அன்பானவர்களே, "நான் உங்களை ஜனங்களிலிருந்து புறப்படப்பண்ணி, நீங்கள் சிதறுண்டிருக்கிற தேசங்களிலிருந்து உங்களைச் சேர்த்துக்கொள்ளும்போது, சுகந்த வாசனையினிமித்தம் நான் உங்கள்பேரில் பிரியமாயிருப்பேன்; அப்பொழுது புறஜாதிகளின் கண்களுக்கு முன்பாக உங்களால் பரிசுத்தம்பண்ணப்படுவேன்" (எசேக்கியேல் 20:41) என்பதே இன்றைக்கான வாக்குத்தத்தமாயிருக்கிறது. இனிய நறுமணத்தை நாம் அனைவரும் விரும்புவோமல்லவா? அவ்வாறே, சுத்தமும் கீழ்ப்படிதலும் கொண்ட நம் இருதயங்களின்  சுகந்த வாசனையின்மேல் தேவன் பிரியமாயிருக்கிறார். ரோஜா பூவைப்போல் தேவன் நம்மை நேசிக்கிறார்; இயேசுவின் சுகந்தவாசனையான பலியின் மூலமே நாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம். நமக்குள் இருக்கும் இயேசு, தேவனுக்கேற்ற நறுமணத்தை அளிக்கிறார்; நாம் எவ்வளவு அதிகமாக தேவ பிரசன்னத்தை சுமந்துசெல்லவேண்டும் என்று அவர் கற்பிக்கிறார். இயேசு கிறிஸ்துவின் மூலமாகவே நாம் ஏற்றுக்கொள்ளப்படுகிறோம். ஆகவே, நாம் நம்மை பரிசுத்தமாக, தேவனுக்கு உகந்தவர்களாக, ஜீவபலியாக அளிக்கவேண்டும்.

பழைய ஏற்பாட்டில் தகனபலி, போஜனபலி, சமாதான பலி, பாவநிவாரண பலி, குற்றநிவாரண பலி உள்ளிட்ட பல்வேறு பலிகள் செலுத்தப்பட்டன. ஆனாலும் இவை எதுவும் ஜனங்களை பாவம் நீங்க சுத்திகரிக்கவில்லை. ஏனெனில், கிறிஸ்துவின் இரத்தத்திற்கு மாத்திரமே நம் அனைவருடைய பாவங்களையும் சுத்திகரிக்கும் வல்லமை உண்டு. ஆகவே, நாம் நம்மை தேவனுக்கேற்ற ஜீவபலியாக அர்ப்பணிப்போம். இந்த பொல்லாத உலகத்தில் வாழ்கிற நாம் எளிதாக சோதிக்கப்படக்கூடிய நிலையில், பிசாசின் தந்திரங்களோடும் நம்முடைய பாவ சுபாவத்தோடும் போராடிக்கொண்டிருக்கிறோம். ஆகவே, நம்மை பாதுகாக்கக்கூடிய தேவனிடம் நம்மை நாமே ஒப்படைக்கவேண்டும்.

