அன்பானவர்களே, இன்றைக்கு நம் வாழ்வில் அற்புதங்களைச் செய்வதற்கு ஆண்டவர் ஆயத்தமாயிருக்கிறார். அவர் நமக்கென்று என்ன அதிசயத்தை செய்யப்போகிறார் என்பதை கண்டுகொள்ளப்போகிறோம். "நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவின் பிதாவாகிய தேவனுக்கு ஸ்தோத்திரம்; அவர் கிறிஸ்துவுக்குள் உன்னதங்களிலே ஆவிக்குரிய சகல ஆசீர்வாதத்தினாலும் நம்மை ஆசீர்வதித்திருக்கிறார்" (எபேசியர் 1:3) என்று வேதம் அருமையான வாக்குத்தத்தத்தை தருகிறது. ஆவிக்குரிய சகல ஆசீர்வாதமும் உங்களுக்கு அதிசயமாகக் கொடுக்கப்படும். அவ்வாறு மகத்தான ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை பெற்றுக்கொள்ள நீங்கள் ஆயத்தமாக இருக்கிறீர்களா? கிறிஸ்து இயேசுவுக்குள் இந்த ஆசீர்வாதங்கள் நமக்கானவை என்று இந்த வசனம் கூறுகிறது. இயேசுவை ஏற்றுக்கொள்கிறவர்களுக்கு இந்த தெய்வீக ஆசீர்வாதங்களும் கிடைக்கும்; தேவனுடைய பரிசுத்த ஆவியானவர் மூலமாக இவை நமக்கு வந்து சேருகின்றன.
இந்த ஆவிக்குரிய ஆசீர்வாதங்கள் எவை? முதலாவது ஆசீர்வாதம் இரட்சிப்பாகும். அது நம் ஆத்துமா மரிக்காமல் காப்பாற்றி, தேவனோடு நாம் ஒப்புரவாகும்படி செய்யும் அருமையான ஈவாகும். பரிசுத்த ஆவியின் வரங்களும் வல்லமையும் இரண்டாவது ஆசீர்வாதமாகும். ஆவியின் மகத்தான கிரியைகளை செய்துமுடிப்பதற்கு இந்த வரங்கள் நமக்கு அதிகாரத்தையும் பெலனையும் தருகின்றன. நித்திய ஜீவன் என்னும் ஈவு, மூன்றாவது ஆசீர்வாதமாகும். இவ்வுலகிலும் பரலோகத்திலும் தேவனுடைய சமுகத்தை நாம் அனுபவித்து, கர்த்தரின் சந்தோஷத்துடன் நித்திய காலம் வாழலாம் என்பதே இதன் அர்த்தமாகும். தேவன், இந்த இயற்கைக்கு அப்பாற்பட்ட ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை உங்கள்மேல் ஊற்றுவதால் அவரை ஸ்தோத்திரியுங்கள். உங்கள் இருதயத்தை திறந்து பரிசுத்த ஆவியானவரைப் பெற்றுக்கொள்ளுங்கள். இந்த ஈவுகள் உங்களுக்குள் வரும்படி அவர் செய்வார். அவற்றை அனுபவிக்கவும், பிறருடன் பகிர்ந்துகொள்ளவும் அவர் உங்களைப் பெலப்படுத்துவார்.
