அன்பானவர்களே, "கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது" (சங்கீதம் 42:8)என்று வேதம் கூறுகிறது. தாவீதின் நாட்களில் இந்தச் சங்கீதம் கோராகின் புத்திரரால் எழுதப்பட்டது. தாவீது தன் சொந்தக் குமாரனுக்கு ஒளிந்திருக்கும்போது, இவர்கள் தேவாலயத்தில் தொழுதுகொண்டு இந்தப் பாடலை எழுதியதுபோல் தோன்றுகிறது.
தாவீது தன் அரமனையை விட்டு ஓடிப்போனான்; தேவாலயத்தை விட்டு தொலைவில் இருந்தான். தேவ சமுகத்தை அவன் வாஞ்சித்து, உள்ளத்திலிருந்து இந்த வார்த்தைகளை எழுதியுள்ளான். ஆகவேதான் அவன், "ஆழத்தை ஆழம் கூப்பிடுகிறது"(வசனம் 7)என்று எழுதி, மனசஞ்சலத்தோடு தேவனை நோக்கிக் கூப்பிடுகிறான், "இரவும் பகலும் என் கண்ணீரே எனக்கு உணவாயிற்று" (வசனம் 3)என்றும் ஒத்துக்கொண்டுள்ளான்.
ஆனாலும், அந்த மனசஞ்சலத்தின் வேளையிலும் தாவீது, "கர்த்தர் பகற்காலத்திலே தமது கிருபையைக் கட்டளையிடுகிறார்; இராக்காலத்திலே அவரைப் பாடும் பாட்டு என் வாயிலிருக்கிறது" என்று நம்பிக்கையோடு கூறுகிறான். தேவனுடைய மாறாத விசாரிப்பின் மீதான நம்பிக்கையை நேர்த்தியாக வெளிப்படுத்தி, ஏறெடுக்கப்படும் ஜெபமாக இது இருக்கிறது. தேவன், திக்கற்றவர்களின் ஜெபத்தை ஒருபோதும் தள்ளமாட்டார். அவர் தமது அன்பினிமித்தம் தமது பண்டசாலையிலிருந்து பூரணமாக அருளிச்செய்கிறார்; அவருடைய இரக்கங்களுக்கு முடிவில்லை. நாம் தேவனை நோக்கிக் கூப்பிடும்போது, அவர் இரவில் நம்மோடு விழித்திருக்கிறார். சிலவேளைகளில் நாம் காலையில் கண்ணீரோடு எழும்புவோம். அப்போதும் அவரது இரக்கங்கள் நமக்காக காத்திருக்கின்றன. அதுபோன்ற தருணங்களில் தேவன் தமது வசனத்தின் மூலம் நம்மோடு பேசுகிறார். பலவேளைகளில் அவர் ஒரு வசனத்தின் மூலம் என் இருதயத்தோடு நேரடியாக பேசுகிறதை உணர்ந்திருக்கிறேன். சிலவேளைகளில் அவர் வேதாகமத்திலிருந்து குறிப்பிட்ட வசனத்தைக் கூறுவார்; அந்த வசனத்தை இரவெல்லாம் நான் தியானிப்பேன்.
பொழுதுவிடியும்போது, அவரது வசனத்திலுள்ள வாக்குத்தத்தம் பெருத்த ஆறுதலையும் பெலனையும் அளிக்கும். அவரது இரக்கங்கள் காலைதோறும் புதியவையாயிருக்கின்றன. ஆகவே, நாம் ஒரே வசனத்தை மீண்டும் மீண்டும் வாசித்தாலும் அது பழையதாய் தோன்றாது. பெரும்பாலும், நம்முடைய கவலைகள் உச்சத்தை எட்டும் இரவுப்பொழுதில், தேவன் நம்மை தம்முடைய பிரசன்னத்தினால் நிரப்புவார். பரிசுத்தமான அந்த தருணங்களில், நம் உள்ளங்களிலிருந்து ஒரு பாடல் எழும்பும். எங்கள் மகள் ஸ்டெல்லா ரமோலா பாடல் தொகுப்பை வெளியிட ஆயத்தமாகிக்கொண்டிருக்கும்போது, ஆண்டவர் பெரும்பாலும் அவளுக்கு இரவில் பாடல்களை கொடுப்பதாக கூறுவாள்.
நாம் தேவனுடைய சமுகத்தை கிட்டிச் சேரும்போது, அவர் நமக்கு தமது பாடலாகிய புதிய கீதத்தை தருகிறார். அன்பானவர்களே, அவரே நமக்குக் கீதமாகிறார். நாம் அவருக்கு அருகில் இருக்கும்போது, ஜெபமும் துதியும் இயல்பாய் இணைந்து எழும்புகின்றன; அவை நமக்குள் இனிய கீதம் பிறக்கும்படி செய்கின்றன. இன்றும், ஆண்டவர் தமது கிருபையை உங்களுக்குக் கட்டளையிடுவாராக. அவரது கீதம் எப்போதும் உங்களுடன் இருப்பதாக.
ஜெபம்:
அன்புள்ள தகப்பனே, உம்முடைய கிருபை அனுதினமும் என் வாழ்க்கையில் விளங்கும்படி கட்டளையிடுவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இரவுப்பொழுதில் எனக்காக விழித்திருந்து, என்னுடைய கூப்பிடுதலுக்குச் செவிகொடுப்பதற்காக, என்னை தேற்றுவதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். உம்முடைய இரக்கங்கள் காலைதோறும் புதியவையாயிருக்கின்றன; விடாய்த்த என் உள்ளத்தை உம்முடைய வசனம் பெலப்படுத்துகிறது. நான் சோர்ந்துபோகும் தருணங்களில் தயவாய் உம்முடைய பிரசன்னத்தினால் என்னை நிறைத்து, என் ஆவியை உயிர்ப்பியும். உம்முடைய வாக்குத்தத்தங்கள் என் இருதயத்திற்குள் ஒலித்துக்கொண்டே இருக்கட்டும். அவை எல்லாப் புத்திக்கும் மேலான உம்முடைய சமாதானத்தை எனக்கு தருவதாக. உம்முடைய பாடலும், நம்பிக்கையின் கீதமும் சந்தோஷமும் எனக்குள் ஒருபோதும் குறையாதிருக்கட்டும். வாழ்வின் எல்லா தருணங்களிலும் நீரே என் கீதமாகவும் பெலனாகவும் அடைக்கலமாகவும் விளங்குவீராக. என் விண்ணப்பமும் துதியும் உம்முடைய சித்தத்திற்கு இசைந்திருக்கும்படி என்னை உம்மண்டை கிட்டிச்சேர்க்கவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.