"தேவனுக்குக் கீழ்ப்படிந்திருங்கள்; பிசாசுக்கு எதிர்த்து நில்லுங்கள், அப்பொழுது அவன் உங்களைவிட்டு ஓடிப்போவான்" (யாக்கோபு 4:7) என்று வேதம் கூறுகிறது. நம்மை எவ்வாறு தேவனுக்கு சமர்ப்பிக்கவேண்டும்? தேவனுடைய வசனத்தின்மேல் பிரியமாயிருந்து அவருக்குப் பயப்பட்டால் நம்மையே அவருக்கு சமர்ப்பிக்கலாம். "கர்த்தருக்குப் பயப்படுதல் அவருக்கு உகந்த வாசனையாயிருக்கும்" (ஏசாயா 11:3) என்று வேதம் கூறுகிறது. கர்த்தருக்குப் பயப்படுகிற பயம் நமக்குள் தேவன் முகரக்கூடிய நற்கந்தமாக இருக்கிறது. இவாஞ்சலின் என்னும் இளம்பெண் ஓர் அரசியல்வாதியை சந்திக்கும்படியாக சென்றாள். அவரை சந்திக்க பெருங்கூட்டமான ஜனங்கள் நின்றிருந்தார்கள். ஆனால், இந்த இளம்பெண் கையில் 'உங்களுக்காக ஜெபிக்கிறேன்' என்று எழுதப்பட்ட அட்டையை வைத்திருந்தாள். அந்த அரசியல்வாதி அதைப் பார்த்து மனதில் தொடப்பட்டார்; தன்னை சந்திக்க வரும்படி அவளை அழைத்தார். கூட்டத்தை கடந்து அவரிடம் வர இயலவில்லை என்று அவள் கூறினாள். அப்போது அவரே  வந்து அவளது கையைப் பிடித்துக்கொண்டார். தமக்காக ஜெபிப்பதற்காக அவளுக்கு நன்றி தெரிவித்தார். எல்லா முக்கிய பிரமுகர்கள் மத்தியிலும், தன்னை வந்து சந்தித்து ஜெபிக்கும்படி அவளை அழைத்தார். இன்றைக்கும் அந்தப் பெண் அந்த சம்பவத்தை நினைவுகூர்ந்து, அவ்வளவு பெரிய அரசியல்வாதி தன்னை ஏற்றுக்கொண்டதை குறித்து மகிழ்ச்சியாய் இருக்கிறாள்.

அவ்வாறே ஆண்டவர் உங்களை ஏற்றுக்கொள்கிறார். மகா தேவனான அவரால் நீங்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டிருக்கிறீர்கள். நீங்கள் தேவனுக்குக் கீழ்ப்படியும்போது, அவர் உங்களை ஏற்றுக்கொள்வார். தேவனிடம் இருக்கும் எல்லாமும் உங்களுடையதாகும். சிறந்த தேவ ஜனங்கள் மத்தியில் நீங்கள் இருப்பீர்கள். தேவனால் ஏற்றுக்கொள்ளப்படுவது எத்தனை சந்தோஷம்! நீங்கள் தேவனுக்கு சுகந்த வாசனையாக விளங்குவீர்களாக!

ஜெபம்:
அன்பின் பரம தகப்பனே, என்னை சுகந்த வாசனையாய் ஏற்றுக்கொள்வதாக வாக்குப்பண்ணுகிறதற்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னை உம்முடைய பார்வைக்கு பிரியமானவனா(ளா)கச் செய்த இயேசுவின் தியாகத்துக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். என்னை பரிசுத்தமும் உமக்கு உகந்ததுமான ஜீவபலியாக அர்ப்பணிக்க உதவி செய்யும். உம்முடைய வசனத்தின்மேல் பிரியமாயிருக்கவும், கர்த்தருக்குப் பயப்படுதல் உம்முடைய இருதயத்திற்குப் பிரியமாயிருக்கும் என்று அறிந்து அப்படி வாழவும் என்னை வழிநடத்தும். பிசாசின் தந்திரங்களிலிருந்து என்னை பாதுகாத்துக் கொள்ளும். சோதனையை எதிர்த்து நிற்க என்னை பெலப்படுத்தும். உம்முடைய பாதுகாப்பையும் கிருபையையும் நம்பி என்னை உம்மிடம் ஒப்படைக்கிறேன். என் வாழ்க்கை, எனக்குள் இருக்கும் இயேசுவின் பிரசன்னத்தை வெளிப்படுத்துவதாகவும், உமக்கு பிரியமான நற்கந்தமாகவும் இருப்பதாக. ஆண்டவரே, என்னை ஏற்றுக்கொள்வதற்காக உமக்கு நன்றி. இந்த நிச்சயத்துடன், உம்முடைய ஜனங்களுள் ஒருவனாக / ஒருத்தியாக, உம்முடைய நாமத்திற்கு மகிமையை கொண்டுவரும்வண்ணம் வாழ உதவி செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.