அன்பானவர்களே, சாமுவேல் தீர்க்கதரிசி ஒரு கல்லை எடுத்து அதை மிஸ்பாவுக்கும் சேணுக்கும் நடுவாக நிறுத்தி, அதற்கு எபெனேசர் என்று பேரிட்டதை வேதத்தில் வாசிக்கிறோம், அவன், "இம்மட்டும் கர்த்தர் எங்களுக்கு உதவிசெய்தார்" (1 சாமுவேல் 7:12) என்று கூறினான். புத்தாண்டின் வாயிலில் நிற்கும் நாமும், 'எபெனேசர்' என்று அறிக்கையிடுவோம். உண்மையாகவே ஆண்டவர் இதுவரை நமக்கு உதவி செய்திருக்கிறார். அவர் நமக்கு எபெனேசராக இருக்கிறார்.

இஸ்ரவேல் ஜனங்கள் மிகவும் இக்கட்டான ஒரு சூழ்நிலையில் இருந்தபோது சாமுவேல் ஒரு கல்லை நிறுத்தினான். அவன் இஸ்ரவேல் ஜனங்கள் அனைவரையும் ஒன்றாகக் கூடி வேண்டுதல் செய்வதற்காக அழைத்தான். அந்த தருணத்தில் அவர்களுடைய விரோதிகளான பெலிஸ்தர்கள், அவர்களை தாக்கும்படி மகா பெரிய சேனையாக வந்தார்கள். நாமும் ஆண்டவரை ஜெபத்தில் தேடுவதற்கு நம் இருதயத்தையும் சிந்தையையும் நேராக்கும்போது, அந்தகாரத்தின் வல்லமைகள், பொல்லாத ஜனங்கள், உபத்திரவங்கள் நமக்கு விரோதமாக எழும்புகின்றன அல்லவா? "நான் ஜெபிக்கும்போது ஏன் தாக்குதல்கள் நடக்கின்றன?" என்று நீங்கள் திகைக்கலாம். அன்பானவர்களே, அப்படிப்பட்ட சூழ்நிலைகளில்தான் தேவன், மகா பெரிய சத்துருவின் வல்லமையைக் காட்டிலும் தம்முடைய வல்லமை பெரிதாயிருக்கின்றதென்று வெளிப்படுத்துகிறார்.

ஜனங்கள் பயந்ததினால், "விரோதிகளிடமிருந்து நாங்கள் காக்கப்படும்படி எங்களுக்காக வேண்டிக்கொள்ளும், வேண்டிக்கொள்ளும்," என்று கூப்பிட்டார்கள். சாமுவேல், 'பயப்படாதிருங்கள்' என்று சொல்லி, பரிசுத்த ஆவியானவரை குறிக்கும்வண்ணம் தண்ணீரை ஊற்றி, ஆவியில் ஜெபித்தான். அநேகவேளைகளில் சத்துரு நமக்கு விரோதமாக வரும்போது, நாம் பெலவீனமாக உணருகிறோம்; ஜெபிக்க இயலாமல் இருக்கிறோம். ஆனால் தேவன், நமக்காக பெருமூச்சுகளோடு வேண்டுதல் செய்யும்படி கிருபையாக தம்முடைய பரிசுத்த ஆவியை கொடுக்கிறார் (ரோமர் 8:26). பின்னர் சாமுவேல் ஒரு ஆட்டுக்குட்டியை பலியிட்டு, அதன் இரத்தத்தை சிந்தினான். இன்றைக்கு, நமக்காக இயேசு கிறிஸ்துவின் விலையேறப் பெற்ற இரத்தம் சிந்தப்பட்டிருக்கிறது. இறுதியில் சாமுவேல், "கர்த்தாவே, நீரே எங்களுக்கு எபெனேசராக, எங்கள் கன்மலையாக, எங்கள் மூலைக்கல்லாக இருக்கிறீர்," என்று துதியின் அறிக்கையை ஏறெடுத்தான் (1 கொரிந்தியர் 10:4).

