எனக்கு அன்பான தேவ பிள்ளையே, இன்றைக்கு உங்களை மனமார வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன்; உங்களுக்காக தேவனை ஸ்தோத்திரிக்கிறேன். "தேவனுடைய சகல பரிபூரணத்தாலும் நிறையப்படவும்" (எபேசியர் 3:19) என்று வேதம் கூறுகிறது. இது எவ்வளவு விசேஷித்த ஆசீர்வாதமாயிருக்கிறது. அன்பானவர்களே, அதிகமான சவால்கள் உங்களை எதிர்கொள்ளலாம்; இவ்வுலகின் கவலைகள் உங்கள் இருதயத்தில் பெரும் பாரமாயிருக்கலாம். சமாதானத்தை, சந்தோஷத்தை, ஆசீர்வாதங்களை இழந்துவிட்டதுபோல் நீங்கள் உணரலாம். ஆனால், இப்போது இந்த வல்லமையான வாக்குத்தத்தத்தை அறிக்கையிட்டு கேளுங்கள். அப்போது, நீங்கள் தேவனுடைய பூரணத்தினால் நிரப்பப்படுவீர்கள்.

தேவனுடைய பூரணத்தினால் நிரம்புகிற ஆசீர்வாதத்தை யார் பெற்றுக்கொள்ள முடியும்? "உண்மையுள்ள மனுஷன் பரிபூரண ஆசீர்வாதங்களைப் பெறுவான்" (நீதிமொழிகள் 28:20) என்று வேதம் வழிகாட்டுகிறது. உங்கள் வாழ்க்கையில் தேவனால் பெரிய அற்புதங்களைச் செய்ய முடியும் என்று நீங்கள் விசுவாசிக்கவேண்டும். "எப்படி ஓர் அற்புதம் நடப்பது சாத்தியமாகும்? நம்பிக்கையற்ற சூழ்நிலையில் இருக்கிறேன். வேலையை இழந்துவிட்டேன். நான் இருக்கும் சூழ்நிலையில் யாராலும் எனக்கு உதவி செய்ய இயலாது," என்று கூறும்படி, சந்தேகம் உங்களுக்குள் எழும்புவதற்கு இடங்கொடாதிருங்கள். ஆண்டவர் அற்புதங்களைச் செய்கிறவர். அவரால் உங்களுக்கு எல்லா காரியங்களிலும் உதவி செய்ய முடியும் என்பதை மறந்துபோகாதிருங்கள்.

உபத்திரவங்களின் மத்தியிலும் நாம் சந்தோஷமாய் இருக்கமுடியும் என்பதை அப்போஸ்தலனாகிய பவுல், "எங்களுக்கு உண்டான சகல உபத்திரவத்திலேயும் பரிபூரண சந்தோஷமாயிருக்கிறேன்" (2 கொரிந்தியர் 7:4) என்று கூறுகிறான். நீங்கள் இக்கட்டுகளின் வழியாக கடந்துசெல்ல நேரிட்டாலும், மற்றவர்கள் உங்களுக்குத் தீங்கு செய்யவோ, உங்கள் ஊழியத்தை தடுக்கவோ முயற்சித்தாலும் தேவன்மேல் நம்பிக்கையாயிருங்கள். ஆண்டவர் உங்களோடு இருக்கும்போது, அவருடைய பரிபூரணத்தினால் நீங்கள் நிரப்பப்படுவீர்கள்; அப்போது, உபத்திரவங்களின் மத்தியிலும் சந்தோஷத்தை காண முடியும். "பரிசுத்தமாகுதலை தேவபயத்தோடே பூரணப்படுத்தக்கடவோம்" என்றும் வேதம் கூறுகிறது (2 கொரிந்தியர் 7:1).

அன்பானவர்களே, பரிசுத்தத்தில் நடப்பது அதிக முக்கியமாயிருக்கிறது. நம்முடைய தேவன் பரிசுத்தர். அவருடைய வழிகளில் நடந்தால் மாத்திரமே நம் வாழ்க்கை, அவருடைய பரிசுத்தத்தை காட்டுவதாக அமையும். உங்கள் வாழ்க்கையை சீர்தூக்கிப் பாருங்கள். உங்கள் வார்த்தைகள் தேவனுடைய பரிசுத்தத்தை காட்டுகின்றனவா? உங்கள் சிந்தனை சுத்தமும் பரிசுத்தமானதுமான காரியங்களை யோசிக்கிறதா? வெளிப்புறமாக நீங்கள் நன்றாக தோற்றமளிக்கலாம்; ஆனால், உங்கள் இருதயம் எப்படி இருக்கிறது? தேவனுக்கு முன்பாக அது சுத்தமாயிருக்கிறதா?

நீங்கள் பரிசுத்தமாய் இருக்கும்போது தேவன் உங்கள் தேவைகள் அனைத்தையும் நேர்த்தியானவிதத்தில் சந்திப்பார். "நன்மையான எந்த ஈவும் பூரணமான எந்த வரமும் பரத்திலிருந்துண்டாகி, சோதிகளின் பிதாவினிடத்திலிருந்து இறங்கிவருகிறது" (யாக்கோபு 1:17) என்று வேதம் நமக்கு நினைவுப்படுத்துகிறது. நீங்கள் பரிசுத்தமாய் வாழும்போது, தேவன் தாமே உங்கள் குறைவுகள் எல்லாவற்றையும் நிறைவாக்கி, உங்கள் வாழ்வில் அவரது பூரண ஆசீர்வாதங்களை பொழிந்தருளுவார். ஆண்டவர் அருளும் இந்த வாக்குத்தத்தத்தை விசுவாசித்து, நம் வாழ்வில் அவரது ஆசீர்வாதங்கள் விளங்கும்படி கேட்டுப் பெற்றுக்கொள்வோம்.

ஜெபம்:
பரம தகப்பனே, தாழ்மையுள்ள இருதயத்தோடு உம் முன்னே வந்து, என்னை பரிசுத்தவானாகவும் உம்முடைய பார்வையின் நீதிமானாகவும் மாற்றக்கூடிய கிருபையை அருளுமாறு கேட்கிறேன். உம்முடைய வழிகளில் நான் நடப்பதை தடுக்கும் எல்லா காரியங்களையும் சுத்திகரித்தருளும். என் ஆவியில், சிந்தையில், ஜீவனில் நான் ஒன்றும் குறைவுபடாதவண்ணம் என்னை உம்முடைய பரிபூரணத்தினால் நிறைத்தருளும். உம்முடைய நீதி என்னை வழிநடத்தட்டும்; என் எண்ணங்களையும் செயல்களையும் உம்முடைய பரிசுத்தம் சீர்ப்படுத்தட்டும். உம்முடைய அன்பும் சத்தியமும் என்னில் வெளிப்படும்படி உம்முடைய பிரசன்னத்தால் என் இருதயம் நிரம்பி வழியட்டும். எல்லாவிதத்திலும் உமக்கு பிரியமானபடி வாழ்வதற்கு என்னை பெலப்படுத்தும். உம்முடைய அருட்கொடையிலும் பரிபூரண கிருபையிலும் நம்பிக்கை கொண்டு இயேசுவின் மூலம் ஜெபிக்கிறேன், ஆமென்.