களுக்கு நியாயம் செய்வார்.

கர்நாடகாவை சேர்ந்த பிரகாஷ் என்ற சகோதரரின் வாழ்வில் இப்படியே நடந்தது. அவர் முழு நேர ஊழியம் செய்து வந்தார். அவருக்கு ஊழியத்திற்கான அழைப்பு வந்தபோது, அவரைச் சுற்றியிருந்தவர்கள் அநேகர் குறை சொல்ல தொடங்கினர். அவரைப் பற்றி தவறாக பேசினர். அவருடைய மனைவிடமே சில தவறான காரியங்களை கூறினர். அதினால், ஒருவரையொருவர் தவறாக புரிந்துகொள்ள நேரிட்டது; சச்சரவு ஏற்பட்டது. வீட்டில் அவர்களுக்கு சமாதானம் இல்லை. நம்பிக்கை இல்லை; சார்ந்துகொள்ளவும் யாருமில்லை என்று எண்ணி அவர் மனம் சலித்து சோர்ந்துபோனார். இந்நிலையில் 2015ம் ஆண்டு ஹூப்ளியில் நடைபெற்ற பிரார்த்தனை திருவிழாவில் கலந்துகொண்டார். ஜெப வேளையில் என் தந்தை Dr. பால் தினகரன், அவரைப் பெயர் கூறி அழைத்தார். "பிரகாஷ், தேவனுடைய ஒளி உங்கள்மேல் வருகிறது. நீங்கள் ஒருபோதும் யாரைக் குறித்தும் குறை சொன்னதில்லை. தேவன் உங்கள் வீட்டைக் கட்டுவார்; உங்களைக் கனம்பண்ணுவார்," என்று கூறினார். பிரகாஷ் இதைக் கேட்டபோது இருதயத்தில் சமாதானத்தை உணர்ந்தார். அவர் வீட்டுக்குத் திரும்பியபோது, காரியங்கள் மாறுவதை கண்டார். அவரது வாழ்வில் ஏதோ ஒளி பிரகாசித்ததுபோல உணர்ந்தார். அவருடைய மனைவி மனம் திரும்பினார்கள்; இருவரும் மீண்டும் இணைந்தார்கள். வீட்டில் சமாதானம் உண்டானது. அவரை குறை கூறிக்கொண்டிருந்தவர்கள், அதை நிறுத்திவிட்டார்கள். அவர் புதிதான வெளிச்சத்தோடும் நம்பிக்கையோடும் ஊழியத்தை தொடர்ந்தார்.  

ஆம், அன்பானவர்களே, உங்கள் வாழ்விலும் உங்களுக்கு நியாயம் செய்ய யாருமில்லை என்று நீங்கள் உணரலாம்; சமாதானமில்லாத நிலையில் நம்பிக்கையில்லாத நிலையில் காணப்படலாம். எப்படி தொடர்ந்து செல்ல போகிறேனோ என்று நீங்கள் திகைக்கலாம். தேவனுடைய வெளிச்சம் சூரியனைப் போல உங்கள்மேல் பிரகாசிக்கும்; அவர் உங்களை தாங்குவார். நீங்கள் நீதியின் வழியில் நடக்கும்போது, தேவனே உங்களுக்கு சூரியனும் கேடகமுமாயிருப்பார்; அனுதினமும் உங்களை நடத்துவார்; உங்களுக்கு நியாயம் செய்வார். ஆகவே, சந்தோஷமாயிருங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, எனக்கு நீர் சூரியனும் கேடகமுமாயிருப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். எனக்கு கிருபையையும் மகிமையையும் நீர் வழங்குவீர் என்ற வாக்குத்தத்தத்தை நான் நம்புகிறேன். உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு எந்த நன்மையையும் வழங்காமல் இருக்கமாட்டீர் என்று விசுவாசிக்கிறேன். இன்றைக்கும் என்னை குறைசொல்லுகிறவர்கள் அநேகராயிருக்கிறார்கள்; என் வாழ்வில் சமாதான குறைச்சல் ஏற்பட்டுள்ளது. ஆனாலும், நீர் என்னோடிருக்கிறீர் என்பதை அறிந்திருக்கிறேன். என் இருதயத்தை உம்முடைய சமாதானத்தினால் நிறைத்து, தொடர்ந்து செல்வதற்கான பெலனை அருளிச்செய்யும். என் பாதையில் உம்முடைய வெளிச்சம் வீசும்படி செய்து, இந்த இக்கட்டான நேரத்தை நான் கடந்துசெல்வதற்கு வழிநடத்தும். நான் நீதிமானாகவும், விசுவாசத்தில் நிலைத்திருக்கவும் உதவி செய்யும். நீர் என்னை தாங்கி, என் வாழ்வில் நியாயம் செய்வீர் என்று நம்புகிறேன். உம்மேல் விசுவாசம் வைத்து, நீர் அருளும் நம்பிக்கையை பெற்றுக்கொண்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.