அன்பானவர்களே, "சிங்காசனத்தின்மேல் வீற்றிருந்தவர்: இதோ, நான் சகலத்தையும் புதிதாக்குகிறேன் என்றார். பின்னும், அவர்: இந்த வசனங்கள் சத்தியமும் உண்மையுமானவைகள், இவைகளை எழுது என்றார்" (வெளிப்படுத்தல் 21:5) என்பதே இன்றைக்கான தேவனுடைய வாக்குத்தத்தமாகும். இயேசு நம் வாழ்க்கைக்குள் வரும்போது, அவர் வாழ்வை உயிர்ப்பிப்பார். பழையவைகள் ஒழிந்துபோகும்; எல்லாம் புதிதாகும்.


கானாவூர் திருமணத்தில், எதிர்பாராமல் திராட்சரசம் குறைவுபட்டபோது, இயேசு தண்ணீரை திராட்சரசமாக மாற்றி, தம்முடைய முதலாவது அற்புதத்தை செய்தார். இது திருமணவீட்டார் சங்கடப்பட்டுவிடாமல் காப்பாற்றியதுடன், எங்கு குறைவும் வருத்தமும் காணப்படுகிறதோ அங்கு இயேசு புத்துயிரையும் மதுரத்தையும் அளிக்கிறார் என்ற ஆழமான சத்தியத்தையும் வெளிப்படுத்தியது. தேவைகளின் மத்தியில் இருக்கும்போது, இயேசுவை நோக்கிப் பார்த்தால் புதிய வழிகள் உண்டாகும். கானாவூரில் கிடைத்த புதிய திராட்சரசம் முந்தைய ரசத்தைவிட மதுரமாக இருந்ததுபோல, இயேசு நம் வாழ்க்கையில் எல்லாவற்றையும் புதிதாக்கி, தம்முடைய மதுரத்தினால் நிறைத்து மறுரூபமாக்குவார். கிறிஸ்துவுக்குள் நாம் புதுச்சிருஷ்டியாகிறோம் என்றும், அவருடைய மறுரூபமாக்குதலின் வல்லமையின் சாட்சிகளாக மாறுவோம் என்றும் வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது.

இயேசுவை நம் இருதயத்திற்குள்ளும் வீட்டுக்குள்ளும் அழைக்கும்போது, அவருடைய ஆசீர்வாதங்களையும், அவருடனான ஐக்கியத்தை புதுப்பிப்பதில் கிடைக்கும் சந்தோஷத்தையும் பெற்றுக்கொள்ள நம்மை திறந்துகொடுக்கிறோம். நமக்கு புதிய சந்தோஷத்தையும், அவருடன் ஆழமான உறவையும், புதிதான ஆரம்பங்களையும் அளிக்கும்படி விசுவாசத்துடன் ஜெபத்தில் கேட்போம். நம் வாழ்க்கையை அவரது பிரசன்னம் செழிப்பாக்கும். நம் குடும்பத்தை அவருடைய ஆசீர்வாதமும், நம் வீட்டினை அவருடைய தயவும் நிரப்பும்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, புதிய சந்தோஷத்தை பெற்றுக்கொள்ளவும், உம்மோடு ஆழமான ஐக்கியம் கொள்ளவும் விரும்பி இன்றைக்கு உம்மை என் இருதயத்திற்குள் வரும்படி அழைக்கிறேன். என் வாழ்க்கையை உம்முடைய ஆசீர்வாதங்களாலும் மதுரத்தினாலும் நிரப்பும். என்னை மறுரூபமாக்கும்; எல்லாவற்றையும் புதிதாக்கும். என் வாழ்க்கை முழுவதையும் உம்முடைய பிரசன்னத்தால் செழிப்பாக்கும். உத்தமமும் உண்மையுமான உம்முடைய வாக்குத்தத்தங்களுக்காக உமக்கு நன்றி செலுத்தி இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.