எனக்கு அருமையான தேவ பிள்ளையே, நம்முடைய ஆண்டவரும் இரட்சகருமாகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் உங்களை வாழ்த்துகிறேன். இன்றைக்கு, "என் மேன்மையைப் பெருகப்பண்ணி, என்னை மறுபடியும் தேற்றுவீர்" (சங்கீதம் 71:21) என்ற வசனத்தை தியானிப்போம். நம்முடைய தேவன், சகல ஆறுதல்களின் தேவனாயிருக்கிறார். அன்பானவர்களே, துக்கத்தினால் கண்ணீர் சிந்துகிறீர்களா? உங்கள் ஆத்துமாவே கண்ணீர் சிந்துவதாக உணர்கிறீர்களா? சில நாட்களுக்கு முன்னர், தேவ பிரசன்னத்தில் நான் ஜெபித்துக்கொண்டிருந்தபோது, 17 வயதில் மரித்துப்போன என் அன்பு மகள் ஏஞ்சலின் நினைவு வந்தது. அறையில் தனியாக இருந்த நான், மனமுடைந்துபோய், துக்கத்தின் மிகுதியினால் அழுதேன். ஆனால், அப்போது ஆண்டவரிடமிருந்து வந்த தெய்வீக ஆறுதல் என் உள்ளத்தை நிரப்பியது. பிறகு நான் தனிமையை உணரவில்லை. அவருடைய பிரசன்னம், விவரிக்க இயலாத சமாதானத்தினால் என்னை நிரப்பியது.

அவ்வாறே, ஆண்டவர் உங்களை தேற்றுவார். "கர்த்தர் என் மேய்ப்பராயிருக்கிறார்; நான் தாழ்ச்சியடையேன்" (சங்கீதம் 23:1) என்று தாவீது ராஜா அறிவிக்கிறான். 23ம் சங்கீதம் முழுவதுமே ஆண்டவர் தம் பிள்ளைகளை எப்படி தேற்றி, பராமரிக்கிறார் என்பதை விளக்குவதாகவே உள்ளது. அந்த அன்பான மேய்ப்பர் இப்போது உங்களுடன் இருக்கிறார். அவர் உங்கள் கண்ணீரைக் காண்கிறார்; உங்கள் கூப்பிடுதலுக்குச் செவிகொடுக்கிறார். "என் பிள்ளையே, உன்னை தேற்றுவதற்காக வந்தேன்," என்று சொல்லுகிறார். நானும் இழப்பின் பாதை வழியே கடந்துசென்றிருக்கிறேன். வயிற்றில் மூன்று மாத கருவாக இருந்த முதல் குழந்தையை இழந்தேன். பிறகு பிறந்த ஆண் குழந்தையை இழந்தேன். பல ஆண்டுகளுக்குப் பிறகு, 17 வயதான என் மகள் என்னிடமிருந்து எடுத்துக்கொள்ளப்பட்டாள். பிறகு, என் கணவர் எடுத்துக்கொள்ளப்பட்டார். ஒரு இழப்புக்கு பிறகு இன்னொரு இழப்பு. அய்யோ, நான் எப்படி அழுவேன்? என் இருதயம் துக்கத்தினால் வேதனைப்படுகிறது. ஆனாலும், எல்லா துயரத்தின் மத்தியிலும், தேவனுடைய ஆறுதல் என்னைவிட்டு விலகவில்லை. அவர் என்னை பெலப்படுத்தினார்; சுமந்தார்; வேதனையின் மத்தியிலும் ஊழியத்தை தொடரும்படி செய்தார். அவருடைய பிரசன்னமும் ஆசீர்வாதங்களும் எனக்கு தைரியமளித்தன.

அன்பானவர்களே, இன்றைக்கு அழுதுகொண்டிருக்கிறீர்களா? ஆண்டவர், "நானே சகல ஆறுதலின் தேவன். என் பிள்ளையே, என்னிடம் வா. நான் உன்னை தேற்றுவேன். உனக்கு தேவையான எல்லாவற்றையும் நீ நினைப்பதற்கும் வேண்டுவதற்கும் அதிகமாக நான் தருவேன். அழுவதை நிறுத்து. என்னை நம்பு," என்று கூறுகிறார். நாம் ஆண்டவருக்கு முன்பாக முழங்கால்படியிட்டு, நம் வாழ்க்கையை அவர் கரங்களில் ஒப்படைப்போம். அவர் செவிகொடுக்கிறவராக இருக்கிறபடியினால் உங்கள் இருதயத்தை அவரிடம் ஊற்றுங்கள். உங்களுக்கு தேவையானதை அவர் தருவார். நீங்கள் சுமக்கிற பாரத்தை அவர் அகற்றுவார். அவர் தேற்றுகிற, ஆசீர்வதிக்கிற, சீர்ப்படுத்துகிற தேவனாயிருக்கிறார்.

ஜெபம்:
அன்பு பரம தகப்பனே, உம்முடைய தேறுதலின் அரவணைப்பை நாடி உம்மிடம் வருகிறேன். நீரே சகல ஆறுதலின் தேவனாக, துயர நேரத்தில் அடைக்கலமாக இருக்கிறீர். என் கண்ணீரை துடையும்; உம்முடைய தெய்வீக சமாதானத்தினால் என் உள்ளத்தை நிரப்பிடும். நான் கைவிடப்பட்டதாக உணரும்வேளைகளில், நீர் என் பக்கமிருப்பதை நினைவுப்படுத்தும். என்னை அழுத்துகிற எல்லா பாரத்தையும் அகற்றி, சந்தோஷத்தை திரும்ப தந்தருளும். என்னை பெலப்படுத்தி, உம்முடைய பூரண திட்டத்தின்மேல் நான் நம்பிக்கை வைக்கும்படி செய்யும். உம்முடைய பிரசன்னம் என்னை சூழ்ந்துகொண்டு, என் ஆத்துமாவை குணப்படுத்தட்டும். நான் நினைப்பதற்கும் அதிகமாக என்னை ஆசீர்வதித்து, என் தேவைகள் எல்லாவற்றையும் சந்தியும். எந்த நிபந்தனையும் இல்லாமல், என்னை கைவிட்டுவிடாமல் அன்புகூருவதற்காக உமக்கு நன்றி செலுத்தி, இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.