அன்பானவர்களே, உங்கள் வாழ்த்துகிறதில் மகிழ்ச்சியடைகிறேன். "எல்லாக் காவலோடும் உன் இருதயத்தைக் காத்துக்கொள், அதினிடத்தினின்று ஜீவஊற்று புறப்படும்" (நீதிமொழிகள் 4:23) என்ற வசனத்தை இன்றைக்கு தியானிப்போம்.  நம்முடைய இருதயங்களிலிருந்தே எல்லாம் பாய்ந்துவருவதால், அதைக் காத்துக்கொள்வது முக்கியம்.

நம் இருதயங்களிலிருந்து ஜீவன் ஊற்றாக புறப்படுகிறது. தம் தோட்டத்தை பண்படுத்தும் தோட்டக்காரர், எல்லாவித மலர்ச்செடிகளையும் நாட்டுகிறார். காலம் செல்லும்போது, மலர்ச்செடிகள் வளர்வதற்கு களைகள் இடையூறாக இல்லாமல் பார்த்துக்கொள்கிறார். களைகள் வளர்வதை அவர் காணும்போதே, வேரோடு அதைப் பிடுங்கி எறிகிறார். அவற்றை மேல்மட்டத்தில் அவர் வெட்டுவதில்லை; மலர்களை மாத்திரம் வெட்டுவதில்லை; மாறாக, களைகள் மறுபடியும் வளர்ந்திடாதபடி, வேரோடு அவற்றைப் பிடுங்குகிறார். மலர்ச்செடிகளுக்கு தேவையான ஊட்டச்சத்துகளை களைகள் எடுத்துக்கொள்ளாதபடி, அவற்றைப் பிடுங்கி, மலர்ச்செடிகள் நன்கு வளர்ந்து அழகாக மலர உதவுகிறார். அவ்வண்ணமே, தினமும் நம் இருதயம் பல்வேறு காரியங்களை கடந்து வருகிறது. நல்லவற்றையும் தீயவற்றையும் நாம் காண்கிறோம். வளர வேண்டிய மலர்ச்செடிகளும், அகற்றப்படவேண்டிய களைகளும் உண்டு. ஆனால், மலர்ச்செடிகள் தொடர்ந்து வளரும்படி நாம் கண்காணிக்கவேண்டும். நாம் கேட்கும் கெட்ட வார்த்தைகள், நம் வாழ்வில் ஏற்படும் எதிர்மறை தாக்கங்கள், நமக்குள் வளர்வதற்கு நாம் அனுமதிக்கும் எண்ணங்கள் ஆகியவை நம் இருதயத்தினுள் மலர்ச்செடிகள் வளர்வதை ஒருபோதும் தடுக்கக்கூடாது. சுத்தமும் பரிசுத்தமுமான காரியங்கள் நம் இருதயத்திற்குள் வளரும்படி நற்குணங்கள், நல்ல தகுதிகள், எண்ணங்கள் ஆகியவற்றை நாம் வளர்த்துக்கொள்ளவேண்டும். ஆகவே, நாம் நம் இருதயங்களில் வளரும் பெருமை, பொறாமை, பழிவாங்குதல், அசுத்தம் உள்ளிட்ட தேவனுக்குப் பிரியமில்லாத காரியங்களான எல்லா களைகளையும் பிடுங்கிவிட வேண்டும். தேவனுடனான நம்முடைய ஐக்கியத்திலிருந்து விலகிப் போகச் செய்யும் எல்லாவற்றையும் நம் இருதயத்திலிருந்து அகற்றவேண்டும்.

"இருதயத்தின் நிறைவினால் வாய் பேசும்," என்று வேதம் கூறுகிறது. சிலர் கோபப்பட்டால், நெடுங்காலமாக தங்கள் இருதயத்தினுள் வைத்திருந்த எல்லாவற்றையும் வெளிப்படுத்திவிடுவார்கள். கோபப்படும் தருணமே அதுபோன்ற நபர்களின் உண்மையான தோற்றம் வெளிப்படுவது என்று சிலர் நம்புகிறார்கள். அதுபோன்ற தருணங்களில், நம் இருதயத்தில் உள்ள நல்ல நோக்கங்களை, நல்ல வார்த்தைகளை, நல்ல தகுதிகளை காண்பிக்கவேண்டியது முக்கியம். நம் இருதயங்கள் நன்மையினால், இயேசுவின் குணாதிசயத்தால், நல்ல எண்ணங்களால், நல்ல வார்த்தைகளினால் நிறைந்திருக்கிறது என்ற நிச்சயம் நமக்கு இருக்கவேண்டும். மிகவும் முக்கியமாக தேவ ஆவியானவர் நம் இருதயங்களில் இருக்கவேண்டும். ஆகவே, இன்றைக்கு உங்கள் இருதயத்தை சீர்தூக்கிப் பார்த்து, தேவனுக்கு பிரியமில்லாத எல்லாவற்றையும், தோட்டத்திலிருந்து களைகளை அகற்றுவதுபோல அகற்றிவிடுங்கள். உங்கள் இருதயம் அழகிய பூந்தோட்டமாகும்படி அதில் நன்மை விளைவதற்கு உதவி செய்ய ஆண்டவரிடம் கேளுங்கள்.

ஜெபம்:
அன்புள்ள ஆண்டவரே, இன்றைக்கு என் இருதயத்தை நீர் ஆண்டுகொள்ளவேண்டுமென்று கேட்கிறேன். என் இருதயத்திலுள்ள களைகளை நான் வேரோடு பிடுங்கிப்போடும்படி, அவற்றை எனக்கு காண்பியும். என் இருதயத்தினுள் நீர் நாட்டியிருக்கிற நன்மையான காரியங்கள் வளர்ந்து அழகாக மலர்வதற்கு ஏதுவுண்டாகும்படி, இச்சை, பெருமை, பொறாமை, பேராசை உள்ளிட்ட எல்லா அசுத்தமான காரியங்களையும் நான் பிடுங்கிப்போடுவதற்கு உதவும். என் இருதயத்தினுள் உம்முடைய ஆவியை காத்துக்கொள்ளவும், என் எண்ணங்களும் நோக்கங்களும் உமக்கு முன்பாக சுத்தமானவையாயிருக்கும்படி காத்துக்கொள்ளவும் எனக்கு உதவும். என்னுடைய எல்லா வார்த்தைகளும் செயல்களும் உம்முடைய குணாதிசயங்களையும் மேலான தகுதிகளையும் காண்பித்து, ஜீவனை கொண்டு வருகிறவையாக இருக்கட்டும். ஆண்டவரே, என் இருதயத்தில் நீர் கிரியை செய்து உம்முடைய பரிசுத்த ஆவியானவரையும், உம்முடைய நற்குணங்களையும் வைப்பதற்காக உம்மை ஸ்தோத்திரித்து இயேசுவின் நாமத்தில் ஜெபிக்கிறேன், ஆமென்.