அன்பானவர்களே, நம்மோடு நேரடியாக பேசுவதற்கு தேவன் ஆயத்தமாக இருப்பதால் இன்றைக்கு நமக்கு நம்பிக்கை உண்டு. ஆகவே, "கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்; நீங்கள் சும்மாயிருப்பீர்கள்" (யாத்திராகமம் 14:14) என்ற இன்றைக்கான வசனத்தை ஏற்றுக்கொள்ளுங்கள். இது எவ்வளவு ஆச்சரியமான வாக்குத்தத்தம்!

உங்கள் வியாபாரத்தில் போட்டி காணப்படக்கூடும். மற்றவர்கள் உங்கள் வியாபாரத்தை கெடுப்பதற்கு அல்லது நஷ்டத்தினுள் தள்ளுவதற்கு முயற்சிக்கலாம். பல்வேறு தந்திரங்களால் உங்களை கீழே தள்ளி உங்கள் வேலையைப் பறித்துக்கொள்வதற்கு யாராவது முயற்சிக்கலாம். இது போன்ற சூழ்நிலையால் நீங்கள் வேதனையில் இருக்கலாம். விரோதிகளிடம் போரிடுவதோ, அவர்கள் கையாளும் முறைகளை பயன்படுத்தி பழிவாங்குவதோ நம் வேலையல்ல என்பதை மறந்துபோகாதிருங்கள். "நீங்கள் சும்மாயிருங்கள்; கர்த்தர் உங்களுக்காக யுத்தம்பண்ணுகிறார்" என்று இந்த வசனம் கூறுகிறது. அவர்களோடு நேரடியாக சண்டையிடுவதால் நமக்கு ஜெயம் கிடைப்பதில்லை; ஜெபத்தில் போராடுவதாலேயே ஜெயம் கிடைக்கும். இவ்வுலகில் சண்டையிடுவதற்கு மாறாக, "ஆண்டவரே, நீர் எனக்காக யுத்தம்பண்ணும்," என்று நாம் சொல்லவேண்டும். அன்பானவர்களே, முழங்காலில் நின்று யுத்தம்பண்ணுங்கள்.

நாங்கள் அப்படிச் செய்வதற்கு கற்றுக்கொண்டிருக்கிறோம். இயேசு அழைக்கிறார் அல்லது காருண்யா, எங்கு நாங்கள் யுத்தத்தை எதிர்கொள்ள நேர்ந்தாலும், ஆண்டவர் எழும்புகிறார்; எங்களுக்கு முன்னே செல்கிறார்; எங்களுக்கு முழு வெற்றியை தருகிறார். பழைய ஏற்பாட்டில், கர்த்தர் தம்முடைய சேனைக்காக, தம் ஜனங்களுக்காக யுத்தம் செய்து, எதிரிகள்  ஒருவரையொருவர் அழித்துப்போடுமட்டும் அவர்கள் மத்தியில் குழப்பத்தை உண்டாக்கினார். தேவன் அற்புதமான கிரியைகளை செய்கிறார்.

ஜெபிப்பதற்காக தன் மகளுடன் வந்த ஒரு தாயாரின் சாட்சி எனக்கு நினைவுக்கு வருகிறது. அந்த தாயார் என்னிடம், "என் கணவர் எங்களை விட்டுச் சென்றுவிட்டார். அவர் எங்கிருக்கிறார் என்பதே தெரியாது. என் மகளுக்கும் அவள் தந்தைக்கும் தொடர்பே இல்லை. அதற்காக ஜெபம்பண்ணுங்கள்," என்று கூறினார்கள். நான் அவர்களுடன் இணைந்து ஜெபித்தேன். அடுத்த மாதம், அவர்கள் கணவர் எங்கிருந்தோ அதிசயவிதமாய் வந்து சேர்ந்து, "உங்களோடு வாழ விரும்புகிறேன்," என்று கூறினார். அவர்கள் ஜெபத்தில் யுத்தம் செய்ததால், கர்த்தர் அவர்களுக்காக யுத்தம்பண்ணினார். இன்றைக்கு நீங்களும் ஜெபித்து அற்புதத்தை பெற்றுக்கொள்ளுங்கள். ஆண்டவர் உங்களுக்காக யுத்தம்பண்ணுவார்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இன்றைக்கு உம் முன்னே வந்து, என்னுடைய பாரங்கள் எல்லாவற்றையும் உம் பாதத்தில் வைக்கிறேன். எனக்காக நீர் யுத்தம் செய்து, எனக்கு வெற்றியை தருவதாக அளித்திருக்கும் ஆச்சரியமான வாக்குத்தத்தத்திற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். உம்மை முழுவதுமாக நம்பி, நீர் எனக்காக கிரியை செய்கிறீர் என்பதை அறிந்து, விசுவாசத்தில் அமைதியாக தரித்து நிற்க உதவி செய்யும். எவ்விதத்தில் இக்கட்டு நேர்ந்தாலும், பயமும் மற்றவர்களின் தந்திரமும் என்னை பட்சிக்காதபடி காத்துக்கொள்ளும். முழங்காலில் நின்று யுத்தம்பண்ணி, உம்மிடம் ஜெபித்து, எல்லாவற்றையும் உம்மிடம் ஒப்படைப்பதற்கு எனக்கு நினைவுறுத்தும். வேதாகமத்தில், நீர் உம்முடைய ஜனங்களுக்காக யுத்தம்பண்ணியதுபோல, இப்போது எனக்காகவும் யுத்தம்பண்ணுவீர் என்று விசுவாசிக்கிறேன். ஆண்டவரே, என் எதிரிகளை தோற்கடியும்; நொறுங்கிப்போய் காணப்படும் சூழ்நிலையில் உம்முடைய சமாதானம் விளங்கும்படி செய்து, அதைச் சீர்ப்படுத்தும். இயேசுவே உம்மை நம்புகிறேன். என்னை தற்காத்துக்கொள்கிறவராக விளங்குவதற்காக உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.