அவன் அவ்வாறு துதித்து வேண்டிக்கொண்டபோது, விரோதிகளுக்கு எதிராக தேவனுடைய வல்லமை பயங்கரமாக அசைவாடியது. பெலிஸ்தர்களால் இஸ்ரவேலின் எல்லைக்குள் நுழைய இயலவில்லை. அவர்கள் பட்டு விழுந்தார்கள். எதிரிகள் பிடித்திருந்த எல்லா பட்டணங்களையும் ஊர்களையும் இஸ்ரவேலர் மறுபடியும் சுதந்தரித்துக்கொண்டார்கள். தேவனுடைய வல்லமையானது யுத்தத்தை தம் ஜனங்களுக்கு சாதகமாக திருப்பியது. சாமுவேல், தன் கடைசி நாட்கள் மட்டும் தீர்க்கதரிசன அபிஷேகத்துடன் கர்த்தருக்கு ஊழியம் செய்தான். அதே ஜெயம் இன்றைக்கு உங்களுக்குக் கிடைக்கும். நாம் இணைந்து, "ஆண்டவரே, எங்கள் எபெனேசரே, நீர் எங்கள்மேல் இரக்கமாயிருந்தீர். எங்களுக்கு உதவி செய்தீர்," என்று சொல்லுவோம். நீங்கள் 2024ம் ஆண்டு கண்ட ஒரு எதிரியையும் புதிய ஆண்டில் காண மாட்டீர்கள். மாறாக, நீங்கள் இழந்த எல்லாவற்றையும் திருப்பிக் கொள்வீர்கள்; பரிசுத்த ஆவியானவரின் அபிஷேகம், உங்களுக்குள்ளும் உங்கள் மூலமாகவும் வல்லமையாக பாய்ந்து செல்லும். இந்த ஆண்டு, இதுவரை இல்லாதவண்ணம் தீர்க்கதரிசன வல்லமையும் சீர்ப்படுத்துதலும் விளங்கும் வருடமாக அமையும். இயேசுவின் நாமத்தில் உங்கள்மேலும் இந்த ஊழியத்தின்மேலும் இந்த ஆசீர்வாதத்தை உரைக்கிறேன், ஆமென்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, நன்றியுள்ள இருதயத்துடன் உம்மண்டை வருகிறேன். இந்த ஆண்டில் என் எபெனேசராக, உதவி செய்யும் கன்மலையாக இருந்து எல்லா உபத்திரவங்களின் வழியாகவும் என்னை சுமந்து செல்கிறதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்முடைய உண்மையும் இரக்கமும் மாறாதவையாயிருக்கிறபடியினால் உம்மை துதிக்கிறேன். ஆண்டவரே, சத்துரு எனக்கு விரோதமாக வரும்போது, என்னை காக்கும்படி நீர் என் அருகில் நின்று, எனக்கு ஜெயத்தை தந்தீர். நான் பெலவீனமாக இருந்தபோது, உம்முடைய பரிசுத்த ஆவியை ஊற்றி என்னை பெலப்படுத்தினீர்; உம்முடைய விலையேறப்பெற்ற இரத்தம் என்னை மூடி, மீட்டுக்கொண்டது. இன்றைக்கு, "ஆண்டவர், இம்மட்டும் எனக்கு உதவி செய்தார்," என்று அறிக்கையிடுகிறேன். பெரிதான ஆசீர்வாதங்களுள்ள புதிய ஆண்டுக்குள் என்னை நடத்திச் செல்கிறீர் என்று நம்புகிறேன். இழந்தவை எல்லாவற்றையும் திரும்ப தந்தருளும். உம்முடைய அபிஷேகத்தினால் என்னை நிறைத்தருளும். உம்முடைய வல்லமை என் மூலமாக பயங்கரமாக பாய்ந்து சென்று, உம்முடைய நாமத்திற்கு மகிமையை கொண்டு வரட்டும். உம்மில் நான் நிலைத்திருக்கும்படி என்னை வழிநடத்தவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.