என் அனுபவம் ஒன்றை பகிர்ந்துகொள்ள விரும்புகிறேன். ஒருமுறை விடுமுறை காலத்தில் என் நண்பனுடன் நேரத்தைச் செலவழிக்கும்படி சென்றிருந்தேன். அவன், "சாம், இங்கே முதியவர் ஒருவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் இருக்கிறார். நீ வந்து அவருக்காக ஜெபிப்பாயா?" என்று கேட்டான். நான் இதை எதிர்பார்க்கவில்லை. ஆகவே, என்ன செய்வதென்று திகைத்தேன். ஆனாலும், ஆண்டவரை நம்பி, என் நண்பனுடன் சென்றேன். நான் அங்கே சென்றபோது, அந்த முதியவர், மிகுந்த வருத்தத்துடனும், கலக்கத்துடனும் காணப்பட்டார். தலை குனிந்து உட்கார்ந்திருந்தார். நான், "ஐயா, நான் உங்களுக்காக ஜெபிக்கிறேன்," என்று கூறினேன். நான் ஜெபிக்கத் தொடங்கியபோது, வித்தியாசமான காரியம் நடந்தது. வேறு யாருடைய கட்டுப்பாட்டிலோ சூழ்நிலை இருப்பதுபோல் தோன்றியது. தேவ ஆவியானவரே என்னை ஜெபத்தில் நடத்தினார். அவருடைய பக்கவாதத்தைக் குறித்து பேசாமல், "தேவன் உங்களை நினைத்துக்கொண்டிருக்கிறார். இயேசு உங்களை அதிகமாய் நேசிக்கிறார். அவர் உங்களை மறந்துபோகவில்லை. உங்கள் வாழ்வில் அவர் நன்மையான காரியங்களைச் செய்வார்," என்று கூறும்படி செய்தார். நான் இதே வார்த்தைகளை மறுபடியும் மறுபடியும் கூறிக்கொண்டே இருந்தேன். சுகத்திற்காக ஜெபிக்காமலே நான் பிரார்த்தனையை முடித்துவிட்டேன். ஜெபித்து முடித்தபோது, அவருடைய முகத்தில் கண்ணீர் வழிந்துகொண்டிருந்ததைக் கண்டேன். அவர் இயேசுவின் அன்பை உணர்ந்து அழுதுகொண்டிருந்தார். பரிசுத்த ஆவியானவர் இப்படியே செய்கிறார். பிறர் ஆவிக்குரிய ஆசீர்வாதங்களை பெறுவதற்கு உங்களை எப்படி பயன்படுத்துவது என்றும், அவற்றை நீங்கள் பெற்றுக்கொள்ளும்படி எப்படி வழிநடத்துவது என்றும் அவர் அறிந்திருக்கிறார். இன்றைக்கு இருதயத்தை திறந்து அவரைப் பெற்றுக்கொள்வீர்களா? உங்கள் வாழ்க்கையில் செயல்பட அவரை அனுமதியுங்கள்; அப்போது, இந்த பரலோக ஆசீர்வாதங்களை பரிபூரணமாக அனுபவிப்பீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, கிறிஸ்துவுக்குள்ளான சகல ஆவிக்குரிய ஆசீர்வாதங்களாலும் என்னை ஆசீர்வதிப்பதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என் ஆத்துமாவை காத்து, என்னை உம்மிடம் கிட்டிச்சேரச் செய்யும் இரட்சிப்பு என்னும் ஈவுக்காக உமக்கு நன்றி செலுத்துகிறேன். ஆண்டவரே, பரிசுத்த ஆவியின் வரங்களினாலும் வல்லமையினாலும் நிரப்பப்படும்படி வாஞ்சிக்கிறேன். உம்முடைய மகிமைக்கென்று பெரிய காரியங்களைச் செய்வதற்கான பெலனையும் அதிகாரத்தையும் எனக்கு அருளிச்செய்யும். நித்திய ஜீவனாகிய ஈவுக்காகவும், உம்முடைய சமுகத்தில் எப்போதும் வாழ்ந்திருக்கும் சிலாக்கியத்திற்காகவும் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இந்த தெய்வீக ஆசீர்வாதங்களை பரிபூரணமாகப் பெற்றுக்கொள்ளும்படி என் இருதயத்தை திறந்தருளும். இந்த ஆசீர்வாதங்களை மற்றவர்களுடன் பகிர்ந்து, உம்முடைய அன்பின் வாய்க்காலாக விளங்குவதற்கு எனக்கு உதவும். பரிசுத்த ஆவியானவரே, என் வாழ்வின்மேல் ஆளுகை செய்து, உம்முடைய சத்தியத்தில் என்னை வழிநடத்தும். உம்முடைய நாமம் மகிமைப்படும்படி, உம்முடைய அற்புதமான கிரியைகளை என் மூலம் விளங்கச் செய்யவேண்டுமென்று இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.