அன்பானவர்களே, இன்று காலை உங்களை வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். இன்றைக்கு, "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" (பிலிப்பியர் 4:13)என்ற வசனத்தை தியானிப்போம். ஆம், அன்பானவர்களே, நான் தேர்வு எழுதச் செல்லும் முன்னர் என் அம்மா எப்போதும் இந்த வசனத்தை எனக்குக் கற்றுக்கொடுப்பார்கள். அவர்கள் என்னுடன் அமர்ந்து, படிப்பதற்கு வழிகாட்டி, என்னை தேர்வுக்கு நன்றாக ஆயத்தப்படுத்தி, பாடங்களை மனப்பாடம் செய்ய உதவுவார்கள். ஆனாலும், தேர்வுக்கு முன்பாக பயம் என்னைப் பிடிக்கும். ஏதாவது மறந்துபோனால் என்ன செய்வது? இந்தப் பாடத்தில் தேர்ச்சியடையாவிட்டால் என்ன செய்வது? நான் சரியாக விடை எழுதாவிட்டால் என்ன செய்வது? இந்தக் கவலைகள் எல்லாவற்றையும் என் அம்மாவிடம் சொல்லுவேன்.
ஆனால், அவர்கள், "நீ நன்றாக படித்திருக்கிறாய். நன்றாக ஆயத்தம் பண்ணியிருக்கிறாய். 'என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு' என்று மட்டும் சொல்லு. நீ தேர்வை எழுதத் தொடங்கும் முன்னரும் இதை மனதுக்குள் சொல்லிக்கொள். ஆண்டவர் உனக்கு பெலனை தருவார்," என்று கூறுவார்கள். உண்மையாகவே, நான் பரீட்சை எழுத உட்காரும்போது, சமாதானமாக உணருவேன். நான் படித்த எல்லாமும் நினைவுக்கு வரும்படி தேவன் உதவுவார்; நல்ல மதிப்பெண்கள் வாங்கும்படி செய்வார்.
ஃப்ரண்ட், தேர்வை குறித்து நீங்களும் பயப்படுகிறீர்களா? நன்றாக முயற்சி செய்து, ஆயத்தம் செய்தாலும், மனம் பாரமாக இருக்கிறதா? பயப்படாதிருங்கள். "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" என்று மனதுக்குள் கூறிக்கொண்டே இருங்கள்.
என் பெற்றோர் ஊழியம் செய்யும்படி வெளியூர் சென்றிருந்த நாட்களில், நான் தேர்வு எழுதச் செல்வதாக இருந்தால், ஜெப கோபுரத்தை தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு ஜெபித்து சென்றது நினைவிருக்கிறது. அவர்கள் எனக்காக ஊக்கமாக ஜெபித்து, "என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையுஞ்செய்ய எனக்குப் பெலனுண்டு" என்று சொல்லிக்கொண்டிருக்கும்படி கூறுவார்கள். அந்த வார்த்தைகள் திடநம்பிக்கையை தரும்; தேர்வை எதிர்கொள்வதற்கான தைரியத்தை அளிக்கும். ஃப்ரண்ட், இந்த வல்லமையான சத்தியத்தை தொடர்ந்து அறிக்கையிட்டுக்கொண்டே இருங்கள். எந்த சவால் வந்தாலும், அதை திடநம்பிக்கையோடு எதிர்கொள்ள தேவையான பெலனை தேவனிடமிருந்து பெற்றுக்கொள்வீர்கள்.
ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, வாக்குத்தத்தத்தை தந்து என்னை தைரியப்படுத்துகிறபடியினால் உம்மை ஸ்தோத்திரிக்கிறேன். என்னைப் பெலப்படுத்துகிற கிறிஸ்துவினாலே எல்லாவற்றையும் என்னால் செய்ய முடியும் என்ற நிச்சயத்தை தந்திருக்கிறீர். ஆண்டவரே, எல்லா பயத்தையும் கலக்கத்தையும் என் இருதயத்தை அழுத்தும் எல்லா பாரங்களையும் உம் முன்னே கொண்டு வருகிறேன். நான் திகைக்கின்றவேளையில், உம்முடைய பெலனை நம்புவதற்கு நான் மறந்துபோகாமலிருக்கும்படி செய்யும். நான் சவால்களை சந்திக்கும்போது, இந்த சத்தியத்தை திடநம்பிக்கையுடன் அறிக்கையிட உதவும். ஆண்டவரே, உம்முடைய சமாதானத்தினால் என்னை நிரப்பும்; எனக்குத் தேவையான ஞானத்தையும் தெளிவையும் தந்தருளும். நீரே எனக்கு பெலனாகவும் சகாயராகவும் வழிகாட்டியாகவும் இருக்கிறீர் என்பதை அறிந்து விசுவாசத்தில் நடக்கும்படி செய்யும். உம்மைக்கொண்டு எல்லாவற்றையும் சாதித்து வெற்றியடைவேன் என்று அறிக்கையிட்டு இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.